பொடி ஹமுதுருவோ என அழைக்கப்பட்ட சங்கைக்குரிய கலபொட ஞானிஸ்ஸர தேரரின் ஆலோசனையின் பேரில் அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாசவின் தலையீட்டில் ஆரம்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நவம் மஹா பெரஹெர 45 ஆவது தடவையாகவும் மிகவும் பிரமாண்டமான முறையில் அரச, அரச சார்பற்ற மற்றும் சிவில் சமூகத்தினரின் பங்களிப்புடன் இம்முறையும் வெற்றிகரமாக நடத்தப்படுகின்றது.
இவ்வாறான பெரஹர உற்சவங்கள் ஊடாக, இந்த உன்னத சமயச் செயற்பாட்டின் மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் அமைதியும், வளமும், செழிப்பும் ஏற்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பும் விருப்பும், நம்பிக்கையும் ஆகும்.
மக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலும், சம்புத்த சாசனத்தின் முன்னேற்றத்திற்காகவும், அது நிலைத்திருக்கவும் பெரஹெர கலாச்சாரம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
இந்த பெரஹர கலாச்சாரத்தின் மூலம் எடுத்தியம்பப்படும் தர்ம போதனை சகோதரத்துவம், நல்லிணக்கம், அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றை அனைவருக்கும் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.
அனைத்து இனங்கள், மதங்கள் மற்றும் சமூகங்களையும் சேர்ந்த மக்களிடையே நட்பையும் ஒற்றுமையையும் வியாபிக்கச் செய்து, எமது நாடு நீதியும், நற்பண்புகளும் நிறைந்த சமுதாயத்தைக் கொண்ட உன்னத நாடாக கட்டியெழுப்பப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கங்காராம விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரரின் அழைப்பின் பேரில், 45 ஆவது தடவையாகவும் இன்று (12) வீதி உலா வந்த கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் நவம் மஹா பெரஹெர உற்சவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்த பெரஹர தேசிய ரீதியில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் முன்னெடுப்பதற்கு தலைமைத்துவம் வழங்கிய கங்கராம அஸ்ஸஜி நாயக்க தேரர் உட்பட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
சம்புத்த சாசனம் பிரகாசிப்பது போன்றே ஏனைய மதத்தினருக்கும் உரிய உரிமைகளை வழங்கும் இறையச்சமும் நற்குணமும் கொண்ட புனித தாய்நாடு உதயமாக இத்தருணத்தில் பிரார்த்திக்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.