உலகம்

ஆப்கானிஸ்தானில் நடந்த முடிந்த போர் முடிவுகளுக்கு பாகிஸ்தானை குற்றம் சொல்லாதீர்கள்

(UTV |  லாஹூர்) – ஆப்கானிஸ்தானில் நடந்த முடிந்த போர் முடிவுகள் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவிக்கையில்;

ஆப்கானிஸ்தான் பற்றிய சமீபத்திய அமெரிக்க காங்கிரஸ் விவாதங்களை உற்றுநோக்கும் போது , இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்ட பாகிஸ்தானின் தியாகங்களைப் பற்றி எதுவும் குறிப்பிடப்பி டவில்லை என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன்.

மாறாக, ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்காவின் இழப்புக்கு எங்களையே குற்றம் சாட்டியுள்ளார்கள். ஒரு விடயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். ஆப்கானிஸ்தானில் நடைபெறும் போரானது வெற்றி பெற முடியாத ஒரு விடயம் என்று 2001 முதல் நான் கூறிவருகிறேன்.

அவர்களின் வரலாற்றை உற்று நோக்கும் போது, ஆப்கானியர்கள் நீண்டகால வெளிநாட்டு இராணுவ ஆக்கிரமிப்பை ஏற்க மாட்டார்கள். பாகிஸ்தான் உட்பட எந்த வெளிநாட்டு ஆக்கிரமிப்பையும் ஏற்க மாட்டார்கள். இந்த யதார்த்தத்தை யாராலும் மாற்ற முடியாது.

துரதிர்ஷ்டவசமாக, 9/11 க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த பாகிஸ்தான் அரசாங்கங்கள் அமெரிக்க இராணுவ ஆதிக்க அணுகுமுறையின் பிழையை சுட்டிக்காட்டுவதற்கு பதிலாக அமெரிக்காவை திருப்திப்படுத்த முயன்றன. உலகளாவிய தொடர்புகள் மற்றும் உள்நாட்டு சட்டபூர்வத்தன்மையில் நம்பிக்கை இழந்த பாகிஸ்தானின் இராணுவ சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரப் 9/11 க்குப் பிறகு இராணுவ ஆதரவுக்காக அமெரிக்கா விடுத்த ஒவ்வொரு அமெரிக்க கோரிக்கையையும் ஒப்புக்கொண்டார். இது பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியது.

1980 களில் ஆப்கானிஸ்தானில் சோவியத்தை தோற்கடிக்க சிஐஏ (CIA) மற்றும் எங்கள் புலனாய்வு அமைப்பான ஐஎஸ்ஐ (ISI) ஆகியோரால் கூட்டாக பயிற்சி பெற்ற குழுக்களை பயன்படுத்துமாறு அமெரிக்கா பாகிஸ்தானிடம் வேண்டிக்கொண்டது. அப்போது, இந்த ஆப்கானியர்கள் புனிதப் பணியைச் செய்யும் சுதந்திரப் போராளிகள் என்று போற்றப்பட்டனர்.
ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் வெள்ளை மாளிகையில் முஜாஹிதீன்களுக்கு விருந்தளித்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்தப்போரில் சோவியத் தோல்வியடைந்தவுடன், அமெரிக்கா ஆப்கானிஸ்தானை கைவிட்டுவிட்டு பாகிஸ்தானை சரணாலயமாக ஆக்கியது . இதனால் ஆப்கானிஸ்தானில் ஒரு உள்நாட்டு போர் ஏற்பட்டதோடு பாகிஸ்தானில் 4 மில்லியன் ஆப்கானிஸ்தான் அகதிகள் தஞ்சம் புகுந்தனர். இந்த பாதுகாப்பு வெற்றிடத்திலிருந்து பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள் முகாம்களில் பிறந்து படித்த தலிபான்கள் பலர் தோன்றினர்.

