அரசியல்உள்நாடு

அரச சேவையை ஒன்லைனுக்கு மாற்றுவதே ஊழலுக்கு எதிரான சிறந்த தீர்வு – ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலத் நசீர் அல்மேரி

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலத் நசீர் அல்மேரி (Khaled Nasser AlAmeri) அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ (கலாநிதி) அசோக ரன்வல அவர்களை டிசம்பர் 09ஆம் திகதி மரியாதையின் நிமித்தம் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவும் கலந்துகொண்டார்.

2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உலக அரசாங்கங்களின் மாநாட்டில் உரையாற்றுமாறு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி அழைப்பு விடுக்கவிருப்பதாகவும் இலங்கைக்கான தூதுவர், கௌரவ சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினார்.

2024ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அரசாங்கங்களின் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியிருந்ததாகவும், அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் குறித்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி உரையாற்றுவதை தாம் விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க சேவையை ஒன்லைன் முறைக்கு மாற்றுவதே ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கு சிறந்த முறைமையென்றும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இது விடயத்தில் இலங்கையுடன் தமது நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ள ஐக்கிய அரபு இராச்சியம் தயாராக இருப்பதாகவும் அந்நாட்டுத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், வெளிப்படையான மற்றும் ஈர்க்கக்கூடிய முதலீட்டு நடைமுறையை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்கள் தொழில்துறை சார்ந்தவர்களாகவும், அமைதியான சமூகத்தினராகவும் வாழ்வது தொடர்பில் நன்மதிப்பைக் கொண்டிருப்பதாகவும் அந்நாட்டுத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறைகளை முன்னேற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு தரப்புக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது.

முதலீடுகளை விஸ்தரிப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

இலங்கை – ஐக்கிய அரபு இராச்சிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீளவும் ஸ்தாபித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

Related posts

விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து- இருவர் உயிரிழப்பு

முன்னாள் எம்.பி சூரியப்பெரும காலமானர்

editor

முடங்கியது காத்தான்குடி