இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாதுகாப்பு, வலுசக்தி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகள் தொடர்பான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று (5) காலை ஜனாதிபதி செயலகத்தில் கையெழுத்தானது.
இலங்கைக்கு உத்தியோகபூர் விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு விழா இன்று காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
பின்னர் இந்தியப் பிரதமர், ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றதுடன், அங்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரதமர் மோடியை சிறப்பாக வரவேற்றார்.
பின்னர், இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதும், இந்திய-இலங்கை கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பும் இடம்பெற்றது.
இதன்போது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) பரிமாறிக் கொள்ளப்பட்டன.
தொடர்ந்து, இந்திய ஒத்துழைப்புடன் சம்பூர் சூரிய மின் நிலையத் திட்டத்தின் முதல் கட்டத்தை இரு நாட்டுத் தலைவர்களும் இணையவழியாகத் தொடங்கி வைத்தனர்.
அதேநேரம், நாட்டில் உள்ள 5,000 மதத் தலங்களின் கூரைகளில் நிறுவப்படும் சூரிய ஔி மின் திட்டத்தையும் இரு நாட்டு தலைவர்கள் இணையவழியாகத் தொடங்கி வைத்தனர்.
அத்துடன் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்த தம்புள்ளையில் கட்டப்பட்ட குளிர் சேமிப்பு வசதிகளுடன் கூடிய விவசாய சேமிப்பு வளாகத்தையும் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் திறந்து வைத்தனர்.
இதற்கிடையில், இலங்கையில் இந்தியக் கடனை மறுசீரமைப்பது தொடர்பான ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளின் தலைவர்களும் கூட்டு ஊடக சந்திப்பை நடத்தினர்.
இதற்கிடையில், வெளிநாட்டுத் தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘மித்ர விபூஷண’ விருதை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்தியப் பிரதமருக்கு வழங்கி கௌரவித்தார்