சூடான செய்திகள் 1

அமைச்சர் ரிஷாட் மீது வேண்டுமென்றே குற்றங்களை சுமத்துவதை விடுத்து, தீர விசாரித்து உண்மை நிலையை கண்டறிய ஒத்துழைப்பு வழங்குங்கள் – பாராளுமன்றில் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கோரிக்கை

(UTV|COLOMBO)-அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வேண்டுமென்றே சுமத்திக்கொண்டிருக்காமல் ,உண்மை நிலையை கண்டறிய ஒத்துழைப்புகளை வழங்குமாறு பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் பாராளுமன்றத்தில் இன்று (21) கோரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் கூறியதாவது ,

“..இந்த சபையிலே ஒரு சமூகத்தின் மீதான பழிகளையும் அபாண்டங்களையும் சுமத்துகின்ற சில முன்னாள் அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றேன். இந்த நாட்டின் ஜனாதிபதி ,பிரதமர் மற்றும் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும ஆகியோர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தமக்கு வழங்கப்பட்ட அமைச்சை திறம்பட செய்து வருகின்றார் என பல முறை கூறியுள்ளனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஒரு திறமையான அமைச்சர் என மட்டக்களப்பிலே இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதியும் பரிந்துரை செய்திருக்கின்றார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச , டிலான் பெரேரா மற்றும் சில தமிழ் எம் பிக்கள் அமைச்சர் மீது பல வீதமான குற்றச்சாட்டுகளை சுமத்திவருகின்றனர். இந் நாட்டில் வாழும் 22இலட்சம் முஸ்லிம்களும் அமைச்சர் ரிஷாட்டை ஒரு சிறந்த தலைவராக ஏற்றுக்ருக்கொண்டிருகின்றனர் . அமைச்சர் ரிஷாட் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணையில் சுமத்தப்பட்டுள்ள பத்து குற்றச்சாட்டுகளுக்கும் அமைச்சர் ரிஷாட் மிக தெளிவான பதிலை வழங்கி இருக்கின்றார். இந்த ஆவணத்தை ஹன்சாட்டில் இணைக்குமாறு கோருகின்றேன்.

எதிர் காலத்திலே முஸ்லிம் சமூகத்தின் ஆதரவு இரண்டு கட்சிகளுக்கும் தேவையானதுதான். முன்னைய அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது வேண்டுமென்றே கொண்டுவரப்பட்டுள்ள இந்த நம்பிக்கை இல்லா பிரேரணை முறைப்படியாகவோ ஆதாரங்களுடனோ கொண்டுவரப்படவில்லை. எனவே சபாநாயகர் மற்றும் பிரதமர் இந்த குற்றச்சாட்டுகளை முறைப்படி விசாரித்து அதில் தான் குற்றம் காணப்பட்டால் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்து விடுவதாக அமைச்சர் ரிஷாட் மிக தெளிவாக கூறியுள்ளார். அதே போன்று எமது தலைமைத்துவத்தில் பிழை கண்டால் நாமும் எமது அமைச்சு பதவிகளையும் தூக்கி எறிவோம்.

தமிழ் பேசும் உறுப்பினர்களான வியாழேந்திரன் , சிவசக்தி ஆனந்தன் போன்றோருக்கு நான் ஒன்றை கூற விரும்புகின்றேன். குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சருடனும் ஆளுனர்களுடனும் நீங்கள் நேரடியாக கதைக்க வேண்டும். உண்மையான விடயங்களை அறிந்துகொள்ள வேண்டும். நண்பனாகவே இதனை நான் கூறுகிறேன்.

பிரதம மந்திரியும் இதனை விசாரித்து நடவடிக்கை எடுப்போம் என மிக தெளிவாக கூறுகின்றார். (21 )ஆம் திகதி நடந்த மிலேச்சத்தனமான கொடூரமான தாக்குதல் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்தினரான எங்களையும் உலுக்கி இருக்கின்றது. இந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கத்தோலிக்க உறுப்பினர்கள் அனைவரும் தமது இனத்தை சரியாக வழிநடாத்தி, தாங்களும் பொறுமை காத்து, மக்களையும் சாந்தப்படுத்தினர். எந்த ஒரு கிறிஸ்த்தவ பாராளுமன்ற உறுப்பினரும் இந்த சபையிலே முஸ்லிம் சமூகத்தையோ முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையோ இழிவுபடுத்தவில்லை.

1915ஆம் ஆண்டு தொடக்கம் முஸ்லிம் சமூகம் கலவரங்களாலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டிருகின்றோம். எனினும் நாங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட எந்த வேளையிலும் எம்மை தாக்கியோர்கள் சார்ந்த சமூகத்தை நாம் என்றுமே பழிவாங்கவும் இல்லை. வஞ்சிக்கவும் இல்லை. அவர்களுக்கு எதிராக யுத்தத்தை மேற்கொள்ளவும் இல்லை.

முஸ்லிம்கள் மீதான கடந்த கால அட்டூழியங்களின் பின்னணியாக இருந்த நாமல் குமார அமித் வீரசிங்க போன்றோர்கள் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர் . கடந்த 13ஆம் திகதி முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், சொத்துக்கள், திட்டமிட்டு உடைக்கப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டும் சூறையாடப்பட்டும் இருக்கின்றன. பள்ளி வாசல்களுக்குள் சிறு நீரை கழித்து குர் ஆனையும் எரித்து விட்டு சென்றனர். இவ்வாறு கொடுமைகள் செய்திருந்த போதும் நாங்கள் உச்சக்கட்ட பொறுமையுடன் இருக்கின்றோம்.

“பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கின்றான்” என்ற திருக்குர் ஆனின் வசனத்திற்கேற்ப நாம் வாழ்கின்றோம். இந்த நாட்டிலே ஐக்கியத்தை விரும்புபவர்கள் நாங்கள்.இஸ்லாத்தில் பயங்கரவாதமில்லை .இஸ்லாமிய பயங்கரவாதம், முஸ்லிம் பயங்கரவாதம் என்று ஒன்றுமே இல்லை .ஐ. எஸ் பயங்கரவாதிகளை பூண்டோடு ஒழிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் . சகோதரர் ஹிஸ்புல்லாஹ் உட்பட சுமார் 3000 பேர் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஐ .எஸ். ஐ. எஸ். இயக்கத்தின் பயங்கரவாதி சஹ்ரானை கைது செய்யுமாறு காத்தான்குடி வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்தமையை நான் இங்கு ஞாபகப்படுத்த வேண்டும்.

அது மாத்திரமன்றி குண்டு தாக்குதல் நடைபெற்று பத்து நாட்களுக்குள் பயங்கரவாதிகளை காட்டிக்கொடுத்து நாட்டிலே மீண்டும் உடனடி அமைதிக்கு வித்திட்ட சமூகம் முஸ்லிம்கள் என்பதை நீங்கள் என்றுமே மறந்து செயற்பட கூடாது என நான் கேட்டுக்கொள்கின்றேன். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுகளுக்கான அவரது விளக்கமடங்கிய ஆவணத்தை ஹன்சார்ட்டில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் கோருகின்றேன்..”

 

-ஊடகப்பிரிவு-

Related posts

கொழும்பை நோக்கி வரும் ஐக்கிய தேசிய கட்சியினரின் வாகன எதிர்ப்பு பேரணி

புகையிரத வேலை நிறுத்தம் தொடரும்

பயங்கரவாத அவதானம் எதுவும் இல்லை – ஜனாதிபதி செயலகம்