9/11 இற்கு நீண்ட காலத்திற்கு பிறகு, அமெரிக்காவுக்கு மீண்டும் நாங்கள் தேவைப்பட்டோம். ஆனால் இம்முறை நாங்கள் வெளிநாட்டு ஆக்கிரமிப்பையே எதிர்த்துப் போராட கூட்டாக ஆதரவளித்தோம். முஷாரப் அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் வளங்கள் மற்றும் விமான தளங்களை பயன்படுத்த அனுமதித்தார். மேலும், பாகிஸ்தானில் அமெரிக்க CIA சுதந்திரமாக செயற்படவும் அனுமதித்தார். அத்துடன், பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்க ட்ரோன்கள் குண்டு வீசுவதையும் கண்டு அமைதியாக இருந்தார்.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள சோவியத் எதிர்ப்பு ஜிஹாதின் தலமாக முன்னர் பயன்படுத்தப்பட்டு வந்த ஆதிவாசி பழங்குடிப் பகுதிகளுக்குள் நமது இராணுவம் முதன்முறையாக நுழைந்தது. இந்த பகுதிகளில் வாழும் பஷ்தூன் பழங்குடியினர் தலிபான் மற்றும் பிற இஸ்லாமிய போராளிகளுடன் ஆழமான இன உறவுகளை கொண்டிருந்தனர்.
இந்தப் பகுதி மக்கள், சோவியத்தை போலவே அமெரிக்காவையும் ஆப்கானிஸ்தானின் “ஆக்கிரமிப்பாளராகவே ” கருதினர். பாகிஸ்தான் அப்போது அமெரிக்காவின் பங்காளராக இருந்ததால் , நாங்களும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு தாக்கப்பட்டோம்.

எமது பிராந்தியத்தில் 450 க்கும் மேற்பட்ட அமெரிக்க ட்ரோன் தாக்குதல்கள் இடம்பெற்றது. அப்போது அமெரிக்காவின் நண்பனாக இருந்த போதும் அமெரிக்காவால் குண்டு வீசப்பட்ட ஒரே நாடு பாகிஸ்தானாகும். இந்த தாக்குதல்கள் ஏராளமான பொதுமக்கள் இழப்புகளை ஏற்படுத்தியதால் அமெரிக்க-விரோத (மற்றும் பாகிஸ்தான் இராணுவ – விரோத) உணர்வலைகளை அது மேலும் தூண்டியது.

அப்போது நாங்கள் மிகப்பொரும் சிக்கலில் அகப்பட்டு இருந்தோம். 2006 – 2015 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில், கிட்டத்தட்ட 50 தீவிரவாதக் குழுக்கள் பாகிஸ்தான் அரசு மீது ஜிஹாத் பிரகடனப்படுத்தி, எங்கள் மீது 16,000 பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தின. நாங்கள் 80,000 க்கும் அதிகமான உயிரிழப்புக்களை சந்தித்தோம். மேலும், பொருளாதாரத்தில் 150 பில்லியனை அமெரிக்கா டொலர்களை இழந்தோம்.இந்த தாக்குதல்களால், எங்கள் நாட்டு மக்களில் 3.5 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளில் இருந்து தப்பிய போராளிகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தனர். பின்னர் இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் உளவு அமைப்புகளால் ஆதரிக்கப்பட்டு நிதியளிக்கப்பட்டு எங்களுக்கு எதிராக மேலும் பல தாக்குதல்களை நடத்தினர்.

அப்போது பாகிஸ்தான் தனது பிழைப்புக்காக போராட வேண்டியிருந்தது. காபூலில் முன்னாள் CIA நிலைய பொறுப்பதிகாரி 2009 இல் குறிப்பிட்டது போல், “பாகிஸ்தான் அப்போது அமெரிக்காவால் நேரடியாக செலுத்தப்படும் இடைவிடாத அழுத்தத்தின் கீழ் விரிசல் அடையத் தொடங்கியது.” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் அமெரிக்கா தொடர்ந்து ஆப்கானிஸ்தான் போருக்கு பாகிஸ்தானின் ஆதரவை வேண்டி நின்றது.

