ஆளும் மக்கள் விடுதலை முன்னணியினர் பல தசாப்தங்களாக சமூகத்தில் வெறுப்பை பரப்பி வந்தனர். வெறுப்பைப் பரப்பி, அந்த வெறுப்பின் மூலம் வெற்றிகளைத் தமதாக்கிக் கொண்டனர். உலகில் எந்த நாடும் வெறுப்பைப் பரப்பி அபிவிருத்தியை முன்னேற்றத்தை காணவில்லை.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு 60 மாத கால ஜனாதிபதி ஆணையுள்ளது. இதில் 1/10 பங்கே முடிந்துள்ளன. இன்னும் கூட வெறுப்பை பரப்பி அரசியல் வெற்றிகளைப் பெற முயல்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களுடன் நேற்று (25) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
வெறுப்பை பரப்புவதை விட சேவைகள் நடக்க வேண்டும் என்பதையே நாட்டு மக்கள் விரும்புகின்றனர். வேலையில்லா பட்டதாரிகளுக்கு 35,000 வேலைகள் வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கினர். ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பை பெற்றுத் தருவோம் என வாக்குறுதி வழங்கினர்.
வெறுப்பையும் பகைமையையும் பரப்புவதன் மூலம் நாட்டில் நம்பிக்கையும் ஒற்றுமையுமே சீர்குலையும். எனவே வீராப்பு பேசுவதை நிறுத்திவிட்டு பணியைத் தொடங்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மணிக்கணக்கில் பேசிவிட்டு அந்த இந்த பட்டியல்களை முன்வைப்பதை விட, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதால் சட்ட ரீதியாக அவற்றுக்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன். அரசியல் படம் காட்டாமல் சட்டத்தை முறையாக பயன்படுத்துங்கள்.
அரசாங்கம் என்பது பெரும் பொறிமுறையாகும். இந்த பொறிமுறையில் பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும். அரசாங்கம் பொறுப்பை விதைக்கவோ அல்லது வேலை செய்ய முடியாமல் போனதற்கான காரணங்களை கூறவோ கூடாது. மக்களுக்கு சேவை செய்யவே ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மக்கள் ஆணையை வழங்கியது புலம்புவதற்கல்ல.
தேங்காய்களை குரங்குகள் சாப்பிடுகின்றன என அமைச்சர்கள் புலம்புகின்றனர். நாய்களுக்கு சோறு போடுவதால் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் புலம்புகின்றனர். தேய்காய் சம்பலும், சோறும் சாப்பிடுவதால் போதிய அரிசி இல்லை என்று அமைச்சர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
புலம்புவதால் நாட்டின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. நாட்டு மக்கள் மக்கள் ஆணையை வழங்கியது புலம்புவதற்கல்ல, தீர்வுகளை வழங்கவே ஆணையை வழங்கினர். எனவே புலம்புவதை விடுத்து வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.
323 கொள்கலன்களுக்கு என்ன நடந்தன? இன்னும் புரியாத புதிராகவே காணப்படுகின்றது.
அரசாங்கம் என்ற வகையில் பொது நிர்வாகத்தை திறம்பட முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் 323 கொள்கலன்கள் பரிசோதனைகள் இன்றி விடுவிக்கப்பட்டன.
323 கொள்கலன்களுக்கும் என்ன ஆனது என்பது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. போதைப்பொருள், மதுபானம், தங்கம், பாவனைக்கு உதவாத உணவுகள் இதில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
திருட்டு வழியில் கடத்தப்பட்ட பொருட்களை வைத்துக் கொண்டு கடத்தல்காரர்களே மறுமலர்ச்சியடைவர். இவற்றில் போதைப்பொருள் இருந்தால் போதைப்பொருள் வியாபாரிகளே மறுமலர்ச்சியடைவர் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறே, தற்போது காட்டுச் சட்டம் கோலோச்சி கொள்ளையர்கள், போதைப்பொருள் வியாபாரிகள், கடத்தல்காரர்கள், கொலைகாரார்களால் சமூகம் ஆட்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டம் சரியாக அமுல்படுத்தப்படவில்லை. புலனாய்வு மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து வகுப்புகள் எடுக்கிறோம் எம்மிடம் வாருங்கள் என வீராப்பு பேசினர்.
இருந்தாலும், பொலிஸ் மா அதிபர் தானாக ஆஜராகும் வரை அவர்களால் கைது செய்ய முடியாது போனது. நீதிமன்றத்திற்குள்ளேயே கொலையை திட்டமிட்ட பெண் கூட தலைமறைவாக உள்ளார். இன்றுவரை கண்டுபிடிக்கவில்லை. நாடு முழுவதும் கொலைகள் நடக்கின்றன.
எனவே நாட்டிற்கு மாற்றம் தேவை. இந்த மாற்றத்தை இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் ஊடாக ஜனநாயக ரீதியாக காண்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் கோரிக்கை விடுத்தார்.