அரசியல்உள்நாடு

அமைச்சர் விஜித ஹேரத் முஸ்லிம்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது – இம்ரான் எம்.பி

அமைச்சர் விஜித ஹேரத் முஸ்லிம்கள் தொடர்பாக அக்குரணையில் தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்

ஊடகங்களுக்கு இது குறித்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

தேசிய மக்கள் சக்தியில் வெற்றி பெற்ற முஸ்லிம்களுக்கு அனுபவம் போதாமையினாலேயே அமைச்சரவையில் அவர்கள் எவரும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று அமைச்சர் அங்கு தெரிவித்திருந்தார்.

தேசிய மக்கள் சக்தியின் மூலம் தெரிவான 159 பேரில் எத்தனை பேர் கடந்த கால பாராளுமன்ற அனுபவங்களைப் பெற்றவர்கள், தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுள் எத்தனை பேர் கடந்த கால அமைச்சு அல்லது பிரதியமைச்சு அனுபவம் பெற்றவர்கள் என்பதை அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் ஒரு சிலரைத்தவிர ஏனைய அனைவரும் புதியவர்கள் தான். அவர்களுள் பலருக்குத்தான் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல குறைந்த பட்சம் முஸ்லிம் ஒருவருக்கும் அமைச்சு வழங்கியிருக்கலாம். இதனை வழங்குகின்ற மனநிலை தேசிய மக்கள் சக்திக்கு இல்லை.

இதனை மறைப்பதற்காகத் தான் அனுபவக்குறைவு கதையை அமைச்சர் சொல்கின்றார் என்பது மிகவும் தெளிவாக தெரிகின்றது.

இதனைவிட அந்த சந்திப்பிலே முஸ்லிம் அமைச்சர் நியமனம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் விஜித ஹேரத் பதிலளிக்கும் பாணியை பாருங்கள். அப்போது அவர்களது உள்ளத்தில் என்ன இருக்கின்றது என்பது மிகத் தெளிவாகத் தெரியும்.

அமைச்சர் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு அனுபவமில்லை என்று கூறும் அமைச்சர் ஹேரத் அமைச்சு செயலாளர்களில் முஸ்லிம்கள் நியமிக்கப்படாமை குறித்து என்ன சொல்லப் போகின்றார்.

தற்போதைய அமைச்சுச் செயலாளர்களில் இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமன்றி ஏனைய துறைகளைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள்.

எனவே, இலங்கை முஸ்லிம்களில் துறைசார்ந்த ஒருவராவது அமைச்சுச் செயலாளர் பதவிக்கு பொருத்தமானவர் இல்லையா? என்பதை அமைச்சர் தெளிவு படுத்த வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் ஒருவருக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வழங்கியமையை தேசிய மக்கள் சக்தி முஸ்லிம் மக்களுக்கு வழங்கிய பெரிய அருட்கொடை போல அமைச்சர் ஹேரத் சொல்கிறார்.

கடந்த 2020 பாராளுமன்றத் தேர்தல் மூலம் அம்பாறை மாவட்டத்தில் ஹரீஸ், பைசல் காசீம், அதாவுல்லா, முஸர்ரப் என நான்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் சுமார் 60 ஆயிரம் முஸ்லிம் வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கு அளிக்கப்பட்டதால் தான் அம்பாறை மாவட்ட மக்கள் இரண்டு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இழந்தனர் என்பதை தேசிய மக்கள் சக்திக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்.

இந்த 60 ஆயிரம் வாக்குகளில் சிலநூறு வாக்குகள் கேஸ் சிலிண்டர் சின்னத்துக்கு அளிக்கப்பட்டிருந்தால் அங்கு ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டிருப்பார்.

ஏனைய வாக்குகளை மரத்துக்கோ மயிலுக்கோ முஸ்லிம்கள் அளித்திருந்தால் அங்கும் இரண்டு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள். இதன் மூலம் கடந்த முறையைப் போல 4 உறுப்பினர்களைப் பெற்றிருக்கலாம்.

எனவே, அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் தேசிய மக்கள் சக்திக்கு அதிகளவு வாக்குகளை அளித்ததனால் தான் தமது இரண்டு உறுப்பினர்களை இழந்துள்ளனர். இதற்குப் பரிகாரமாக தேசிய மக்கள் சக்தி ஒரு தேசியப்பட்டியல் உறுப்பினரையே வழங்கியுள்ளது.

சரியாகப் பார்த்தால் தேசிய மக்கள் சக்தி அம்பாறை மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம் உறுப்பினர்களை தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்திருக்க வேண்டும். இது தான் யதார்த்தம்.

கவலையான செய்தி என்னவென்றால் சுமார் 10 இலட்சம் முஸ்லிம் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் முஸ்லிம்களைப் புறக்கணிக்கும் செயற்பாடுகளை இப்போதே ஆரம்பித்து விட்டமை தான் என்றார்

Related posts

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

முகக்கவசம் அணியாத 1,214 பேர் சுயதனிமைப்படுத்தலில்

உண்ணாவிரத போராட்டம் 4வது நாளாகவும் தொடர்கிறது