அரசியல்உள்நாடு

அரசாங்கம் பொய், ஏமாற்று மூலம் மக்களை அச்சுறுத்தி வருகின்றது – சஜித் பிரேமதாச

மக்கள் விடுதலை முன்னணி அதிகாரத்தைக் கைபற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படும் ஜனாதிபதி அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறார்.

ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரசாங்க நிதியில்லாமல் உகந்த சேவையைப் பெற்றுத் தருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதையும் சரியாக செய்யத் தெரியாது, பொய்யும் ஏமாற்றுமே தொடர்ந்து வருகிறது. அரசாங்கமும் ஜனாதிபதியும் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு மாத்திரமன்றி முழு மக்களுக்கும் சேவையாற்றுவதே ஜனாதிபதியின் பொறுப்பாகும்.

எனவே இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை மக்களின் வாக்குப்பலத்தால் வெற்றிபெறச் செய்யுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பொத்துவில் தேர்தல் தொகுதி லாஹுகல பிரதேசத்தில் நேற்று (15) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

எமது நாட்டு மக்கள் ஜே.வி.பியையும், திசைகாட்டியையும் ஆதரித்து ஆட்சியை வழங்கினர்.

வளமான நாட்டைக் கட்டியெழுப்புகின்றோம் என்று கூறினர். ஆனால் இன்று இந்த அரசாங்கம் முன்வைத்த கொள்கைப் பிரகடனத்தில் தெரிவித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

ஊழல்வாதிகளை பிடிப்போம் என்றனர். போதுமான எந்த ஏற்பாடுகளும் இதுவரையில் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பொருட்களின் விலைகள் அதிகரித்து வருமானம் குறைந்துள்ள நிலையில் இலட்சக்கணக்கான மக்கள் தமது மூன்று வேளை உணவையும் பெற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

வறுமை அதிகரித்து, வருமான மூலங்கள் குறைந்து, வாழ்வாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்த அரசாங்கம் பொய், மோசடிகளைக் கோலோச்சி மக்களை ஏமாற்றி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மின்கட்டணத்தை 33% குறைப்போம் என்று வாக்குறுதிகளை வழங்கினர். மக்கள் முயற்சியால் 20% மின்கட்டணம் குறைக்கப்பட்டது.

மக்களின் கேள்விகளாலே இந்த மின்கட்டணம் குறைக்கப்பட்டது. மீதமுள்ள 13% மின் கட்டணத்தை குறைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

பால் மா, அரிசி, தேங்காய், உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் இன்று அதிகரித்துள்ளன.

இந்த அரசாங்கத்தினால் நாட்டுக்கு உப்பைக் கூட சரியாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த போக நடவடிக்கைகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கான உரம் இன்னும் வழங்கப்படவில்லை. யானை மனித மோதலை தடுக்கும் திட்டமும் இந்த அரசாங்கத்திடம் இல்லை.

பெரும் அறிவாளிகள் எனக் கூறும் ஆளும் தரப்பு அமைச்சர்களின் கூற்றுப்படி அனைத்தும் குரங்குகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை விரிவுபடுத்துவதாக கூறினாலும், டீசல் மற்றும் அனல் மின்நிலைய மாபியாவில் அரசு சிக்கியுள்ளது.

இவர்கள் கூறிய பல விடயங்களை செய்ய முடியாது புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.

மக்கள் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வுகளை முன்வைத்த பாடும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழா ஒத்திவைப்பு

தென்கொரியா – இத்தாலியில் இருந்து வந்த 181 பேர் மட்டக்களப்பிற்கு

கொரோனாவிலிருந்து 3,100 பேர் குணமடைந்தனர்