உலகம்

ஆர்மீனியா – அசர்பைஜான் மோதல் – பலி எண்ணிக்கை உயர்வு

(UTV | ஆர்மீனியா ) – Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் மோதலில் இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகிய இரு நாடுகளும் ஒருங்கிணைந்த சோவித் யூனியனின் பகுதிகளாகவே இருந்தது. ஆனால் 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த பின்னர் அர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகியவை தனித்தனி நாடுகளாக அறிவிக்கப்பட்டது.

இரு நாடுகளையும் எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணம் அசர்பைஜானின் அங்கம் என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த மாகாணத்தில் பெரும்பாலானோர் அர்மீனிய ஆதரவாளர்களே வாழ்ந்து வந்தனர்.

இவர்கள் அசர்பைஜானில் இருந்து பிரிந்து சென்று அர்மீனியாவில் தான் சேரவேண்டும் என முடிவு செய்தனர். இதனால், சிறு குழுக்களாக இணைந்து அசர்பைஜானுக்கு எதிராக 1988 ஆம் ஆண்டு முதலே சிறு சிறு சண்டையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் சோவியத் யூனியன் முடிவுக்கு வந்ததையடுத்து நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு அர்மீனியா மற்றும் அசர்பைஜான் இடையே போர் வெடித்தது.

இந்த போரில் நகோர்னோ-கராபத் மாகாணத்தின் பெரும்பகுதியை அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.

அன்றில் இருந்து நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக அர்மீனியா – அசர்பைஜான் இடையே மோதல்கள் அரங்கேறி வருகிறது.

அர்மீனியா-அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே போர் அதிகரித்துள்ளதால் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக இரு நாடுகளும் உடனடியாக மோதலை நிறுத்த வேண்டும் என ரஷிய அதிபர் புதின் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ தெரிவித்துள்ளனர்.

ஆனால், அசர்பைஜானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை துருக்கி எடுத்துள்ளது. துருக்கியின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ள பாகிஸ்தான் எல்லையை பாதுகாக்க அசர்பைஜானுக்கு உரிமை உள்ளது என தெரிவித்துள்ளது.

மோதலை உடனடியாக நிறுத்த முயற்சித்தபோது இருநாடுகளும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

Related posts

குற்றவியல் பிரேரணையில் ட்ரம்ப் வெற்றி

கொரோனா வைரஸ் 2 வருடங்களில் முடிவுக்கு வரலாம்

ரஷ்யாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை