அரசியல்உள்நாடு

அநுர சீக்கிரம் குணமடைந்து வந்து பதில் கூற வேண்டும் – ஜனாதிபதி ரணில்

அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுமதிப் பொருளாதாரம் பற்றி பேசும்போது சுனில் ஹந்துன்நெத்தி இறக்குமதி பொருளாதாரம் பற்றி பேசுகிறார். தேசிய மக்கள் சக்தியின் உண்மையான பொருளாதார கொள்கை என்ன என்ற கேள்விக்கு அநுரகுமார திசாநாயக்க தனது தேர்தல் மேடையில் பதில் கூற வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், ஊழலை ஒழிப்பதற்காக ஊழல் ஒழிப்புச் சட்டத்தை அமுல்படுத்துவதாக அநுரகுமார தெரிவித்திருந்தமையை நினைவுபடுத்திய ஜனாதிபதி, ஊழலை ஒழிப்பதற்கு ஊழல் ஒழிப்புச் சட்டத்தை அமுல்படுத்துவது மட்டும் போதாது என்றும் சுட்டிக்காட்டினார்.

அதற்காக எடுக்கப்படவேண்டிய மேலதிக நடவடிக்கைகளை “இயலும் ஸ்ரீலங்கா” செயற்றிட்டம் முன்வைத்துள்ளதாகவும், அனுரகுமார ஊழலை ஒழிப்பார் என்றால் ஒரு சட்டமூலத்துக்கு மாத்திரம் ஆதரவளித்து ஏனைய சட்டமூலங்களுக்கு ஆதரவளிக்காதது ஏன் என கேள்வி எழுப்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தல் என்பது ஒரு விவாதம் என்றும், ஒரு அரசியல் மேடையில் கேட்கப்படும் கேள்விக்கு மற்றைய அரசியல் மேடையில் பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார விரைவில் குணமடைந்து இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பார் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

வெலிமடையில் நேற்று (08) பிற்பகல் இடம்பெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

அண்மையில் இராஜினாமா செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, ஜனாதிபதியின் செயற்றிட்டத்துக்கு ஆதரவாக இந்தப் பேரணியில் இணைந்துகொண்டமை விசேட அம்சமாகும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது:

”தேர்தல் நடத்த முடியும் என 2 வருடங்களுக்கு முன்னர் யாராவது நினைத்தார்களா? ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்த முடியும் நிலை இருந்தா?அன்று தேர்தல் நடத்தியிருந்தால் நான் மாத்திரம் தான் போட்டியிட்டிருப்பேன். ஏனென்றால் ஏனையோர் ஓடி ஒளிந்தார்கள். 2 வருடத்தின் பின்னர் இந்தத் தேர்தலை நடத்துவதால் தற்பொழுது 39 பேர் போட்டியிடுகின்றனர். அரசியல் நிலைமை மட்டுமன்றி பொருளாதார நிலையும் சீராக்கப்பட்டுள்ளது.

ஜே.ஆர்.ஜெயவர்தன 1977இல் பொருளாதாரத்தை மாற்றியமைத்தது போல நானும் அந்த அனுபவத்துடன் பொருளாதாரத்தை மாற்ற முன்வந்தேன். எம்மிடம் பணம் இருக்கவில்லை. பொருட்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடினேன். தாங்க முடியாத அளவு கடன் சுமை உயர்ந்திருந்தது. 

பொருளாதார மீட்சி செயற்பாடுகளையடுத்து 6 மாதங்களுக்குள் டொலரின் பெறுமதி குறைந்தது. அடுத்த வருடம் மேலும் நிவாரணங்கள் வழங்கப்படும். 22ஆம் திகதி முதல் ‘இயலும்  ஸ்ரீலங்கா’ திட்டத்துக்காக வாக்களியுங்கள். அதில் தான் உங்கள் எதிர்காலம் அடங்கியுள்ளது. பொருட்களின் விலைகளை குறைக்கவும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை முன்னெடுக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

4 வருடங்களாக தொழில்வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அடுத்த வருடத்தில் ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படும். 50 ஆயிரம் பேருக்கு தனியார்துறையில் பயிற்சி பெற்று வெளிநாட்டு தொழில்வாய்ப்புகளைப் பெற சந்தர்ப்பம் அளிக்கப்படும்.

