உள்நாடு

அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

(UTV | கொழும்பு) –

நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதும், இன்று நாடு நிறைவேற்ற வேண்டிய இரண்டு பிரதான பொறுப்புகள் எனவும் எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அந்த இரு இலக்குகளை அடைவதில் தன்னுடன் இணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் அதேவேளையில், நல்லிணக்கம் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, எதிர்வரும் மார்ச் மாதம் அது தொடர்பான விசேட அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

பதுளை குருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவில்  நேற்று  கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரேயொரு முஸ்லிம் தேசிய பாடசாலையான குருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை பாடசாலை மாணவர்கள் அன்புடன் வரவேற்றனர்.  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியின் புதிய இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு சஞ்சிகையை பாடசாலை அதிபர் ஏ.ஏ சமூனினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபெறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதக்கங்களையும் வழங்கி வைத்தார். கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி, நினைவுப் புத்தகத்தில் ஒரு குறிப்பொன்றை பதிவிட்டதோடு, கல்லூரி ஆசிரியர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:

நாட்டின் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் வகையில், அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு உலக நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ளோம். இந்த வேலைத்திட்டத்துடன் நாம் முன்னோக்கிச் சென்றால், நிச்சயமாக நாட்டில் நிலையான பொருளாதாரத்தை உருவாக்க முடியும். அதேநேரம் நாட்டின் ஏனைய பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.

எனவே, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என அழைப்பு விடுத்தேன். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை. இந்த நாட்டில் இன்று தீர்க்கப்பட வேண்டிய இரு பிரதான பிரச்சினைகள் உள்ளன. அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எம்முடன் இணைந்து செயற்படுமாறு மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன்.

நாட்டில் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது முதல் விடயமாகும். இரண்டாவது விடயம் நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகும். ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல, நாட்டில் நல்ல பொருளாதாரம் மற்றும் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அத்துடன் இலங்கையர் என்ற அடையாளம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனைத்து மக்களும் இலங்கையர்களே. இன்று எமது நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சிங்கள அடையாளத்தையும், மதத்தையும், கலாசாரத்தையும் பாதுகாத்து முன்னோக்கிச் செல்ல நாம் செயற்படுகின்றோம். ஏனைய இனத்தினரையோ, மதத்தினரையோ ஒருபோதும் சிறுமைப்படுத்தக்கூடாது. நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அனைவரும் இலங்கையர்களாக முன்னோக்கிச் சென்றால் மட்டுமே வளமான நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வுகளை வழங்கியுள்ளோம், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கி வருகின்றோம். அத்துடன், ஏனைய இனத்தவர்களின் பிரச்சினைகளிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. யுத்தம் நிறைவடைந்த போதிலும், ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளன. அரசாங்கம் என்ற வகையில் அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்..

சிலர் தமது கிராமங்களை இழந்துள்ளனர். எனவே, 1985 ஆம் ஆண்டு வரைபடத்தின் பிரகாரம் செயல்பட முடிவு செய்துள்ளேன். அந்த வரைபடத்தின்படி, தற்போது எதாவது கிராமம் காடுகளால் மூடப்பட்டிருந்தால், அந்த கிராமங்களில் உள்ள மக்கள் குடியேற அனுமதிக்க வேண்டும். அதன் உரிமையை அந்த மக்களுக்கு வழங்க வேண்டும். அதன்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் ஏற்கனவே அந்த உரிமைகளைப் பெற்றுள்ளனர்.

இன்னும் சிலருக்கு அந்தப் பிரதேசங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நாங்கள் அந்த பிரச்சினைகள் தொடர்பில் தனித்தனியாக பணியாற்றி வருகிறோம். அத்துடன், காணாமற்போனோர் பிரச்சினை, இழப்பீடுகள் உட்பட இதுவரையில் தீர்க்கப்படாத சகல பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தி வருகின்றோம்.

அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்தாலும், வலுவான பொருளாதாரம் இல்லை என்றால், மீண்டும் அதே பிரச்சினைகள் தலைதூக்கும். மலையக தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, செயல்பட்டு வருகிறோம். அவர்களுக்கு காணி, கல்வி மேம்பாடு உள்ளிட்ட உரிமைகளை வழங்க விசேட திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.

அத்துடன் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சரவையில் கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். கொவிட் காலத்தில் இறந்த முஸ்லிம்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரச்சினை எழுந்தது. அதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஏனைய நாடுகள் அது பற்றிய முடிவுகளை பிற்காலத்தில் மாற்றிக்கொண்டாலும், இலங்கையில் அந்த முடிவுகளை மாற்ற நீண்ட காலம் எடுத்தது.

அதற்கான காரணங்களை ஆராய்ந்து, அத்தகைய நிலைமை மீண்டும் ஏற்படாமல் இருக்க சட்ட ரீதியான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இறுதிச் சடங்குகளை எப்படிச் செய்வது என்பது அந்தந்த மதத்தின்படி முடிவு செய்யப்பட வேண்டும். இது குறித்து எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதமளவில் அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்க்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.

   

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இரு மாவட்டங்களுக்கான பாடசாலைகளை திறக்கும் சாத்தியம்

கொரோனா ஜனாஸா எரிப்பின் அரசின் நிலைப்பாடு ஒரு பழிவாங்கல் [VIDEO]

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று முதல் பி.சி.ஆர் பரிசோதனை