அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தனது 100 வயதில் காலமானார்.
ஜோர்ஜியாவில் உள்ள இல்லத்தில் ஜிம்மி கார்ட்டர் காலமானார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.
அவர் எனக்கு மாத்திரமல்ல அமைதி சமாதானம் மனித உரிமை சுயநலமற்ற அன்பு ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் ஒரு கதாநாயகன் என ஜிம்மி கார்ட்டரின் மகன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 39வது ஜனாதிபதியாக 1977 முதல் 81ம் ஆண்டுவரை கார்ட்டர் பதவிவகித்தார்
கார்ட்டரின் பதவிக்காலத்தில் அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சி பணவீக்கம் பொருளாதார மந்த நிலை போன்றவற்றால் பாதிக்கப்பட்டது,
சர்வதேச அளவில் ஜிம்மி கார்ட்டர் பல மோதல்களிற்கு தீர்வை காணமுயன்றார்.
மத்திய கிழக்கில் டேவிட் காம்ப் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.பனாமா கால்வாயை பனாமாவிடம் மீள ஒப்படைத்தார்.
சோவியத்த தலைவர் லியனிட் ப்ரேஷ்நேவுடன் சோல்ட் 11 அணுவாயுத குறைப்பு உடன்படிக்கையில் கைசாத்திட்டார்.
எனினும் ஈரான் புரட்சியை தொடர்ந்து உருவான ஈரான் பணயக்கைதிகள் நெருக்கடி கார்ட்டரின் அரசியல் வாழ்க்கையை மோசமாக பாதித்ததுடன் அடுத்த தேர்தலில் அவர் ரொனால்ட் றீகனிடம் தோற்றுப்போகும் நிலையை உருவாக்கியது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் ஜிம்மி கார்ட்டரை கொள்கை நம்பிக்கை மற்றும் பணிவு ஆகிய குணங்களை கொண்டவர் என வர்ணித்துள்ளார்.
அமெரிக்கர்கள் ஜிம்மி கார்ட்டருக்கு நன்றிக்கடன் செலுத்தவேண்டியவர்கள் என ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கார்ட்டர் ஏனையவர்களிற்கு சேவையாற்றுவதற்காக வாழ்ந்தவர் என முன்னாள் ஜனாதிபதி பில்கிளின்டன் தெரிவித்துள்ளார்.