வெளிமடையில் இருந்து எல்ல வரை சுற்றுலா வலயம் உருவாக்கப்படும். விவசாய நவீன மயமாக்கலின் கீழ் மரக்கறி மற்றும் பழ உற்பத்தி மேம்படுத்தப்படும். கிழங்கிற்கு வரி விதிக்கும் பிரச்சினை எழாது. தற்போதைய நிலையில் அதன் விலைகளை பேணித்தருகிறேன். பண்டாரவளையில் பாரிய குளிரூட்டி களஞ்சியசாலை உருவாக்கப்படும். ஊவாவில் விவசாய நவீன மயமாக்களுக்கு நடவடிக்கை எடுப்பேன்.

தேர்தல் விஞ்ஞாபனங்களில் சஜித்தினதும் அநுரவினதும் கருத்துக்களை பார்க்கவேண்டும். சஜித்தின் இரு தேர்தல் விஞ்ஞாபனங்கள் உள்ளன. இதில் எதனை அவர்கள் தெரிவு செய்யப் போகின்றனர். அநுரகுமார ஏற்றுமதி பொருளாதாரம் பற்றி தெரிவித்துள்ளார். 

வெளிநாடுகளுக்கு எமது பொருட்களை ஏற்றுமதி செய்வதாக தெரிவித்துள்ளார். அந்தத் திட்டத்தை வரவேற்கிறேன். அவர்களின் கொள்கை தொடர்பில் இரு பிரச்சினைகள் உள்ளன. இல்லாவிட்டால் நானும் அவருக்கு  வாக்களிக்க இருந்தேன்.

ஆனால் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அவரின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை ரத்துச் செய்து எவ்வாறு ஏற்றுமதிப் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும். சுனில் ஹந்துன்நெத்தி ஏற்றுமதிப் பொருளாதாரம் நாட்டின் யாப்பிற்கு முரண் என அவர் வழக்குத் தொடர்ந்தார். இறக்குமதி பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளார்.

அநுரகுமார நோய்வாய்ப்பட்டுள்ளதாக அறிந்தேன்.அவர் குணமடைய பிரார்த்திக்கிறேன். நான் முதலில் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் வழங்காத  போதும் நான் யாழ்ப்பாணத்தில் முன்வைத்த கருத்துக்குப் பதில் அளித்துள்ளார்.

பிணைமுறி தொடர்பிலும் கருத்துத் தெரிவித்துள்ளார். பிணைமுறி விவகாரம் தொடர்பில் நான் தான் விசாரணை நடத்துமாறு கோரினேன். இதற்கு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. வழக்கு தொடரப்பட்டதோடு நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இந்த தீர்ப்புகள் பற்றி அவருக்குத் தெரியாதா? என நீதிமன்றம் அறிவித்தது. எனவே அவருக்கு மீள உச்ச நீதினமன்றத்திற்கு சென்று மனுத்தாக்கல் செய்யலாம்.

மோசடி எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்துவதாக அநுர தெரிவித்துள்ளார். அந்தச் சட்டம் போதுமாமனதாக இல்லை. மேலும் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். தவறான வழியில் திரட்டிய சொத்துக்களை மீளப் பெற சட்டம் கொண்டுவர வேண்டும். அதனை அநுர ஆதரிக்கிறாரா? இல்லையா? தேசிய மோசடி திட்டத்தை நாம் 2025 முதல் செயற்படுத்த இருக்கிறோம். அதனை ஆதரிக்கிறாரா? கணக்காய்வாளரின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு அவர் உடன்படுகிறாரா? இல்லையா? சொத்து விபரங்களை இணையத்தில் பார்வையிடலாம். இதனை ஆதரிக்கிறாரா? 

பணச் சலவை சட்டத்தைப் பலப்படுத்த அவர் தயாரா? உங்கள் மோசடி ஒழிப்பு செயற்பாட்டை எமது சட்டத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்துவது ஏன்? ஏற்றுமதி பொருளாதாரம் தொடர்பிலும் மோசடி ஒழிப்பை ஒரு சட்டத்திற்கு மட்டுப்படுத்துவீர்களா? அல்லது அதனுடன் தொடர்புள்ள சட்டங்களை கொண்டுவரப்போகிறீரா? இதற்கு அநுர பதிலளிக்க வேண்டும். அநுர பதில் வழங்கும் வரை ஒவ்வொரு மேடையிலும் இந்தக் கேள்வியை கேட்பேன். அவர் மீண்டும் மேடைக்கு வர வேண்டும். எமது கேள்விகளுக்குப் பதில் வழங்க வேண்டும் என்றார் ஜனாதிபதி.

