சூடான செய்திகள் 1

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் : கொலன்னாவை நகரை மீள் கட்டமைக்க நடவடிக்கை

மோசமான காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கொலன்னாவ மற்றும் நாட்டின் ஏனைய பிரதேச மக்களுக்கு உணவு, பானங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு நேற்று (03) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொலன்னாவை உட்பட கொழும்பு நகர்ப்புறப் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி நேற்று (03) மேற்கொண்ட கண்கானிப்பு விஜயத்தின் போது பிரதேசவாசிகள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் நீண்டகாலமாக நிலவும் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு அனுமதி வழங்காமை, அனுமதியற்ற அனைத்து நிர்மாணங்களையும் அகற்றுதல், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் காணி நிரப்பும் நடவடிக்கைகளை நிறுத்துதல், தற்போதுள்ள நீர் விநியோகிக்கும் நிலையங்களின் தற்போதைய நிலையை மதிப்பீடு செய்து வடிகாலமைப்புகளைப் புனரமைத்து உடனடியாக திருத்த வேலைகளை மேற்கொள்ளுதல் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்துமாறு கொலன்னாவ பிரதேச செயலக அதிகாரிகளுக்கு அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு பெரு நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான மூல காரணங்களை இனங்கண்டு, எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் மீண்டும் ஏற்படாமலிருப்பதற்கான பரிந்துரைகளை முன்வைத்தல், கொலன்னாவ நகரை மீள் திட்டமிடலுக்கான விரிவான அபிவிருத்தித் திட்டத்தை தயார் செய்தல், கொலன்னாவ பிரதேச செயலகத்தில் உள்ள காணிகளை உகந்த வகையில் பயன்படுத்த திட்டமிடுதல் ஆகிய பணிகளுக்காக, நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA) மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் உள்ளிட்ட ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தக் குழுவின் அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் அமைச்சரவையில் சமர்பிக்கும் வகையில் ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு அமைச்சரவை அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

நான் மன நோயாளி இல்லை…

“ரணில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை” சம்மந்தன்

இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் இன்று திறப்பு…