சூடான செய்திகள் 1

அமைச்சர் றிஷாத்தின் சேவையின் பிரதிபலனே வன்னியில் 4 சபைகள் கிடைத்தது

(UTV|COLOMBO)-நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வன்னியில் 4 சபைகளின் தவிசாளர்களையும் 2 பிரதித் தவிசாளர்களையும் 66 உறுப்பினர்களையும் (மன்னார் – 34, வவுனியா 20, முல்லைத்தீவு 12) பெற்று வன்னியிலே மாபெரும் அங்கீகாரத்தை மக்கள் வழங்கியமை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் சேவையின் வெளிப்பாட்டுக்கான அடையாளமே என மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியோகு (செல்லத்தம்பு) தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து வெளியிடுகையில்

வன்னி மாவட்டமென்பது வவுனியா, மன்னார், முல்லைத்தீவு என்று மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசங்களாகும். முன்னர் ஒரு சபையை மாத்திரம் வைத்திருந்த மக்கள் காங்கிரஸ் இத்தேர்தலில் வன்னியில் 4 சபைகளை கைப்பற்றியுள்ளது. இதில் (இரு முஸ்லிம் தவிசாளரும், தமிழர் இருவரும்) மேலும் இரு பிரதித் தவிசாளரையும் (ஒரு முஸ்லிம், ஒரு தமிழர்) பெற்றுக்கொண்டமை தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து ஒரு தலைமையின் கீழ் இப்பாரிய வெற்றிக்கு அரும்பங்காற்றியுள்ளனர் என்றே கூற வேண்டும்.

வன்னியிலே தமிழர்களும் முஸ்லிம்களும் மாற்றத்தை நோக்கி அமைச்சர் றிஷாட் பதியுதீன்  அவர்களின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்தமை மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு சேவை செய்யக்கூடிய பண்பே இந்த வெற்றியில் மறைந்திருக்கும் மர்மமாகும்.

இன நல்லிணக்கத்துக்கான பாலமாக வன்னியிலே முன்னேறிச் செல்ல வேண்டிய தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து வாழ வேண்டிய காலம் கனிந்திருக்கும் நிலையில் சிலர் குட்டையைக் குழப்பி குளிர் காய நினைக்கின்றனர். இவ்வாறான தீய சக்திகளுக்கு நாம் ஒரு போதும் துணைபோய்விடக் கூடாது என்று ஆசிர்வாதம் சந்தியோகு (செல்லத்தம்பு) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கும் போது அமைச்சர் றிஷாட் பதியுதீனை தமிழ் மக்களின் எதிரியாகக் காட்ட சில தீய சக்திகள் செயற்படுகின்றன. அமைச்சர் அன்று தொட்டு இன்று வரை தமிழ் மக்களுடன் மிகவும் அன்யோன்னியமாகவே பழகி வருகின்றார். என்பதை எவராலும் மறுதலிக்க முடியாத உண்மையாகும்.

வன்னியில்  தனது கட்சிக்குக் கிடைத்த தவிசாளர் பதவிகளில் இரு தவிசாளர்களையும் ஒரு பிரதித் தவிசாளரையும் (தமிழர்களை) நியமித்தமை அவரது இன ஒற்றுமையின் பண்பை மேலோங்கச் செய்துள்ளது என்பதே நிதர்சனம்.

யுத்த முடிவின் பின்னர் மெனிக்பாமிற்கு வந்தடைந்த தமிழ் மக்களை அரவணைத்து அவர்களுக்கான அடிப்படை வசதிகள் தொட்டு மீள்குடியேறும் வரை இரவு பகலாக தன்னை அர்ப்பணித்து செயற்பட்ட ஆளுமை மிக்க தலைவராக நான் காண்கின்றேன். என்று மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியோகு (செல்லத்தம்பு) தெரிவித்தார்.

 

Related posts

மொட்டுக்கட்சி வேட்பாளர் யார் ? 7ஆம் திகதி அறிவிப்பு வருமாம்

மீண்டும் தனியார் பஸ் வேலை நிறுத்தம்…

மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டனர்