இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் ஒன்றாக செயற்பட்டால் இலங்கையை உலகில் மிளிரும் நாடாக மாற்றியமைக்க முடியும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சர்வமத தலைவர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு வருகை தந்து, அங்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் உலமாக்களுடன் கலந்துரையாடியதுடன் துஆ பிராத்தனைகளிலும் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அனைத்து இனத்தவர்களும் ஒன்றாக இணைந்து வாழும் செளபாக்கியமான நாடு.
அதனை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதன் தேவைப்பாடு குறித்து பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் மத குருமார்களுடன் கலந்துரையாடினோம்.
குறிப்பாக கிளீன் சிறிலங்கா வேலைத்திட்ட மூலம் ஆண்மிக மற்றும் சிந்தனை ரீதியான மாற்றம் ஏற்படுவதற்கான வழி செய்யப்பட வேண்டும் என்ற மிகவும் ஆர்வத்துடன் இவர்கள் இருக்கின்றனர்.
மனிதர்கள் என்றவகையில் நாங்கள் மிகவும் முன்னேற்றமடைந்த தேசமாக மாறுவதற்கு எமது உள்ளக முன்னேற்றம் சமூக முன்னேற்றம் மற்றும் ஆண்மிக ரீதியான முன்னேற்றம் அத்தியாவசியமாகும். அவ்வானதொரு முன்னேற்றமே எமது தேவைப்பாடாகும்.
அதன் பிரகாரம் இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக செயற்பட்டால், இலங்கையை உலகில் மிளிரும் நாடாக மாற்றியமைக்க முடியும் என்றார்.
-எம்.ஆர்.எம்.வசீம்