அரசியல்உள்நாடு

அதிகாரத்தை வழங்கினால் சம்பள அதிகரிப்பை வழங்குவோம் – மக்கள் விரும்பினால் ரணில் மீண்டும் வருவார் – ராஜித

பாராளுமன்றத்தில் எமக்கு அதிகாரத்தை வழங்கினால் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை ஜனவரியில் வழங்குவோம். மக்கள் விரும்பினால் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவர முடியும் என புதிய ஜனநாயக முன்னணியின் களுதுறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் அரச ஊழியர்களின் அடிப்படைச்சம்பளம் ஜனவரியில் நூற்றுக்கு 24 வீதமாக அதிகரிக்கிறது.

இதன் மூலம் புதிதாக அரச சேவையில் இணைந்துகொள்பவருக்கு அவரின் அடிப்படைச் சம்பளம் 55ஆயிரமாக அமையும். அதேபோன்று வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு 25ஆயிரமாக அதிகரிக்கப்படும். அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கும் போது மேலதிக நேர கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படுகின்றன.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தேர்தலை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டதல்ல. நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது வருடாந்தம் மேற்கொள்ளப்படும் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு இடம்பெறவில்லை.

அதனால் அவர்களுக்கான சம்பள அதிகரிப்பை முறையாக மேற்கொள்ள உதய செனவிரத்ன குழுவை நியமித்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அந்த குழுவின் பரிந்துரைக்கமையவே ஜனவரி முதல் இரணடு கட்டங்களாக சம்பள அதிகரிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளுக்கு அமைச்சரவையின் அனுமதியும் பெறப்பட்டது.

தற்போதைய பிரதமருக்கு அரசியல் அனுபவம் இல்லை. அரச சேவையில் இருந்தவர் அல்ல. அவர் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டவர்.

அதனால் அவருக்கு அரச சேவை தொடர்பில் தெரியாது. அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட உதய செனவிரத்ன குழுவில் இருந்தவர்கள் யார் எனவும் தெரியாமல் பிரதமர் கதைக்கிறார். இதன் மூலம் அரச சேவை தொடர்பில் அவரின் புரிதலை விளங்கிக்கொள்ளலாம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றினார். மீனவர்களுக்கான உரிபொருள் மற்றும் விவசாயிகளுக்கான உர நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

தேர்தல் காரணமாக அதனை வழங்குவதை தேர்தல் ஆணைக்குழு நிறுத்தி இருந்தது. அநுரகுமார திஸாநாயக்க அதனையே தற்போது வழங்கி இருக்கிறார்.

மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானத்தை அவ்வாறே நிறைவேற்ற முடியும் என்றால், ஏன் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது என கேட்கிறோம்.

அரச ஊழியர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அடித்த புள்ளடி மூலம் 55ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை இழந்துள்ளனர்.

அதனால் பாராளுமன்ற தேர்தலில் அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்கள் ஆணை வழங்கினால் ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்குவோம்.

அதேபோன்று வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்போம். மக்கள் விரும்பினால் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவர முடியும் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

கொழும்பில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தல்

புதனன்று ரணில் பதவியேற்பு

சமன் ரத்னப்பிரியவுக்கு ஜனாதிபதியினால் புதிய நியமனம்