அரசியல்உள்நாடு

அபிவிருத்தியின் பலன்களை நியாயமாக அனுபவிக்கும் சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – ஜனாதிபதி அநுர

அபிவிருத்தியின் முழு பலன்களையும் நியாயமாக அனுபவிக்கும் வளமான சமூகத்தை கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.

நாட்டு மக்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார பாதுகாப்பிற்காக அரச மற்றும் அரச சாரா நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து இதன்போது கலந்துரைாடப்பட்டன.

பொருளாதார ரீதியாக வலுவூட்டல் தேவைப்படுபவர்களுக்கு கடன் வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இதற்காக சமுர்த்தி நிதியிலிருந்து 55 பில்லியன் ரூபாய்களை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

தேசிய முன்னுரிமைகள் மற்றும் தேவைகளை அடையாளம் கண்டுகொள்வதுடன், சர்வதேச தரங்களை கருத்திற்கொண்டு பெண்கள், குழந்தைகள், பாதிக்கப்படக்கூடிய மற்றும் வரப்பிரசாதங்கள் கிடைக்காத நபர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வலுவூட்டலுக்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவன வசதிகளை மேம்படுத்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் மலர்மதி கங்காதரன் மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகள் பலரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

இலங்கை மின்சார சபைக்கு 6 புதிய புதுப்பிக்கத்தக்க திட்டங்கள்!

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் மட்டு

ஆறு மாத காலப்பகுதியில் 129 பில்லியன் ரூபா கடனை செலுத்தியுள்ளோம்.