உள்நாடு

ஆர்.சம்பந்தனிடம் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மரபுரிமையின் முகாமைத்துவத்திற்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கடிதமானது,

சனாதிபதி கோட்டாபய ராஜபக்ச
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு சனாதிபதி
சனாதிபதி செயலகம்
கொழும்பு -1.
மேதகு சனாதிபதி அவர்களே,

2020 ஜூன் 02 ஆம் திகதிய 2178/17 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பிரகடனத்திற்கமைய கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மரபுரிமையின் முகாமைத்துவத்திற்காக ஜனாதிபதி செயலணியொன்றைத் தாபித்தல்

மேற்காணும் விடயம் தொடர்பாக நான் இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

முதலாவதாக நான் பின்வரும் கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்:

  1. இலங்கை ஒரு பல்லின, பன்மொழி, பல்மத, பல்கலாசார பன்மைத்துவ சமூகமாகும். 
  2. இலங்கை ஒன்பது (9) மாகாணங்களைக் கொண்டது; கிழக்கு மாகாணம் அவற்றுள் ஒன்றாகும். 
  3. கிழக்கு மாகாணம் எப்போதும் தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்தபோதும் அது ஒரு பல் இன மாகாணமாகவே இருந்துவருகிறது. 
  4. இச்செயலணி அதன் உறுப்பினர் ஆக்க அமமைவில்; முழுக்க சிங்கள மயமானதாக உள்ளது. அதன் உறுப்பினர் உள்ளடக்க விதமானது அது ஒரு சமூகத்தினதும் – சிங்கள சமூகம் – ஒரு மதத்தினதும் – பௌத்தம் – நலன்களுக்கு மாத்திரம் சேவையாற்றுவதற்கெனவே ஏற்படுத்தப்பட்டதென்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அவர்கள் நாட்டின் பெரும்பான்மையினர் என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். 
  5. ஏனைய மாகாணங்கள் இதில் சேர்க்கப்படாது விடுபட்டதேன், ஏனைய சமூகங்களும் ஏனைய மதங்களும் இதில் உள்ளடக்கப்படாது விடுபட்டதேன் என்ற கேள்வியை எழுப்புவது பொருத்தமானதாகவிருக்கும். வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மட்டுமின்றி முழு நாட்டிலும் தமிழ் மக்கள் கொண்டுள்ள ஆழமான வேர் காரணமாக, ஓர் இலங்கையர் என்ற வகையிலும் ஒரு பக்திமிக்க இந்து என்ற வகையிலும் எனது கவலைகள் தூண்டப்படுகின்றன.

பிரபல இலங்கை வரலாற்றாசிரியர் பி.ஈ. பீரிஸ் ´விஜயனின் வருகைக்கு வெகு காலத்திற்கு முன்னரே இலங்கையில் முழு இந்தியாவினதும் போற்றுதலைப் பெற்ற சிவபெருமானின் பஞ்ச ஈஸ்வரங்கள்; காணப்பட்டன. அவை மகாதித்தவிற்கு அருகில் அமைந்துள்ள திருக்கேதீஸ்வரம், சிலாவத்த மற்றும் பேல் பிஷரி பகுதிகளில் தலைநிமிர்ந்து நிற்கும் முன்னீஸ்வரம், மாந்தோட்டத்திற்கருகில் அமைந்துள்ள தொண்டேஸ்வரம், கொட்டியார் பெரும் வளைகுடாவிற்கு எதிரே அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் மற்றும் காங்கேசந்துறைக்கு அருகில் அமைந்துள்ள நகுலேஸ்வரம் ஆகியனவாகும்´. ஏன்று தனது வரலாற்று நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வீஸ்வரங்களுள் இரண்டு வட மாகாணத்திலும் ஒன்று கிழக்கு மாகாணத்திலும் ஒன்று மேல் மாகாணத்திலும் இன்னொன்று தென் மாகாணத்திலும் அமைந்துள்ளன. புகழ்பெற்ற இவ்வரலாற்றாசிரியர் பி.ஈ. பீரிசின் கூற்றுப்படி முழு இந்தியாவிலும் போற்றுதலுக்குரியதான சிவ ஈஸ்வரங்கள் விஜயனின் வருகைக்கு வெகு காலத்திற்கு முன்னரே இலங்கையின் பல பாகங்களிலும் காணப்பட்டன என்பது குறிப்பிடத் தகுந்ததாகும். விஜயன் சிங்கள இனத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