ஐக்கிய மக்கள் சக்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள கூறுகையில்,

20 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினேன். ரணில் விக்ரமசிங்கவுடன் 16 வருடங்களும் 4 வருடங்கள் சஜித் பிரேமதாஸவுடனும் பணியாற்றியுள்ளேன். எனது வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள் இன்றாகும். 

எனது தலையில் இருந்த பெரிய பாரம் குறைந்துள்ளது. இருவரின் தலைமைத்துவம் குறித்தும் எனக்குத் தெரியும். 

நாட்டை மீட்ட ஜனாதிபதியை வெல்ல வைப்பதற்காக நானும் பங்களிக்கிறேன். எஞ்சிய பணிகளை நிறைவை செய்ய அவரின் கரத்தை பலப்படுத்துவோம்  என்றார்.

முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் அநுரகுமார மக்களை அச்சுறுத்தியிருந்தார். கடந்த காலத்தில் ஜே.வி.பி செய்தவற்றை யாரும் மறக்கவில்லை. அப்பாவி அரச ஊழியர்களுக்கும் ஐ.தே.கவினருக்கும்  செய்த அநியாயம் எமக்குத் தெரியும். 

2022 மார்ச் 15ஆம் திகதி நாம் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் பேரணி நடத்தினோம்.  பதவி துறந்து செல்வதற்கு கோட்டாபயவிற்கு ஒருமாத கால அவகாசம் வழங்குவதாக சஜித் தெரிவித்தார். போரட்டம் நடந்து கோட்டாபயவிற்கு பதவி விலகிச் செல்ல நேரிட்டது. தனிநபர்களை அன்றி நாட்டு மக்களைப் பாதுகாப்பதே முக்கியமானது. 

சஜித்தினால் நாட்டு மக்களை காப்பாற்ற முடியவில்லை. கேஸ் மட்டுமன்றி மண்ணெண்ணெய் கூட இருக்கவில்லை. 

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆரம்பித்த பணிகளை நிறைவு செய்ய சில காலம் அவசியம். செய்து காட்டியவருக்கு நாட்டைக் கொடுக்கப் போகிறீர்களா? வெற்று வாக்குறுதி அளிப்பவர்களுக்குக் கொடுக்கப் போகிறீர்களா? என்றார்.

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசனாயக்க பேசுகையில்,

இதே இடத்தில் மக்கள் சக்தியின் கூட்டம் நடைபெற்றது. இந்தளவு கூட்டம் சேர்க்க முடியுமா என கேள்வி எழுப்பினார்கள். நான் செய்து காட்டியுள்ளேன். கிழங்கு பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் அறுவடை காலத்தில் பாதிக்கப்படுவர். ஒவ்வொரு அரசாங்கமும் எமது வயிற்றில் அடித்தன. தற்பொழுது கிழங்கு அறுவடை நடைபெறுகிறது. எனவே கிழங்கு இறக்குமதிக்கு வரி விதிக்க வேண்டும்.

92 வீத தபால் மூல வாக்குகள் தங்களுக்கு என ஜே.வி.பி சொல்கிறது. யுத்தம் வென்றும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு 58 வீதம் வாக்குகள் மட்டுமே கிடைத்தன.  சந்திரிகா குமாரதுங்க 1994இல் சகல தொகுதிகளை வென்றும் 63 வீதவாக்குகளை மட்டுமே பெற்றார். அவருக்குக் கூட அந்தளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இவர்கள் 92 வாக்குகள் கிடைத்துள்ளதாக மார்தட்டிக் கொள்கின்றனர் என்றார். 

மகாசங்கத்தினர் மற்றும் ஏனைய மதத்தலைவர்கள், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரவி குணவர்தன மற்றும் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related posts

திரிபோசா வழங்குவதில் சிக்கல்

IMF இனது முக்கிய பேச்சுவார்த்தைகள் விரைவில்

பாராளுமன்றில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி