வகைப்படுத்தப்படாத

அனைத்து அரச ஊழியர்களும் அபிவிருத்தியின் முன்னோடிகளாக மாற வேண்டும் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – அனைத்து அரச ஊழியர்களும் அடுத்துவரும் ஆண்டுகளில்  அபிவிருத்தியின் முன்னோடிகளாக செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி செயலக பணிக்குழுவினருடனான சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒத்துழைக்க வேண்டியது அரச ஊழியர்களின் பொறுப்பாகும். அந்த அபிவிருத்தி திட்டங்களை நெறிப்படுத்தும் நிலையம் ஜனாதிபதி செயலகமே ஆகும். அதன்போது உற்பத்திதிறன் கூடிய நிறுவனமாக ஜனாதிபதி செயலகத்தை மாற்றும் நோக்குடன் ஜனாதிபதி இன்றைய இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

பதின்நான்கு லட்சம் அரச ஊழியர்களுக்கு முன்மாதிரியாக வினைத்திறனாக திட்டமிடப்பட்டவாறு ஜனாதிபதி செயலக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்தவத்தை ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

ஆட்சிபுரியும் அரசியல் தலைமையின் நெறிப்படுத்தல், முகாமைத்துவ மற்றும் நிர்வாக திறனிலேயே  அரச அலுவல்களுக்கான வழிகாட்டல்கள் இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி , தான் ஒரு போதும் அரச அலுவலர்களை குற்றம்சாட்டுவதில்லை என்பதுடன், ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அரசியல் தலைமையே அதற்கு பொறுப்பேற்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

அடுத்த மாதத்திலிருந்து தான் அனைத்து அமைச்சுக்களினதும் முன்னேற்ற மீளாய்வு கூட்டங்களில் பங்குபற்ற இருப்பதுடன், அவற்றின் தொடராய்வு நடவடிக்கைகள் ஜனாதிபதி செயலகத்தினால் மேற்கொள்ளப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊழல், மோசடி, முறைகேடுகள் எங்கும் இடம்பெறக் கூடாது என்பதுடன், வெளிப்படைத்தன்மையுடனும், தூய்மையாகவும் தமது கடமைகளை மேற்கொள்வதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரச அலுவலர்களின் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் மனிதாபிமான பண்புகளை சிறப்பாக வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பாக அண்மையில்  இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களின் போது முன்னெடுக்கப்பட்ட நிவாரண செயற்பாடுகளை குறிப்பிட முடியுமென தெரிவித்த ஜனாதிபதி , அதன்போது ஒட்டுமொத்த அரச சேவை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆற்றிய அர்ப்பணிப்புக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ உள்ளிட்ட ஜனாதிபதி செயலக ஆளணியினர் அனைவரும் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Related posts

நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே முக்கியம்

60 ஏக்கர் வனப்பகுதி தீக்கரையினால் நாசம்

ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களுக்கு அழைப்பு