இப்பிரகடனம் கிழக்கு மாகாணம் தொடர்பானதாகையால், கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலையில் அமைந்துள்ள சிவபெருமானின் ஈஸ்வரமான திருக்கோணேஸ்வரம் பற்றி நான் தற்போது குறிப்பிடுகின்றேன். திருக்கோணேஸ்வரம் புராணங்களில் தட்சன கைலாசமெனக் குறிப்பிடப்படுகிறது.

பிரசித்திபெற்ற இச்சிவாலயம் மூன்று கோபுரங்களைக் கொண்டிருந்தது.; கடலை நோக்கிய இரு புறங்களிலும் ஒவ்வொன்றும், மற்றொன்று தற்போது பிரடெரிக் கோட்டை அமைந்துள்ள இடமான மத்தியிலும் அமையப்பெற்றிருந்தன. பிரதான மண்டபம் ஆயிரம் (1000) தூண்களைக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. போர்துக்கேயர் காலத்து மத குருவும் வரலாற்றாசிரியருமான அருட்தந்தை கீறொஸ் தனது நூலில் ´ட்றிக்குயிலிமலே கோபுரம் அக்காலத்தில் கீழைத்தேய பக்தர்களின் ரோமாபுரியாக விளங்கியது என்பதோடு, அக்காலத்தில் பக்தர்களினால் மிக அதிகமாக தரிசிக்கப்பட்ட சியோலாவோ கடற்படுகைகளுக்குஅருகில் அமைதுள்ள ராமனாகொயர் , நாகபட்டாவோவிலிருந்து எட்டு காதவழி தொலைவில் இருந்த சிலாவாராவோ, எஸ். தோம் மற்றும் ட்றிப்பிட்டியிலிருந்து இரு நாள் பயணத் தொலைவில் அமைந்திருந்த காஞ்சவராவோ மற்றும் பிஸ்நாகாவிலிருந்த ட்றெமெல் ஒரிசாவிலுள்ள ஜகர்ப்பதி மற்றும் வங்காளத்தில் அமையப்பெற்ற விக்சாண்டே ஆகியவற்றைவிட மிக அதிகமான அளவில் பக்தர்களினால் தரிசிக்கப்பட்டது.´ என்று குறிப்பிடுகிறார்.

தென் இந்தியாவில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற தலங்களைவிட மிக அதிகமாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் பக்தர்களினால் மதித்து தரிசிக்கப்பட்டதென்ற கத்தோலிக்கப் பாதிரியார் வரலாற்றாசிரியர் ஒருவரின் இக்கூற்று இவ்வாலயம் எவ்வளவு பிரசித்தி பெற்றதாக விளங்கியதென்பதை நிரூபிக்கின்றது.

கி.பி. 1622 ஆம் ஆண்டு போர்த்துகீச தேசாதிபதி கொன்ஸ்டாண்டின் டீ சா திருகோணமலைக் கோட்டையைக் கைப்பற்றியபோது திருக்கோணேஸ்வர ஆலயம் அவரால் ஈவிரக்கமற்ற முறையில் அழிக்கப்பட்டது.

இக் கோவிலிலிருந்து உடைத்தெடுக்கப்பட்ட கட்டிடப் பொருட்கள் அதே இடத்தில் பிரெட்ரிக் கோட்டையைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டன் இக் கோவிலின் கற்பாலங்கள் இன்னும் இப் பகுதியில் காணப்படுவதோடு, அருகிலுள்ள கடலிலும் தாழ்ந்துள்ளன.

