உள்நாடு

அரசை எதிர்த்து நீதிமன்றம் செல்ல ஆசிரியர் சங்கம் தீர்மானம்.

தொழிற்சங்க நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கில், வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்காத மட்டுப்படுத்தப்பட்ட அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு, கடந்த காலங்களில் கற்ற பாடங்களை மறந்து ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்த, நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று தீர்மானித்துள்ளது.

ஜூலை 8 மற்றும் 9ஆம் திகதிகளில் அரச ஊழியர் சங்கங்கள் பல முன்னெடுத்த தொழிற்சங்கப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு சமூகமளித்த நிறைவேற்று சேவை பிரிவைச் சேராத அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் விசேட சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கும் விசேட பாராட்டுச் சான்றிதழை வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜூலை 8 மற்றும் 9ஆம் திகதிகளில் 200ற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் உடன்பாட்டுடன் ஒட்டுமொத்த அரச சேவையிலும் பாரிய வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது. மேலும் அனைத்து ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்களும் ஜூலை 09 அன்று சுகயீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அரசின் தவறால் காலதாமதமான சாதாரணத் தரப் பரீட்சையின் அழகியல் பாடத்தின் செயன்முறை பரீட்சையை மாத்திரம் மாணவர்களுக்கு நடத்த ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்திருந்ததோடு, ஏனைய ஆசிரியர்கள் அனைவரும் சுகயீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டிருந்தது.

முழு அரச சேவையிலும் இந்த பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை கருத்திற்கொண்டு உழைக்கும் வர்க்கத்தின் சம்பள கோரிக்கைகளை வழங்குவதற்கு பதிலாக, அன்றைய தினம் பணிக்கு வந்த ஒரு சிலருக்கு சம்பள அதிகரிப்பை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

ஜூலை 9ஆம் திகதி பணிக்கு சமூகமளித்த, 3-1ஆம் தர ஆசிரியர் ஒருவருக்கு 525 ரூபாயும், 2-1ஆம் தர ஆசிரியருக்கு 1,335 ரூபாயும், முதலாம் தரத்திலான ஆசிரியருக்கு 1,630 ரூபாயும் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரசைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்ததாக ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆசிரியர், அதிபர் மற்றும் முழு உழைக்கும் வர்க்கத்தினரின் கோரிக்கைகளை புறந்தள்ளி குறிப்பிட்ட சிலருக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

1986ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதி முதல் ஏப்ரல் 6ஆம் திகதி வரை நடைபெற்ற தாதியர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் தொடர்ந்து பணிக்கு வருகைத்தந்த தாதியர்களுக்கு இரண்டு சம்பள உயர்வுகளையும், இடையிடையே பணிக்கு வந்த தாதியர்களுக்கு ஒரு முறை ஊதிய உயர்வையும் வழங்க அப்போதைய அமைச்சரவை தீர்மானித்த விடயத்தை, ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கையொப்பத்துடன் ஜூலை 11ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் நினைவூட்டப்பட்டுள்ளது.

அந்த அமைச்சரவை தீர்மானம் எப்படி நீதிமன்றத்தின் முன் செல்லுபடியாகாமல் போனது என்பதை சிரேஷ்ட ஆசிரியர் சங்கத் தலைவர் தனது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அதற்கு எதிராக அரச ஐக்கிய தாதியர் சங்கம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கே 4/87 இலக்க மனுவை விசாரித்த நீதிபதி வனசுந்தர, நீதிபதி எல்.எச்.டி. அல்விஸ் மற்றும் நீதிபதி செனவிரத்ன ஆகியோர் அமைச்சரவை தீர்மானத்தை இரத்து செய்து, அரசியலமைப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவில் உள்ள சமத்துவ விதி மீறப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தது.

அரசியலமைப்பின் உறுப்புரை 55(5) வழங்கியுள்ள அதிகாரத்திற்கு அமைய அடிப்படை மனித உரிமை மீறப்படும் பட்சத்தில் அமைச்சரவை தீர்மானம் தொடர்பில் அவ்வாறான தீர்மானத்தை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு அரசியலமைப்பே இந்த அதிகார வரம்பை வழங்கியுள்ளதாக, அந்த நீதிமன்ற தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தனது ஊடக அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“மக்கள் அதிகாரம் இல்லாத ரணில் விக்ரமசிங்க அரசாங்கம், ஜூலை 8, 9ஆம் திகதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத அரச ஊழியர்களுக்கு வெகுமதியாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வை, இந்த முன்னைய நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமைய” இலங்கை ஆசிரியர் சங்கம் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யுமென ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

யாழில் சூரிய கிரகணம்?

மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம்

சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் இன்று முதல் வழங்கப்படும்