கிசு கிசு

“ஆமை புகுந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் விளங்கவே விளங்காது”

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் சென்று கண்ணீர் சிந்துவதால் பயனில்லை என்பதுடன், அவை முதலை கண்ணீர் எனவும், கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.

தேவத்தை தேவாலயத்தில் நேற்று( 29) நடைபெற்ற ஆராதனையில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. தாக்குதல் தொடர்பாக நன்றாக அறிந்திருந்தும் எதனையும் செய்யாது தற்போது தம்மை காப்பாற்றிக் கொள்ள முயற்சித்து வருகின்றனர்.

அன்று பிரித்தானிய ஆட்சியின் கீழ் துன்பங்களை அனுபவித்த எமது நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் எமது நாட்டில் வாழும் அனைத்து இனங்களும் மதத்தினரும் ஒன்றாக இணைந்து செயற்பட்டனர்.

தற்போது நாம் யாருடைய மொழி உலகில் முதல் மொழி என்று வாதிட்டு காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றோம். மத, மொழிகளை அடிப்படையாக கொண்ட அனைத்து கட்சிகளையும் தடை செய்யுமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கோருகிறோம்.

இவற்றின் மூலம் நாட்டை பிளவுப்படுத்துவது மாத்திரமே நடக்கின்றது. என்ன நடக்க போகிறது, ஈஸ்டர் தாக்குதலுக்கான குற்றவாளிகள் யார் என்பதை நாங்கள் கண்களை திறந்து பார்த்து கொண்டிருக்கின்றோம்.

தமது கடமைகளை நிறைவேற்றாத அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் யார் என்பது தொடர்பாக தற்போது நடைபெறும் விசாரணைகளில் தேடப்பட்டு வருகிறது. எனினும் குண்டு வைத்தவர்கள், அதற்கு பணத்தை வழங்கியவர், அவர்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது தொடர்பாக இன்னும் கண்டறியவில்லை.

இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை ஜனாதிபதி ஆணைக்குழு கண்டறிந்தால் நல்லது என நான் எதிர்பார்க்கின்றேன். இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என அரசாங்கம் எமக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம்..” என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.

 

குறிப்பு :- “ஆமை புகுந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் விளங்கவே விளங்காது” – ஆமை என்ற உயிரினம் வீட்டுக்குள் வந்து விட்டால் அந்த வீடு அழிவை நோக்கி போகும் அல்லது கெடுதல்கள் நிகழும். அமீனா என்பவர் நீதி மன்றத்தில் பணிபுரியும் சிப்பந்தி(டவாலி என்பார்கள்). நீதிமன்ற அறிக்கைகளை நம்மிடம் சேர்ப்பிப்பவர். வீடு ஏலம்,நகை ஏலம் மற்றும் ஏதேனும் வில்லங்க விவரங்களை வீட்டுக்கு அது தொடர்பான அதிகாரிகளுடன் கொண்டு வந்து அறிவிப்பவர். அவ்வாறுதான் கடந்த அரசினால் உதாசீனமாக விடப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் இன்றைய அரசின் காய் நகர்த்தல்களும் விசாரணைகளுக்கும் மேற்சொன்ன பழமொழி பொருந்தும் என நினைக்கிறோம்.

Related posts

பேரியல் அஷ்ரப் யாருக்கு ஆதரவு?

நாடளாவிய ரீதியில் ஊரடங்கை வலியுறுத்தி அரசுக்கு கடும் கோரிக்கை

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தினை கலைக்க இன்று புதிய அணுகுமுறை?