மேதகு ஜேஆர் ஜயவர்தன ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அப்போதைய இந்திய பிரதம மந்திரி ஸ்ரீ சரன்சிங் திருக்கோணேஸ்வரத்திற்கு வருகை தந்தார். அவரது வருகையின் போது அப் பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நானும் திருக்கோணேஸ்வரத்தில் அவரை வரவேற்றவர்களுள் ஒருவராக இருந்தேன். அவர் வந்ததும் வாகனத்திலிருந்து இறங்கியபோது அவர் கூறிய வார்த்தைகள் ´நான் தட்சண கைலாயத்திற்கு வந்துள்ளேன்´´ என்பதாகும்.

நான் சிவபெருமானின் தெற்கு உறைவிடத்திற்கு வந்துள்ளேன் என்பது அதன் பொருளாகும். சிவபெருமானின் வடக்கு உறைவிடம் உத்திர கைலாசம் இந்தியாவின் வடக்கே உள்ள இமயமலையாகும். திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் கிழக்கு மாகாணம் தொடர்பாக ஒரு சில உண்மைகளைக் கூறுவதும் அவசியமானதாகும்.

1948இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் கிழக்கு மாகாணம் முழுவதையும் சிங்கள மொழி பேசும் மக்களை பெரும்பான்மையினராகக் கொண்ட பகுதிகளாக மாற்றுவதற்கு இடைவிடா முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன என்பது நன்கறிந்ததொன்றாகும்.

கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் புதிதாக நீர்ப்பாசனம் வழங்கப்பட்ட காணிகளில் பெரும்பான்மை சமூகத்தினரை பெரும் எண்ணிக்கைகளில் குடியேற்றும் பல குடியேற்றத் திட்டங்கள் நாட்டின் சட்டங்களையும் பண்டாரநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கை மற்றும் டட்லி சேனநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கை ஆகியவற்றை மீறி மிக உக்கிரமாக மேற்கொள்ளப்பட்டன.

அத்தகைய சிங்கள குடியேற்றப் பகுதிகளில், சிங்களம் பேசும் மக்களை பலப்படுத்தும் வண்ணமும் தமிழ் பேசும் மக்களை பலவீனப்படுத்தும் வண்ணமும் புதிய தேர்தல் மற்றும் நிர்வாகப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் – திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை – 1827ஆம் ஆண்டிற்கும் 1981ஆம் ஆண்டிற்கும் இடையில் மக்கள் தொகைப் புள்ளிவிபரங்களை எடுத்துக் காட்டும் ஓர் அறிக்கையை நான் இத்துடன் இணைத்தனுப்புகிறேன்.

பல தசாப்தங்கள் தொடர்ந்து நீடித்த 1983ஆம் ஆண்டு வன்முறைகள் தொடங்கியதிலிருந்து மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்துள்ளமையினாலும் எந்தப் புள்ளிவிபரங்களும் நேர்மையானதெனவோ சரியானதெனவோ நம்ப முடியாததாலும் 1981ஆம் ஆண்டின் பின்னரான எந்த புள்ளிவிபரங்களையும் நான் வழங்கவில்லை.

1948 ஆம் ஆண்டிற்கும் (சுதந்திரம்) கடைசியாக மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை மதிப்பீட்டு ஆண்டான 1981 ஆம் ஆண்டிற்கும் இடையில் சிங்கள மக்கள் தொகையில் ஏற்பட்ட தேசிய அதிகரிப்பு 238மூ மாக இருந்த அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்கள் தொகை 883மூ ஆல் அதிகரித்தது என்பது இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. அதே காலப்பகுதியில், சிங்கள மக்கள் தொகை திருகோணமலை மாவட்டத்தில் 549.73மூ ஆலும் அம்பாறை மாவட்டத்தில் 1250மூஆலும் அதிகரித்தது. இது, முழுக்க முழுக்க குடியேற்றத் திட்டத்தினாலேயே – கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிகளில் வடக்கு கிழக்குக்கு வெளியிலிருந்து சிங்கள மக்களைக் கொண்டுவந்து குடியேற்றுதல் – ஏற்படுத்தப்பட்டது.

