உலகம்

இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்ற திட்டம்!

(UTV | கொழும்பு) –

புதுடெல்லி: இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜி20 நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் சார்பில் அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழை சுட்டிக்காட்டி காங்கிரஸ் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. வரும் 18-ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஜி20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. இதையொட்டி, டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு வரும் 9, 10-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. ஜி20 அமைப்பின் 20 உறுப்பு நாடுகள் உட்பட 40 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர்.

அழைப்பிதழால் சர்ச்சை: இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ள தலைவர்களுக்கு இரவுவிருந்து வழங்குவதற்கான அழைப்பிதழ் குடியரசுத் தலைவர் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கமாக ‘இந்திய குடியரசுத் தலைவர்’ என்று இருப்பதற்கு பதிலாக, இந்த அழைப்பிதழில் ‘பாரத் குடியரசுத் தலைவர்’ (பிரெசிடென்ட் ஆஃப் பாரத்) என இடம்பெற்றுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: இந்த செய்தி உண்மைதான். செப்.9-ம் தேதி இரவு விருந்துக்காக ஜி20 தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அலுவலகம் அனுப்பியுள்ள அழைப்பிதழில் ‘இந்திய குடியரசுத் தலைவர்’ என்பதற்கு பதிலாக, ‘பாரத் குடியரசுத் தலைவர்’ என இடம்பெற்றுள்ளது. இப்போது அரசியல் சாசனத்தின் 1-வது பிரிவில், ‘பாரத், அதாவது இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இப்போது மாநிலங்களின் ஒன்றியம் என்பதுகூட தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், ‘அரசியல் சாசனப்படி இந்தியாவை பாரத் என அழைக்க ஆட்சேபம் இல்லை. ஆனாலும், கணக்கிட முடியாத பிராண்ட் மதிப்பு கொண்ட ‘இந்தியா’ என்ற பெயரை முழுமையாக கைவிடும் முட்டாள்தனமான முடிவை மத்திய அரசு எடுக்காது என நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் கூறும்போது, “நாங்கள் இண்டியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளதால்தான் மத்திய அரசு இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இந்த நாடு 140 கோடி மக்களுக்கானது. ஒரு கட்சிக்கு மட்டுமானது அல்ல. இண்டியா கூட்டணியின் பெயரை நாங்கள் பாரத் என மாற்றினால், பாரத் என்ற பெயரையும் மாற்றி விடுவார்களா” என்றார்.

இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில், ‘நாட்டை பெருமைப்படுத்துவது, கவுரவப்படுத்துவது தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கைக்கும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? ‘பாரத் ஜோடோ’ என்ற பெயரில் அரசியல் யாத்திரை மேற்கொண்டவர்கள், ‘பாரத மாதாவுக்கு ஜே’ என்ற கோஷத்தை மட்டும் வெறுப்பது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறும்போது, ‘‘எல்லாவற்றுக்கும் அவர்கள் பிரச்சினை செய்கின்றனர். நான் பாரதவாசி. என் நாட்டின் பெயர் பாரத். அது எப்போதும் பாரத் ஆகவே இருக்கும். இதில் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சினை இருந்தால் அவர்கள் அதற்கு தீர்வு காண வேண்டும்’’ என்றார்.

அடிமைத்தனத்தை குறிக்கும் பெயர்: இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என்று பாஜக நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறது. குஜராத் மாநிலம் ஆனந்த் தொகுதி பாஜக உறுப்பினரான மிதேஷ் படேல், மக்களவையில் கடந்த 2022 டிசம்பர் மாதம் பேசும்போது, ‘‘இந்தியா என்பது பிரிட்டனை சேர்ந்த கிழக்கிந்திய கம்பெனி வைத்த பெயர். இந்த பெயர் அடிமைத்தனத்தை குறிப்பதாக உள்ளது. எனவே, இந்தியாவின் பெயரை ‘பாரத்’ அல்லது ‘பாரத்வர்ஷ்’ என மாற்ற வேண்டும்’’ என்றார். பிரதமர் வலியுறுத்தல்: ‘அனைத்து வகையிலும் அடிமைத்தன மனப்பான்மையில் இருந்து நாட்டு மக்களை விடுவிக்க வேண்டும். அடிமைத்தனத்தை நினைவுபடுத்தும் விஷயங்களை இந்த அமிர்த காலத்தில் மாற்ற வேண்டும்’ என்று பிரதமர் மோடியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதன்படி, அரசியல் சாசனத்தில் இருந்து ‘இந்தியா’ என்ற சொல்லை நீக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என்று மாற்றுவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இண்டியா கூட்டணி ஆலோசனை: இந்தியாவின் பெயரை மாற்றப்போவதாக தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

இதையடுத்து, அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் மற்றும் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் தீவிர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்தியா என்ற சொல்லே தேர்தலில் பாஜகவை விரட்டும் – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்: ‘இந்தியா என்ற சொல்லே தேர்தலில் பாஜகவை விரட்டும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு இண்டியா என்று பெயர் சூட்டியதில் இருந்து, பாஜகவுக்கு இந்தியா என்று சொல்லவே கசந்து வருகிறது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடியால், 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்துள்ளது. இந்தியா என்ற சொல் பாஜகவை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பாஜகவை விரட்டும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 27 பேர் பலி

ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் – வலியுற்றுத்தும் நாடுகள்

வனவிலங்குகளை விற்பனை செய்ய தடை – சீன அரசாங்கம்