விளையாட்டு

ஆசிய கிண்ணத் தொடரில் இருந்து துஷ்மன்த சமீர நீக்கம்

(UTV | கொழும்பு) – மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர இடது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக ஆசிய கிண்ணத் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மூன்று நான்கு நாட்களுக்கு முன்னர் சமீர காயத்துக்கு உள்ளானதாகவும் ஆசிய கிண்ணம் நடைபெறும் காலத்தில் அவர் குணமடைய வாய்ப்பு இல்லை என்றும் இலங்கை அணி முகாமைக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமீரவின் குதிகால் தசைநாருடன் தொடர்புபட்டு கணுக்காலில் காயம் ஏற்பட்டு அது தற்போது கெண்டைக்காலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை அணியுடன் பணியாற்றும் மருத்துவர் ஒருவரும் உறுதி செய்துள்ளார்.

இந்த உபாதை இன்னும் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்படாத நிலையில் வரும் ஒக்டோபர் நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள டி20 உலகக் கிண்ணத்திற்கு முன்னர் அவர் உடல் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஆசிய கிண்ணத்திற்கான 18 பேர் கொண்ட குழாத்தில் சமீர சேர்க்கப்பட்டபோதும் அப்போது அவர் முழுமையாக உடல் தகுதி பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்தக் குழாம் அறிவிக்கப்பட்டபோது பதில் வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்த வலது கை வேகப்பந்து வீச்சாளர் பிரமோத் மதுஷான் சமீரவுக்கு பதில் இலங்கை குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசிய கிண்ண தொடரில் இலங்கை அணி வரும் ஓகஸ்ட் 27 ஆம் திகதி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

Related posts

யுபுனுக்கு மாலிங்கவிடமிருந்து பாராட்டு

இலங்கையை வீழ்த்திய ஸ்கொட்லாந்து!!

உலக சம்பியன் மெய்வல்லுனர் போட்டிக்கு நிமாலி லியனாராச்சி தகுதி