ஓன்றுடன் ஒன்று இணைந்துள்ள வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ்ப் பேசும் மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டதாகும் என்பதோடு, தமிழ் இனத்துவ நிலத் தொடர்பு கொண்டதுமாகும். 1987ஆம் ஆண்டு ஜுலை 21ஆம் திகதிய இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கமைய, இம் மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பிரதேசங்களாகும் என்ற அடிப்படையில் இப் பிரதேசங்கள் ஒரே அதிகாரப் பகிர்வு அலகாக ஒன்றாக இணைக்கப்பட்டன. இவ்விரு மாகாணங்களும் இனத்துவ ரீதியாக நிலத் தொடர்புடையவை என்பதோடு, வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், வடக்கு கிழக்கு மாகாணம் முழுவதிலும் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர் என்ற யதார்த்தத்தை முறியடிப்பதற்கு பலமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான இனத்துவ நிலத்தொடர்பைத் துண்டிப்பது நீண்டகாலமாக பேரினவாத அரசியல் தலைமைத்துவத்தின் ஒரு குறிக்கோளாக இருந்து வருகிறது. மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் சிஸ்டம் ´டு´ என்ற ஒரு புதிய திட்டம் உருவாக்கப்பட்டது.

அத்திட்டத்தின்கீழ் இதுவரை வடக்கிற்கு மகாவலி நீர் எதுவும் திருப்பப்படாதபோதிலும், வடக்குக் கிழக்கின் எல்லையில் அமைந்துள்ள ´மணலாறு´ அல்லது ´வெலிஓயா´ என்றழைக்கப்படும் பகுதியில் வடக்குக் கிழக்கிற்கு வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த ஆட்களுக்கு காணி பகிர்ந்தளிக்கப்பட்டு இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கு வசதியேற்படுத்துவதற்கான நிறுவனரீதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இம்முயற்சிகள் ஒரு தொடர் நடைமுறையாக உள்ளன. எனினும், தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வரும் தமிழ்ப் பாரம்பரிய கிராமங்கள் இருப்பதனால் வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ் இனத்துவ நிலத்தொடர்பை இரண்டாகப் பிளவுபடுத்துவது வெற்றிபெற முடியவில்லை. அம்மக்கள்மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள தென்னமரவடி என்ற கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் தாக்கப்பட்டனர்.

1984 டிசெம்பரில் சிலர் கொல்லப்பட்டனர் அவர்தம் வீடுகள் எரித்து அழிக்கப்பட்டன் அவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அவர்கள் அதனை அண்டிய முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழத் தொடங்கினர். சிலர் மாத்திரமே தமது சொந்தக் கிராமமான தென்னமரவடிக்குத் திரும்பி வந்துள்ள னர்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான இனத்துவ நிலத்தொடர்பை இல்லாதொழிப்பதற்கு எந்தளவு நடவடிக்ககைகள் எடுக்கப்பட்டன என்பதை இவ்வுண்மைகள் எடுத்துக்காட்டுகின்றன. தமிழ்பேசும் மக்களின் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பலமான எதிர்ப்புகளும் கள யதார்த்தங்களும் இதுவரை இது நிகழ்வதை தடுத்துள்ளன.

தமிழ் மக்கள் மிகவும் போற்றி வழிபடுகின்ற திருத்தலங்கள் வடக்குக் கிழக்கிற்கு வெளியிலும் அமையப்பெற்றுள்ளன. தென்கோடியில் அமையப்பெற்றுள்ள மிகவும் பக்தியோடு வழிபடப்படும் முருகக் கடவுளின் திருக்கோயிலான ´கதிர்காமம்´. மேலே குறிப்பிடப்பட்ட பண்டைய சிவாலயங்களுள் ஒன்றாகிய மேற்கில் அமைந்துள்ள ´முன்னேஸ்வரம்´. சிங்கள இனத்தின் முன்னோடியெனக் கருதப்படும் விஜயனின் வருகைக்கு முன்னரே தென்னிலங்கையில் இருந்ததாகக் கூறப்படும் பண்டைய சிவாலயங்களுள் ஒன்றாகிய ´தொண்டேஸ்வரம்´. இப்புராதனக் கோயில் தற்போது அழிவடைந்துள்ளதாகக் கூறப்பபடுகிறது.

