உள்நாடு

‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’ – ரிஷாட்

(UTV | கொழும்பு) – இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு, மலையக வாழ்வாதாரச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார்.

அன்னாரின் திடீர் மறைவு குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

“அமரர் ஆறுமுகம் தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முறையான திட்டங்கள் தீட்டியவர்.

1994 ஆம் ஆண்டிலிருந்து இறக்கும் வரை பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்த அவர், தனது பாட்டனார் சௌமிய மூர்த்தி தொண்டமானால் மிகச் சிறப்பாகப் புடம் போடப்பட்டிருந்தார்.

1999 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை பதவியை ஏற்றதிலிருந்து, சுமார் இருபது வருடங்கள் மலையக சமூகத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள், அமரர் ஆறுமுகம் தொண்டமானின் ஆளுமைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன.

சிறுபான்மை சமூகமொன்றின் தலைவரான அவர், ஏனைய சிறுபான்மைச் சமூகங்களுக்காகவும் குரல் கொடுத்தவர். கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்ற காலத்திலே சமூகத் தலைவனுக்குரிய ஆளுமைகளை வெளிப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

ஆயிரம் ரூபா சம்பளத்தை வென்றெடுக்கும் அவரது பிரயத்தனங்கள், அன்னாரின் இறுதி மூச்சு அடங்கும் வரை இருந்தமை, நேற்று மாலை முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற சந்திப்புக்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.”

அன்னாரது இழப்பால் துயருறும் அனைவரது துயரிலும் தானும் பங்கு கொள்வதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Related posts

ஊழல்வாதிகளின் கைகளுக்கு மீண்டும் அதிகாரம் மாற்றப்படாது – ஜனாதிபதி அநுர

editor

பிரதமர் – அமெரிக்க கருவூலத் திணைக்களக் குழுவினர் இடையே கலந்துரையாடல்

பணிப்புறக்கணிப்பு காரணமாக பல ரயில் சேவைகள் ரத்து.