உள்நாடு

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 எம்.பி.க்கள் தயார்

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக முன்னாள் அமைச்சரும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பதவி விலகாவிட்டால் இந்த வாரம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று(25) செய்தியாளர்களிடம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர்,

“113 இனை செர்க்கும்வரையில் சற்று காத்திருக்குமாறு நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியினை கேட்டுக் கொண்டோம்.

இப்போது 113க்கு பதிலாக 120 உள்ளன.

மீதமுள்ள 39 ஐ 65 உடன் சேர்த்தால், அது இப்போது 104 ஆக உள்ளது.

அதனையடுத்து, இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும் என மொட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் எழுத்துமூல அறிக்கையை வெளியிட்டனர்.

104 மற்றும் 10 இப்போது 114 ஆக உள்ளது. 20ம் திருத்தச் சட்டத்தின் பின்னர் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்த மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை விலக்கிக் கொண்டு மீண்டும் தமது கட்சிகளில் இணைந்து கொண்டனர்.

இப்போது 114, மூன்று மற்றும் 117. அத்துடன், அமைச்சர் நாலக கொடஹேவா, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் கோப் குழுவின் தலைவர் சரித ஹேரத் ஆகியோர் இடைக்கால அரசாங்கத்திற்கு இடமளித்து உடனடியாக பதவி விலக வேண்டும் என பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டனர். அந்த மூன்றும் சேர்ந்தால் இப்போது 120 ஆகிவிட்டது.

அதாவது தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இதுவரை தமது கருத்துக்களை வெளியிடாத மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பெருமளவானோர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள் என நான் நம்புகின்றேன்..” எனத் தெரிவித்திருந்தார்.

  • ஆர்.ரிஷ்மா 

Related posts

இறக்குமதியாகும் வாள்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை

வைத்தியசாலையில் இருந்து வௌியேறிய பாடகி சுஜீவா

இலங்கையர்களை மீள அழைத்துவரும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்