அரசியல்உள்நாடு

அரிசி இறக்குமதியின் போது பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது – முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர

அரசாங்கத்துக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையில் இருந்துவரும் ஒப்பந்தம் காரணமாகவே அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை இதுவரை தெரிவிக்காமல் இருக்கிறது.

அதேநேரம் அரிசி இறக்குமதியின்போது பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது என முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கான பொறுப்பை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்து கஷ்டமான குடும்பங்களை தெரிவுசெய்து 20 கிலோ அரிசி பகிர்ந்தளித்தார்.

அது அனைவருக்கும் வழங்கவில்லை. என்றாலும் நூற்றுக்கு 5வீதம் தேவையற்றவர்களுக்கும் சென்றுள்ளதை ஏற்றுக்கொள்கிறேன்.

அரிசி ஒரு மனி கூட வெளிநாடுகளில் இருந்து கொண்டுவருவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

அரிசி கையிருப்பு தொடர்பில் அவருக்கு யாராவது அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள ஆலோசனைக்கு அமையவே அவ்வாறு தெரிவித்திருப்பார்.

இதன் மூலம் அரிசி விலை அதிகரிக்கும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிந்து கொண்டார்கள்.

வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யாவிட்டாலும் இறக்குமதி செய்வதாக தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அரிசி ஆலை உரிமையாளர்கள் சந்தைக்கு அரிசி விநியோகி்ப்பதை வரையறை செய்வார்கள். அரிசி விலை அதிகரிக்கும் என அவர்களுக்கு தெரியும்.

பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசி மற்றும் நெல்லை மறைத்து வைத்திருக்கிறார்கள்.

வரலாற்றில் இந்த முறைதான் அரிசி ஆலை உரிமையாளர்கள் பாரியளவில் லாபமீட்டி இருக்கிறார்கள் என்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறேன். ஏனெனில் 200 ரூபாவுக்கு மேல் அரிசி விலை அதிகரிக்க இடமில்லை.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாகவே 4 கேள்வி கோரல்களும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் குறைகாணவும் விமர்சிக்கவுமே இவர்கள் திறமையானவர்கள்.

ஆனால் வேலை செய்ய இவர்களிடம் திறமையானவர்கள் இருப்பதை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

அத்துடன் இறக்குமதி செய்த அரிசிகளில் அதிகமானவை வேறு வகைகளாகும்.பாஸ்மதி அரசி இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோன்று பயறு, உழுந்து, நிலக்கடலை கொண்டுவந்துள்ளார்கள்.ஒரு சில பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன. ஆனால் அவை வெளியில் வரவில்லை.

தற்போதுள்ள நிலையில் நான் விவசாய அமைச்சராக இருந்திருந்தால், எனக்கு வீட்டில் இருந்திருக்க முடியாமல் போயிருக்கும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன போன்றவர்கள் அறுவடை செய்யும் நெல்லை எனது வீட்டுக்கு முன்னால் எரித்திருப்பார்கள்.

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு மேலும் பணம் சம்பாதித்துக்கொள்ளவே அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை தெரிவிக்காமல் இருக்கிறது. இது அரசாங்கம் அவர்களுடன் மேற்கொண்டுவரும் கொடுக்கல் வாங்களாகும் என்றார்.

-எம்,ஆர்.எம்.வசீம்

Related posts

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்.

இடைநிறுத்தப்பட்டிருந்த உயர்தரப் பரீட்சை நாளை மீண்டும் ஆரம்பம்

editor

‘ஜனாதிபதி ஒருவர் நாட்டில் உள்ளாரா, கண்ணுக்கு தெரிவதில்லையே..’