ஈஸ்டர் தாக்குதலில் அ.இ. ஜம்மியதுல் உலமாவை சம்பந்தப்படுத்துவதை உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.
இது தொடர்பில் உலமா கட்சித்தலைவரும் ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸின் ஸ்தாபக தலைவருமான முபாறக் அப்துல் மஜீத் முப்தி தெரிவித்துள்ளதாவது,.
அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் தலைமை என்பது 2006 ஆம் ஆண்டு முதல் ஆயுட்கால தலைமையாக இருக்கும் விடயத்தில் உலமா கட்சி எப்போதும் எதிர்த்தே வருகிறது.
ஜம்மிய்யாவின் தலைமை என்பது இரண்டு தடவைக்கு மேல் ஒருவரே இருக்கக் கூடாது என உலமா கட்சி தொடர்ந்து கூறி வருகிறது.
ஆனால் அதற்காக ஈஸ்டர் தாக்குதல் விடயத்தில் அ.இ. ஜம்மியதுல் உலமாவுக்கு சம்பந்தம் இருப்பதாக வட மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராக செயற்பட்ட அஸ்மின் என்பவர் கூறியிருப்பது முட்டாள்தனமான கருத்தாகும். இதை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் இதற்கான சரியான ஆதாரங்களை அவர் முன் வைக்க வேண்டும்.
முடியாத போது வெளிநாட்டில் இருக்கும் அவரை இலங்கை அரசு நாட்டுக்கு வரவழைத்து விசாரணை செய்து அவர் அபாண்டம் சொன்னவராயின் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
மேற்படி அஸ்மின் என்பவர் தமிழ் கூட்டமைப்பின் ஆதரவாளர் என்பதால் புலம் பெயர் நாட்டில் நல்ல பெயர் எடுக்க இவ்வாறான கதைகளை சொல்கிறாரா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.