அரசியல்உள்நாடுவீடியோ

அநுர ஜனாதிபதியாக பதவியேற்றும் அரச சேவையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை – முஜிபுர் ரஹ்மான் எம்.பி | வீடியோ

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றார் என்பதற்காக அரச சேவையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஏனைய ஜனாதிபதிகள் எவ்வாறு அரசியல் நியமனங்களை வழங்கினரோ அதனையே தற்போதைய ஜனாதிபதியும் பின்பற்றுகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தல் காலங்களில் முறைமை மாற்றம் தொடர்பிலும், அரச சேவையில் குடும்ப நியமனங்கள் தொடர்பிலும் தேசிய மக்கள் சக்தி பாரிய விமர்சனங்களை முன்வைத்தது. தமது ஆட்சியில் தகுதிக்கு ஏற்ற நியமனங்களே வழங்கப்படும் என்றும் கூறினர். இவ்வாறு அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை அவர்களே மீறியுள்ளனர்.

தற்போதைய முக்கிய அரச பதவிகளில் ஆளுந்தரப்பினரின் உறவினர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அது மாத்திரமின்றி இராஜதந்திர நிமனங்களும் இவ்வாறே காணப்படுகின்றன.

கடந்த காலங்களில் தற்போதைய அரசாங்கத்தால் வெளிநாடுகளுக்கான பதவிகளுக்காக 14 நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த நியமனங்களில் ஒருவரைத் தவிர வேறு எவரும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை.

தேர்தல்களின் போது தேசிய மக்கள் சக்தியின் அரசியல் மேடைகளில் பிரசாரங்களை மேற்கொண்ட ஒருவர் வெளிநாடொன்றுக்கு தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான அரசியல் ரீதியான நியமனங்களாலேயே நாடு வீழ்ச்சியடைந்தது என்பதே தேசிய மக்கள் சக்தியின் வாதமாகக் காணப்பட்டது. ஆனால் அவர்களும் இன்று அதனையே செய்கின்றனர்.

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றார் என்பதற்காக அரச சேவையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஏனைய ஜனாதிபதிகள் எவ்வாறு அரசியல் நியமனங்களை வழங்கினரோ அதனையே தற்போதைய ஜனாதிபதியும் பின்பற்றுகின்றார்.

அரசியல்வாதிகளின் கைகளிலுள்ள அதிகாரம் மக்களிடம் வழங்கப்பட வேண்டும் என்ற பிரசாரத்தின் ஊடாகவே தேசிய மக்கள் சக்தி மக்கள் ஆணையைப் பெற்றுக் கொண்டது.

ஆனால் இன்று அதற்கு முரணான நிர்வாகமே இடம்பெற்று வருகிறது. முன்னாள் பிரதம நீதியரசர் ஒருவர் வெளிநாட்டு தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது முற்றுமுழுதாக சட்டத்துறையில் அரசியல் செல்வாக்கினைக் காண்பிக்கிறது என்றார்.

-எம்.மனோசித்ரா

வீடியோ

Related posts

பூஸ்டர் செலுத்தியோருக்கு மாத்திரமே கச்ச தீவு செல்ல அனுமதி

அரச பொது விடுமுறையினை இரு வாரங்களுக்கு நீடிக்குமாறு கோரிக்கை

மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பம்