உள்நாடுசூடான செய்திகள் 1

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனிப்பட்ட வெற்றி, தோல்வி அன்றி நாட்டின் வெற்றி தோல்வியே தீர்மானிக்கப்படும்!

  •  அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தை தவிர நாட்டின் வெற்றிக்கான வேறு வேலைத் திட்டங்களும் இல்லை.
  • அரசாங்கத்தின் பயணத்தை மாற்றினால் மீண்டும் வரிசை யுகம் வரும்.
  • அரசியல் மேடைகளில் வாக்குறுதிகளை வழங்கினாலும், நாட்டின் முன்னேற்றத்துக்கான வேலைத்திட்டம் எந்த தரப்பிடமும் இல்லை.
  • -நபர்களைப் பார்த்து தீர்மானம் எடுக்கும் கடந்த கால அரசியல் தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது.

– ஜனாதிபதி

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது தனிப்பட்ட வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படாது என்றும் மாறாக நாட்டின் வெற்றி, தோல்வியே தீர்மானிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியும் என்ற திருப்தி மக்களுக்கு இருக்குமாயின் அந்த வேலைத்திட்டத்துடன் முன்னேறிச் செல்ல முடியும் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால், நாட்டு மக்கள் மீண்டும் மருந்து, உரம், எரிவாயு, எரிபொருள் வரிசைகளில் நிற்க நேரிடும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பத்தரமுல்லை வோடர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று (11) நடைபெற்ற பொருளாதார மறுசீரமைப்புக்கான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் பங்கேற்கும் இளைஞர், யுவதிகளுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இன்று அரசியல் மேடைகளில் பல்வேறுபட்ட வாக்குறுதிகளை வழங்கும் குழுவினரிடம் நாட்டின் முன்னேற்றத்திற்கான எந்தவொரு நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டமும் இல்லையென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேர்தல்களின் போது நபர்களை பார்த்து தீர்மானம் எடுக்கும் கடந்த கால அரசியல் தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் பொருளாதார மறுசீரமைப்புக்காக சமர்பிக்கப்பட்டிருக்கும் சட்டமூலத்தை நிறைவேற்ற ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, அதற்கு மாறாக நாட்டின் முன்னேற்றுத்துக்கான வேறு திட்டங்களை வைத்துள்ளவர்கள் அதனை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“இன்று துறைசார் மேற்பார்வை குழு அங்கத்தவர்களாகவே இங்கு வந்துள்ளீர்கள். அவ்வாறு செய்வதற்கான ஆலோசனையை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவே வழங்கியிருந்தார். இதனால் இளைஞர்,யுவதிகள் நாட்டின் முன்னேற்றுத்துக்கான தங்களது யோசனைகளை வழங்க முடியும். அந்த யோசனைகளை நாமும் செவிமடுப்போம்.

நாட்டின் பொருளாதார ரீதியான வங்குரோத்து நிலையை பற்றி பலரும் பேசுகிறார்கள். அதனை நான் ஏற்றுகொள்ளப்போவதில்லை. இந்த நாடு பொருளாதார ரீதியாக மாத்திரமன்றி அரசியல் ரீதியாகவும் வங்குரோத்தடைந்துள்ளது என்பதே உண்மையாகும். இவை இரண்டும் பிரித்துப் பார்க்க முடியாத பிரச்சினைகளாகும்.

நாட்டில் சரியான பொருளாதார முறைமை இன்மையே அதற்கு காரணமாகும். நாட்டில் இதுவரையிலும் இறக்குமதியை மையப்படுத்திய பொருளாதாரமே காணப்பட்டது. தேவையான அனைத்துக் பொருட்களையும் இறக்குமதி செய்தோம். அதற்கு செலுத்தத் தேவையான பணமும் எம்மிடம் இருக்கவில்லை. அதற்கு மத்தியில் யுத்தத்துக்கும் செலவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் யுத்தத்திற்கு பின்னர் துரிதமான பொருளாதார வளர்ச்சியை எட்டிப் பிடிப்பதற்கான வாய்ப்பு நாட்டுக்கு கிடைத்திருந்தது. யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் ஆன பின்பும் நாம் அந்த முன்னேற்றத்தை அடைய முடியவில்லை. நாம் பழைய முறைகளையே பின்பற்றினோம். பணம் இல்லாத வேளையில் கடன் பெற்றுக்கொண்டோம். அதனை மீளச் செலுத்த முடியாமல் போனது.