தொல்பொருள் திணைக்களம் இப்பண்டைய இந்துக் கோயிலின் சிதைவுகளை போற்றிப் பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததேன்? தமிழ் இந்துக்கள் போற்றி வழிபடுகின்ற மேலும் பல இந்துக்கோயில்கள் நாடெங்கிலும் உள்ளன. துரதிஸ்ட வசமாக தொல்பொருள் திணைக்களம் ஒரு மதத்தை மாத்திரம் மேம்படுத்தி ஏனைய மதங்களின் சட்டபூர்வமான நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கிறதென்ற பெருமையை ஈட்டியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில தமிழ் மொழியில் கலவெட்டுக்களைக் கொண்டு இயங்கும் பௌத்த கோயில்கள் உள்ளன் தமிழில் கல்வெட்டுக்களைக் கொண்ட அழிவடைந்த பௌத்த கோயில்களின் சிதைவுகள் உள்ளன. இவை, கடந்த காலங்களில் சில குறிப்பிட்ட காலப்பகுதிகளில் தமிழ் இந்துக்கள் புத்த பகவானின் போதனைகளைப் பின்பற்றினர் என்பதை எடுத்;துக்காட்டும் பண்டைய கல்வெட்டுக்களாகும். புத்த பகவான் ஒருபோதும் இந்து மதத்திற்கு எதிரானவரல்ல. இந்து மதத்தைத் தூய்மைப்படுத்துவதற்கு அவர் முயன்றதாகவே நம்பப்படுகிறது.

தொல்பொருள் திணைக்களம் இவ்விடயங்களைப் பகிரங்கப்படுத்தி இவ்விடயங்கள் தொடர்பாக அனைத்து மக்களுக்கும் அறிவூட்டத் தவறிவிட்டதேன்? அது பௌத்தர்களுக்கும் இந்துக்களுக்குமிடையே நல்லெண்ண நம்பிக்கையையும் அமைதியையும் ஊக்குவிக்க உதவாதா? தொல்பொருள் திணைக்களத்தின் அத்தகைய தவறுதல்கள்தான் அவர்களின் செயற்பாடுகள் பற்றி நியாயமான அவநம்பிக்கையை ஏற்படுத்துவதோடு, அவர்கள் பாராபட்சமானவர்கள் என்ற கருத்தினையும் ஏற்படுத்துகின்றன.

புத்த பெருமான் ஆதிக்கக் கொள்கையைப் போதிக்க அல்லது பிரயோகிக்கவில்லை என்பது அவரின் பெயரால் தற்போது அதனைப் பின்பற்ற முனையும் சம்பந்தப்பட்ட அனைவரினாலும் நினைவில் கொள்ளப்படவேண்டும். அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்பவர்களினால் அவரது போதனைகள் பின்பற்றப்பட்டால், இலங்கை அமைதியும் சமாதானமும் நிறைந்த ஒரு சொர்க்கபூமியாகத் திகழும்.

இச்செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளுள் ´அத்தகைய தொல்பொருள் தலங்களுக்கு ஒதுக்கப்படவேண்டிய காணிகளை இனங்கண்டு அவற்றை முறையாகவம் சட்டபூர்வமாகவும் ஒதுக்கீடு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதும்´ அடங்குகிறது. இப்பணி பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது.

