(UTV | கொழும்பு) –
அரசாங்கம் சைவமக்களை மனம் நோகச்செய்து வருகிறது. கோவில்களையும் காணிகளையும் அபகரித்து வருகிறது. இது அரசாங்கத்துக்கு நல்லதல்ல என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் கவலை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சைவமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர், அரச அதிகாரிகள் எவ்விதமான அக்கறையும் இல்லாமல் இருப்பது மனவருத்தத்தை தருகிறது.
ஜனாதிபதி யாழ்ப்பாண விஜயத்தின்போது நல்லை ஆதீனத்தின் குரு முதல்வரையும் என்னையும் சந்தித்து கலந்துரையாடியபோது, காங்கேசன்துறை தல்செவன ஹொட்டல் பயன்படுத்தப்படுகின்ற நிலம் சைவ சமயத்தவர்களின் சுக்கிரபாத திருவார சத்திரம் இருந்த இடம். இந்த சத்திரம் இடிக்கப்பட்டு ஹொட்டல் பயன்பாட்டுக்காக இந்த நிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலம் ஒப்படைக்கப்பட வேண்டும். எத்தனையோ அடியவர்கள் உணவு உண்பதற்காக அன்னதானம் நடைபெற்ற இடமாக, காலையில் சூரிய வழிபாடு செய்யும் இடமாக விளங்க சித்தராலே கட்டப்பட்ட சுப்பிரபாத சத்திரக் காணியை கையளிக்கவேண்டும் என ஜனாதிபதியிடம் வேண்டுதல் விடுத்தபோது உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுத்து கையளிப்பேன் என்று ஜனாதிபதி வாக்குறுதி அளித்தார்.
இச்சந்திப்பு ஜனவரி மாதம் நடைபெற்று இன்றுடன் 11 மாதங்கள் ஆகின்றது. எவ்விதமான நடவடிக்கையும் இல்லை. அதேநேரத்திலே கீரிமலை காங்கேசன்துறை வீதியில் ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்ட நிலப்பரப்பில் ஆதி சடையம்மா மடம் உட்பட எத்தனையோ தென்மை வாய்ந்த அந்தண கிருஸ்ணர் கோவில், உச்சிப்பிள்ளையார் கோவில் அழிக்கப்பட்டன. இது தொடர்பாக ஜனாதிபதிக்கு நேரில் நல்லை ஆதீனத்தினால் எடுத்துரைக்கப்பட்டபோதும் விரைவாக விடுவித்து, அந்த ஆலயங்களை புனருத்தாரனம் செய்வதாக உறுதியளித்தார். ஆனால், இன்று வரை அது நடைபெறவில்லை.
சைவ மக்கள் மிகுந்த மனவருத்தத்துடன் இந்த விடயத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் கதைத்திருத்தார்கள். ஆனாலும், இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் எழுதுகின்ற கடிதங்களுக்கு பதில்களும் கிடைப்பதில்லை.
இன்று இலங்கை வாழ் சைவ மக்களை மனம் நோகச் செய்கின்ற விடயங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. இந்த விடயத்தில் சைவ மக்களின் மன நிலையை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று இந்த தீபாவளியில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். சைவ மக்களின் கோவில்கள், நிலங்கள் பறிபோய்க்கொண்டிருக்கின்றன. திருகோணமலை கோவில் பாதைகளில் அடாத்தாக போடப்பட்ட கடைகளை அகற்றுமாறு பல தடவைகள் வேண்டியும் அந்தக் கடைகள் அகற்றப்படவில்லை. அதற்கு எத்தகைய முயற்சியும் எடுக்கப்படவில்லை.
கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகிலிருந்த மடங்கள் அழிக்கப்பட்டன. ஆனால், அதனை கட்டுவதற்கான அனுமதியும் இல்லை. பௌத்த சமயத்தவர்களின் கட்டடங்கள் கட்டப்பட்டுக்கொண்டு வருகிறது. எனவே, இந்த நாட்டில் சைவ மக்களுக்கு தருகின்ற தொல்லை என்பது எல்லையற்றது. இது இந்நாட்டுக்கு உகந்ததல்ல. சைவ மக்களின் சாபத்துக்கு இவர்கள் ஆளாகின்றார்கள். ஜனாதிபதிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் கூற வருவது என்னவெனில், தீபாவளியை முன்னிட்டு குறித்த நிலங்கள் மீட்கப்படாவிட்டால் எதற்கும் அர்த்தமில்லை என்றார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්