தேர்தலை இலக்காகக் கொண்டு அரசாங்கம் சில சதித்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
கம்பஹாவில் ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தாம் என்ன செய்கின்றோம் என்பது அரசாங்கத்துக்கும் தெரியாது. அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பது அமைச்சர்களுக்கு தெரியாது.
அவ்வாறானதொரு நிலைமையே தற்போது காணப்படுகிறது. அனுபவமற்றவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தால் இதுவே இடம்பெறும்.
தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இவர்கள் கூறினாலும், நடைமுறையில் அதனை அவதானிக்கக் கூடியதாக இல்லை. பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் கூட இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை.
எனவே தேசிய பாதுகாப்பு தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் எம்மால் திருப்தியடைய முடியாது.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் போன்றோர் தலைமறைவாகியுள்ளனரா அல்லது மறைத்து வைக்கப்பட்டுள்ளனரா என்பது எமக்குத் தெரியாது. அவர்களை கண்டு பிடிக்க வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுடையதாகும்.
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்குரிய நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட வேண்டும்.
தேர்தலை இலக்காகக் கொண்டு அரசாங்கம் சில சதித்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளோம்.
தேர்தல் காலங்களில் பொது சொத்துக்கள் பிரசாரங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றமை சட்ட விரோதமானதாகும் என்றார்.
-எம்.மனோசித்ரா