2008 ல், நான் அப்போதைய சென்ஸ் ஜோ பைடன், ஜான் எஃப். கெர்ரி மற்றும் ஹாரி எம். ரீட் ஆகியோரை சந்தித்து ஆப்கானிஸ்தானில் ஒரு இராணுவப் ஆட்சியை தொடர்வதன் பயனற்ற தன்மையை விளக்கினேன்.

அப்படியிருந்தும், 9/11 க்குப் பிந்தைய காலகட்டத்தில் இஸ்லாமாபாத்தில் அரசியல் போட்டியும் இலாபமும் நிலவியது. சந்தேகத்திற்கு இடமின்றி, எனது நாட்டை ஆட்சி செய்த மிகவும் ஊழல் மிக்க நபரான ஜனாதிபதி ஆசிப் சர்தாரி பாகிஸ்தானியர்களை குறிவைக்கும் படி அமெரிக்கர்களை வேண்டிக்கொண்டார். ஏனெனில் “இணை சேதம் அமெரிக்கர்களை கவலையடையச் செய்தாலும் அது என்னை கவலையடையச்செய்யாது” என்று அவர் குறிப்பிட்டார். அதன் பின் வந்த நவாஸ் ஷரீபும் அதே போன்றே செயற்பட்டார்.

2016 ஆம் ஆண்டுக்குள் பயங்கரவாதத் தாக்குதலை பாகிஸ்தான் பெரும்பாலும் தோற்கடித்தாலும், நாங்கள் எச்சரித்தபடி ஆப்கானிஸ்தான் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. ஏன் இந்த வேறுபாடு? பாகிஸ்தானில் ஒரு சீரான இராணுவம் மற்றும் புலனாய்வு நிறுவனம் இருந்தது. இவை இரண்டுக்கும் மக்கள் ஆதரவு வழங்கினார். ஆனால் ஆப்கானிஸ்தானில், ஒரு வெளிநாட்டு படையின் நீடித்த போருக்கான சட்டபூர்வமற்ற தன்மை மற்றும் ஊழல் மற்றும் திறமையற்ற ஆப்கானிய அரசாங்கம் ஆகியவையே காணப்பட்டது. இது நம்பகத்தன்மை இல்லாத கைப்பாவை ஆட்சியாக , குறிப்பாக கிராமப்புற ஆப்கானியர்களால் கருதப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக, இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்வதற்கு பதிலாக, ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கத்திய அரசாங்கங்கள் பாகிஸ்தானைக் குற்றம் சாட்டி, தலிபான்களுக்கு பாதுகாப்பான புகலிடங்களை வழங்குவதாகவும், எங்கள் எல்லை முழுவதும் அதன் சுதந்திரமான இயக்கத்தை அனுமதிப்பதாகவும் தவறாக குற்றம் சாட்டி பாகிஸ்தான் மீது பலி சுமத்தி வருகிறது. அப்படி இருந்திருந்தால், இந்த புகலிடங்களை இலக்காகக் கொண்டு 45-க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதலில் சிலதை அமெரிக்கா நடத்தியிருக்காதா?
இருப்பினும், காபூலை திருப்திப்படுத்த, பயோமெட்ரிக் எல்லைக் கட்டுப்பாடுகளையும், எல்லையை பாதுகாப்பையும் பரிந்துரைத்து, பாகிஸ்தான் ஒரு கூட்டு எல்லை தெரிவு பொறிமுறையையும் (நாங்கள் இப்போது பெரும்பாலும் சொந்தமாக இதை செய்திருக்கிறோம்) மற்றும் பிற நடவடிக்கைகளையும் முன்வைத்தது. ஆனால்,ஒவ்வொரு பரிந்துரைகளும் நிராகரிக்கப்பட்டது.

