மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட பாட்டாளிபுரம் பாமகள் வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை பாடசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது “பாடசாலை வீழ்ச்சிக்கு அதிகாரிகளே பொறுப்பு”, “கல்வியே எமது சமூகத்தின் மாற்றம்”, “எமது பிள்ளை அரசின் பிள்ளை இல்லையா?”, “என் கல்வி என் உரிமை”, “கல்வி அதிகாரிகளின் அசமந்தப்போக்கு தடைசெய்யப்பட வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்த மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் தேவதாஸ் ஜெயந்தன் பெற்றோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு மூதூர் வலயத்தில் உள்ள பல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாகவும் இந்த பாடசாலையின் குறைபாடுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு ஒரு குழுவொன்றை மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்கு வருகை தருமாறு தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் மகஜர் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த மகஜரில் மூதூர் பாட்டாளிபுரம் பாமகள் வித்தியாலயம் க.பொ.த. சாதாரணதரம் வரை 352 மாணவர்கள் கற்கும் பாடசாலை எனவும் இங்குக் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், சமயம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் இவ்வாறான நிலையில் க.பொ.த சாதாரண தரத்தில் மாணவர்கள் எவ்வாறு சித்தியடைய முடியும் எனவும் தேவையான ஆசிரியர் நியமித்து மாணவர்களுடைய கல்விக்கும் எதிர்காலத்திற்கும் உதவுமாறும் கோரப்பட்டுள்ளது.