அரசியல்உள்நாடு

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம் – அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படவில்லை – சாகர காரியவசம்

இந்தியாவுடானான எட்கா ஒப்பந்தம் விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படவில்லை. எட்கா ஒப்பந்தத்தால் ஏற்படும் விளைவுகளை எதிர்வரும் நாட்களில் மக்களுக்கு எடுத்துரைப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்களுடன் பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொதுஜன பெரமுனவை பலப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். கட்சியின் முக்கிய பதவிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் பிரதான அரசியல் கட்சியாக எழுச்சிப் பெறும்.

நாட்டு மக்களை தவறாக வழிநடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்ட பொய் இன்று அரசாங்கத்துக்கே வினையாக மாறியுள்ளது.

வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அத்துடன் ராஜபக்ஷர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சட்டத்தின் முன் ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தங்கள் குறித்து அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை.

குறிப்பாக எட்கா ஒப்பந்தத்தை குறிப்பிட வேண்டும். குறுகிய அரசியல் மாற்றத்துக்காக அடிக்கடி கொள்கைகளை மாற்றிக் கொள்வது முறையற்றதாகும்.

நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களில் ஒருபோதும் கைச்சாத்திட போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம். 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்தோம்.

ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்தியாவுக்கு சாதகமாக செயற்படவுமில்லை, எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவுமில்லை.

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திட்டால் ஏற்படும் விளைவுகளை எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்களுக்கு எடுத்துரைப்போம். நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்கள் மற்றும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

உயர்தரம் – புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு

எரிபொருள் நெருக்கடியில் வீழ்ந்தது மரக்கறிகளின் விலை

சைபர் தாக்குதல் – அச்சுத் திணைக்களத்தின் இணையத்தளமும், பொலிஸாரின் யூடியூப் சேனலும் மீட்டெடுக்கப்பட்டது

editor