உள்நாடு

அரச, தனியார் துறைகளின் செயற்பாடுகள் மந்தகதியில்

(UTV | கொழும்பு) – தனது அவதானத்தின்படி நாட்டில் உள்ள பொதுவான பிரச்சினை எவரும் தமது பணிகளை சரிவர செய்யாதிருப்பதாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரச, தனியார் துறைகளில் காணப்படுகின்ற மந்தகதியிலான செயற்பாடுகள் கவலைக்குரிய விடயமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதற்கு உதாரணமாக கொழும்பு மற்றும் மக்கள் செறிந்து வாழ்கின்ற நகரங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிர்மாணப் பணிகள் எப்போதும் ஒரே அளவில் இருப்பதை குறிப்பிடலாம் என்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்து நிர்மாணப் பணிகளையும் உடனடியாக நிறைவு செய்ய வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். உளப்பாங்கு மாற்றத்துடன், அபிவிருத்தி புரட்சிக்கு தயாராக வேண்டுமென்று அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டார்.

‘அனைத்து குடும்பங்களுக்கும் வசதியான வீடு’ பெற்றுக்கொடுப்பது ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தின் எதிர்பார்ப்பாகும். வீடொன்றின் தேவை இருந்தாலும் அதனை தனியாக நிறைவு செய்துகொள்ள முடியாமை பெரும்பாலனவர்களுக்கு உள்ள பிரச்சினையாகும். நகர, கிராமிய மற்றும் தோட்ட மக்களின் வீட்டுத் தேவையை தீர்க்க வேண்டியது அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடையும் வகையிலேயாகும் என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

‘உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ எண்ணக்கருவை அடிப்படையாகக்கொண்டு தனது அமைச்சு ஏற்கனவே கிராம சேவையாளர் பிரிவுகள் ரீதியாக குறைந்த வருமானமுடையவர்களுக்கு 14022 வீடுகளை நிர்மாணித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த குறிப்பிட்டார். இத்திட்டத்தின் கீழ் ஐந்து வருடங்களில் 70100 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பழைய தொடர்மாடி வீட்டுத் தொகுதிகளில் உள்ள கழிவகற்றல் கட்டமைப்பை புனர்நிர்மாணம் செய்ய வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் இந்திக குறிப்பிட்டார்.

கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தை மீண்டும் புதுப்பொழிவுடன் இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

Related posts

தரம் 06 சேர்ப்பதிற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள்

சீனாவிடம் இலங்கை மேலும் 2.5 பில்லியன் டொலர் கடன் கோரிக்கை

யாழ் நோக்கி பயணிக்கும் ரயில்கள் சேவையில் ஈடுபடாது