அரச காணிகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நாட்டில் சட்டங்கள் நிலவுகின்றன. அரச காணிகளும் அவற்றை ஒதுக்கீடு செய்தலும்தான் சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்த நாட்டில் மிகவும் சர்ச்சைக்குரிய விடயங்களாக இருந்து வருகின்றன. இக் கடிதத்தில் முன்னர் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் மக்களின்மீது இழைக்கப்பட்டுவரும் அநீதிகளை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

மேற்காணும் பணி இச்செயலணிக்கு வழங்கப்பட்டதன்மூலம் சாதிக்க முனைவது என்னவெனில், இதுவரை நடந்தவற்றையெல்லாம் உறதிப்படுத்தி, பௌத்த மதத்தை பேணிப்பாதுகாத்து ஊக்குவித்தல் என்ற போர்வையில் அத்தகைய இடங்களில் உள்ள அத்தகையை இனங்காணப்பட்ட காணிகளில் மேலும் அதிகமான சிங்களவர்களைக் குடியேற்றுவதன்மூலம் கிழக்கு மாகாணத்தையும் வட மாகாணத்தின் முடிந்தவரையான பகுதிகளையும் சிங்களப் பெரும்பான்மைப் பகுதிகளாக மாற்றுவதும் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான இனத்துவ நிலத்தொடர்பினைத் துண்டிப்பதுமாகும். இது பயங்கரமானதும் தீங்கு விளைவிப்பதுமான விளைவுகளைக் கொண்ட ஒரு நீதியின் மீறலாகும்.

பௌத்த மதத்தைப் போற்றிப் பாதுகாத்து ஊக்குவிப்பதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. பௌத்த தலங்கள் தொடர்பில் எவரேனும் சட்டத்தை மீறி செயற்படுவார்களாயின், அத்தகைய நடத்தை தொடர்பில் கடும் நடவடிக்கை மெற்கொள்ளப்பட வேண்டும்.

இப்பணியை தற்போதிருக்கும் சட்டத்தை நிலைநாட்டும் நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டும். பௌத்த கோயில்களும் நினைவிடங்களும் அந்நோக்கத்திற்கான போதுமான காணிகளில் அமைந்துள்ளன. அவை பல நூற்றாண்டுகளாக வெகுகாலம் அவ்வாறு நிலவுகின்றன. அந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மேலதிக காணி எதுவும் தேவையில்லை.

சிங்கள இனத்தின் முன்னோடியான விஜயனின் வருகைக்கு வெகு காலத்திற்கு முன்னிருந்தே நினைவிற்கெட்டாத காலந்தொட்டு இப்பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழ் இந்து மக்களான தமிழர்களதும்; தமிழ் பேசும் மக்களதும் தற்போதைய மற்றும் எதிர்கால தொழில் மற்றும் வதிவிடத் தேவைகளை மீறி இப்பகுதிகளை சிங்கள பௌத்த மக்கள் வாழும் சிங்கள பௌத்தப் பிரதேசங்களாக மாற்ற விரும்பும் தனி நபர்களுக்கே மேலதிகக் காணிகள் தேவைப்படுகின்றன.

புதிய காணிகள் எதுவும் சுவீகரிக்கப்படாமலே பௌத்த மதத்தைப் போற்றிப் பாதுகாப்பதற்குத் தேவையானதெதுவும் செய்யப்பட முடியம் என்பதை நாம் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறோம். அவ்வாறு செய்வது அனைத்து மக்கள் மத்தியிலும் நல்லெண்ணத்தையும் அமைதியையும் உறுதி செய்யும்.

இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு உங்களுடைய தயவான கவனம் செலுத்தப்பட்டு அதற்கமைய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென நாம் கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்
தங்களுண்மையுள்ள,
ஆர். சம்பந்தன் தலைவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

பிரதி: கௌரவ மகிந்த ராஜபக்ச பிரதம மந்திரி

Related posts

காஸாவுக்கான உணவுடன் ரஃபா கடவையை கடந்த அத்தியாவசிய பொருட்கள்

வௌ்ளத்தில் சிக்கிய நபரின் சடலம் 4 நாட்களின் பின் மீட்பு

editor

பேராதனை பல்கலை. மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்!