உள்நாடு

அத்துமீறிய மீன்பிடி தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன – பியல் நிஷாந்த.

(UTV | கொழும்பு) –

தமிழ் நாட்டு மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளை உடனடியாக முற்றுமுழுதாக தடுத்து நிறுத்த முடியாது. எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் பின்னர், இந்திய அரசாங்கத்தின் இணக்கத்துடன் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் மீனவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய உலக மீனவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நவம்பர் மாதம் 19, 20 மற்றும் 21ஆம் திகதிகளில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. யாழில் 21ஆம் திகதி இடம்பெறும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதோடு, அங்குள்ள மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தவுள்ளார். சீனாவிடமிருந்து மானியமாகக் கிடைக்கப் பெற்ற மண்ணெண்ணெய் 28 000 ஒரு நாள் படகினை வைத்துள்ள மீனவர்களுக்கு தலா 153 லீற்றர் வீதம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான மேலும் பல வேலைத்திட்டங்களும் இனிவரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

எவ்வாறிருப்பினும் தமிழ் நாட்டு மீனவர்கள் வடக்கு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுப்பது வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பாரிய சவாலாகக் காணப்படுகிறது. முன்னர் இந்த மீனவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை காணப்பட்டது.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் டில்லி விஜயத்தின் பின்னர் இந்திய அரசாங்கத்தின் இணக்கத்துடன் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதற்கமைய மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவது மாத்திரமின்றி குறித்த படகினை செலுத்துபவரது அனுமதிப் பத்திரத்தை 6 மாதங்களுக்கு இரத்து செய்யவும் தற்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை கடும்போக்கில் அணுக முடியாது. அது இரு நாடுகளுக்குமிடையில் இராஜதந்திர ரீதியில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே படிப்படியாகவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைக் காண முடியும் என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு $500 மில்லியன் கடனுதவி

A/L இற்கு பின்னர் பேரூந்துகள் சேவையில் இருந்து விலக தீர்மானம்

ஒத்திவைக்கப்பட்ட கிரிக்கெட் வழக்கு!