அதற்கு பதிலாக, ஆப்கானிஸ்தான் அரசாங்கம் பல நாடுகளில் நூற்றுக்கணக்கான பிரச்சார மையங்களை இயக்கும் இந்திய போலி செய்தி வலையமைப்புக்களின் உதவியுடன்.”பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டுவதை தீவிரப்படுத்தியது.

ஆப்கானிஸ்தான் இராணுவம் மற்றும் அஷ்ரப் கனி அரசாங்கம் வீழ்ச்சி அடைவதற்கு முன்னதாகவே தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதே மிகவும் யதார்த்தமான அணுகுமுறையாக இருந்திருக்கும். இலகுரக ஆயுதங்கள் கொண்ட தலிபான்களை எதிர்த்துப் போராடுவதற்கு 300,000க்கும் மேற்பட்ட நன்கு பயிற்சி பெற்ற ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு முடியாமல் போனதற்கு நிச்சயமாக பாகிஸ்தானை குற்றம் சுமத்த முடியாது. சராசரி ஆப்கானியின் பார்வையில் சட்டபூர்வமான தன்மை இல்லாத ஆப்கானிய அரசாங்க அமைப்புதான் அடிப்படை காரணியாக இருந்தது.

இப்போது, கடந்த காலத்தின் விளைவுகளுக்கு பழி சுமத்திக்கொண்டு இருப்பதை விட அந்த நாட்டில் மற்றொரு வன்முறை எதிர்காலத்தில் ஏற்படாமலிருக்க வழியமைக்க வேண்டும்.
அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக புதிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் உலகநாடுகள் சேர்ந்து செல்வதுதான் இப்போதைய சரியான முடிவு என நான் நம்புகிறேன்.

சர்வதேச உலக நாடுகள், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தில் முக்கிய இனக் குழுக்களைச் சேர்ப்பதையும், அனைத்து ஆப்கானியர்களின் உரிமைகளை மதிப்பதையும் மற்றும் ஆப்கானிஸ்தான் மண் மீண்டும் எந்த நாட்டிற்கும் எதிரான பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படக் கூடாது என்ற உறுதிப்பாட்டையும் காண விரும்புகிறது.

தலிபான் தலைவர்கள் ஆப்கான் அரசாங்கத்தை திறம்பட வழிநடத்துவதற்குத் தேவையான மனிதாபிமான மற்றும் மேம்பாட்டு உதவிகளை உலக நாடுகள் உறுதிசெய்தால், அவர்களின் வாக்குறுதிகளில் உறுதியாக இருக்கவும் , வாக்குறுதிகள் படி செயற்படவும் அவை காரணமாக அமையும். இத்தகைய மனிதாபிமான உதவிகளை சர்வதேச நாடுகள் வழங்குவதன் மூலம் தலிபான்கள் தமது கடமைகளை சரிவர்ச்செய்வதற்கான அழுத்தத்தை பிரயோகிக்கவும் அது வழிவகுக்கும்.

நாம் இதைச் சரியாகச் செய்தால், தோஹா சமாதான செயல்முறை நோக்கமாகக் கொண்ட “ஆப்கானிஸ்தான் உலகிற்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்காது. மேலும், ஆப்கானிஸ்தான் நான்கு தசாப்த கால மோதலுக்குப் பிறகு அதன் கனவான சமாதானத்தை அடைய முடியும்” என்ற இலக்கை அடையலாம்.

இல்லையேல், 1990 களில் இருந்ததைப் போல ஆப்கானிஸ்தானை கைவிடுவதானது, இந்நாட்டை பாரிய அழிவுக்கு இட்டுச்செல்லும். மேலும், மோதல்கள், பாரிய வெகுஜன இடம்பெயர்வு மற்றும் நவீன சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல் ஆகியவை இதன் மூலம் தலைதூக்கும். இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதை தவிர்ப்பது நிச்சயமாக நமது சர்வதேச தேவையாக இருக்க வேண்டும்.

Related posts

அதிவேகத்தில் பரவும் டெல்டா வைரஸ்

நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

பிரேசில் சுகாதார அமைச்சர் இராஜினாமா