அநுர அலை இன்னும் குறையவில்லை. அதனை குறைத்து மதிப்பிட முடியாது. அத்துடன் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பதில் பொதுச் செயலாளருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (09) காலை முதல் மதியம் வரை வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. அதன் பின் வவுனியா, குருமன்காடு காளி கோவில் வீதியில் கட்சியின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டு ஊடக சந்திப்பு நடைபெற்றது. அதில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பாக மட்டுமே ஆராயப்பட்டது. கட்சியின் மத்திய செயற்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பான தீர்மானங்களை ஏகமனதாக எடுத்துள்ளது. அதன்படி வடக்கு – கிழக்கு மாவட்டங்களின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும்.
இந்த தேர்தல் முக்கியமானதொரு தேர்தல். நாங்கள் ஒவ்வொரு தேர்தல்களையும் முக்கியமானதொரு தேர்தல் என்றே கூறி வந்துள்ளோம். உண்மை அது தான். ஒவ்வொரு தேர்தல்களில் அந்தந்த காலப்பகுதிகளில் வெவ்வேறு நோக்கங்களுக்காக முக்கியமான தேர்தலாக இருக்கும். இம்முறை நாடு அநுர அலையில் உள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தனிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது.
வடக்கு, கிழக்கில் மட்டக்களப்பு தவிர ஏனைய மாவட்டஙனளில் அனுர அலையில் எமது மக்களின் வாக்குகள் சென்றுள்ளது. திருகோணமலையில், மட்டக்களப்பில் நாம் பெரும்பான்மை பெற முடியாது. வடக்கில் நாம் தான் பெரும்பான்மை. எனினும் மக்கள அநுர அலையில் சிக்கி ஜனாதிபதி தேர்தலைக் காட்டிலும் பாராளுன்ற தேர்தலில் அதிக வாக்குளை வழங்கியிருந்தார்கள். ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஆதரவு வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச அவர்களே வடக்கு – கிழக்கில் பெரும்பான்மை பெற்றார். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் இந்த நிலை மாறியது.
தற்போது அநுர அலை குறைந்து விட்டது என்கிறார்கள் சிலர். அப்படி கூற முடியாது. அநுர அலை தற்போதும் இருக்கிறது. அது குறைவடைய சில காலம் செல்லலாம். நாம் கவனமாக கையாண்டு நாடு அநுரவோடு இருக்கட்டும். நமது ஊர் நம்மோடு. நாம் வீட்டோடு என செயற்பட வேண்டும்.
எமது உள்ளூர் அதிகாரங்களை நாம் விட முடியாது. எனவே நாம் இந்த தேர்தலில் சிறப்பானவர்களை, செல்வாக்கு மிக்கவர்களை நிறுத்த வேண்டும். அதன் மூலமே அதிக வெற்றி வாய்ப்பை பெற முடியும். அவ்வாறான தீர்மானங்கள எடுக்கும் அதிகாரம் எமது மாவட்ட கிளைகளுக்கு வழங்கியுள்ளோம்.
தேர்தல் முடிந்த பின் ஆட்சி அமைக்கின்ற போது ஏனைய தமிழ் கட்சிகளுடனும் பேசி ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டு அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில சபைகளின் நிலமையை கருத்தில் கொண்டு ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடலாம் என தீர்மானித்துள்ளோம். அந்தவகையில் வவுனியா வடக்கு, சம்மாந்துறை, ஏறாவூர் ஆகிய பகுதிகளில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதற்கான தமிழரசுக் கட்சியின் வாசல் திறந்தே உள்ளது.
வவுனியா வடக்கில் நாம் பிரிந்து செயற்படுவோமாக இருந்தால் பெரும்பான்மையினரிடம் அப் பிரதேச சபை செல்லும் வாய்ப்புள்ளது. சம்மாந்துறை, ஏறாவூர் ஆகிய பகுதிகளில் எம்மிடம் பெரும்பான்மை இல்லை. ஆகவே இணைந்து போட்டியிடலாம் என தீர்மானத்துள்ளோம்.
கொழும்பு மாநகர சபையில் தமிழ் மக்கள் வசிக்காத வட்டாரங்களும் உள்ளது. அங்கு வேட்பாளர்களை நியமிப்பது சவாலான ஒரு நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டாலும், அதன் வேட்பாளர்களின் பின்புலம் தொடர்பாக ஆராய்வதில் பல்வேறு சவால்கள் உள்ள காரணத்தினால் இம்முறை கொழும்பில் போட்டியிடுவதில்லை என மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது எனத் தெரிவித்தார்.
-தீபன்