திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் நேற்று (20) வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், தெரிவத்தாட்சி அதிகாரியுமான சிந்தக அபேவிக்கிரமவிடம் ஒப்படைத்தனர்.
முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன.
முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பொத்துவில், அக்கரைப்பற்று, நிந்தவூர், இறக்காமம், சம்மாந்துறை, காரைதீவு, நாவிதன்வெளி ஆகிய பிரதேச சபைகளிலும், அக்கரைப்பற்று மாநகர சபையிலும் போட்டியிடுவதற்கான மனுக்களை தாக்கல் செய்தது.
முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை கருத்து தெரிவிக்கையில், “இம்முறை அம்பாறை மாவட்டத்தில் உள்ள எல்லா முஸ்லிம் உள்ளூராட்சி சபைகளிலும் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
எல்லா சபைகளினதும் அதிகாரங்களையும் எமது கட்சி வெற்றி கொள்ளும் என்றார்”.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐ.எல்.எம்.மாஹிர் கருத்து தெரிவிக்கையில், “இன்றைய சூழலில் எமது கட்சி எல்லா சபைகளினதும் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் என்றார்”.
ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன் அலி கருத்து தெரிவிக்கையில், “இன்றைய அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை”. என் கருத்துத் தெரிவித்தார்.
-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்