இவ்வாறான நேரத்தில் நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை சொல்ல எவரும் முன்வரவில்லை. இருப்பினும் நாட்டில் பொருளாதார மாற்றம் ஒன்று அவசியம் என்பதை நான் வலியுறுத்தினேன். அதற்கான பணிகளை செய்யும் போது நாட்டை விற்கப் போவதாக பிரசாரம் செய்யப்பட்டது. இறுதியில் நாம் வங்குரோத்து நிலையை அடைந்தோம்.

நாட்டின் வருமான தேவையைக் கருத்தில் கொண்டு 2015 ஆம் ஆண்டு நான் பிரதமராக பதவி வகித்த காலத்தில் வரி அதிகரிப்புச் செய்ய வேண்டியிருந்தது. 2019 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வரிகளை குறைத்தார். அதனால் நாட்டின் வருமானம் குறைந்தது.

அந்த நேரத்தில் கொவிட் தொற்றும் பரவியது. நாட்டுக்கு 03 பில்லியன் டொலர் வௌிநாட்டு கையிருப்பு தேவைப்பட்டது. இருப்பினும் பாராளுமன்ற தேர்தல் காலத்தில் ஒருவரும் அது பற்றி பேசவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கை பிரகடனத்தில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தோம். வேறு எவரும் அதுபற்றி பேசவில்லை. அதற்கு மாறாக செய்ய முடியாது என்று அறிந்தும் பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கினர். அதன் பலனாக ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரேயொரு பாராளுமன்ற ஆசனம் மட்டுமே கிடைத்து.

உலகின் வேறு எந்தவொரு நாட்டிலும் ஒரு ஆசனத்தை வென்று பாராளுமன்றத்திற்கு தெரிவானவர்கள் பிரதமர் அல்லது ஜனாதிபதியாக பதவியேற்றதில்லை. ஆனால் இலங்கையில் அது நடந்தது. நாட்டின் அரசியல் வங்குரோத்து நிலையே அதற்கு காரணமாகும். நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டு பிரச்சினைகளைத் தீர்க்க எவரும் முன்வரவில்லை. அதனால் நான் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன்.

அதன் பின்னர் நாட்டின் இளைஞர் யுவதிகளிடமும் இந்த பொறுப்புக்களை வழங்கி அவர்களுக்கு இதுகுறித்த தௌிவூட்டல்களை வழங்க நாம் தீர்மானித்தோம். அதன்படியே இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது நாட்டின் முன்னேற்றத்துக்கான வேலைத்திட்டம் ஒன்று உள்ளது. அதனைப் பொறுப்பேற்று நாட்டை முன்னேற்றிச் செல்வதற்காக இளைஞர்கள் தயாராக வேண்டும்.

இன்று அரசியல் வாதிகள் பலதரப்பட்ட வாக்குறுதிகளை வழங்குகின்றனர். அவர்களில் எவரும் நாட்டின் முன்னேற்றுத்துக்கான கொள்கைகளை முன்மொழியவில்லை. எதிர்க்கட்சித் தலைவரும் அநுர குமார திசாநாயக்கவும் எந்த இடத்தில் விவாதம் செய்வது என்பது குறித்தே ஒரு மாத காலமாக விவாதித்தனர். இறுதியாக ஒரு விவாதத்திற்கு வரவும் இல்லை. இவர்களில் ஒருவரிடத்திலும் நாட்டின் முன்னேற்றத்திற்கான கொள்கைகள் இல்லை.

அதனால் அரசாங்கம் கொண்டுச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு மாறான வேறு முறைமகள் இருக்குமாயின் அதனை அவர்கள் கூற வேண்டும். எவரும் அவ்வாறான திட்டத்தை முன்வைத்திருப்பதாக தெரியவில்லை. உங்கள் எதிர்காலத்தை பொறுப்பேற்க அவர்கள் தயாராக இல்லாத பட்சத்தில் உங்களின் எதிர்கால முன்னேற்றத்தை நீங்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டும். அதற்கான வேலைத்திட்டம் மிக அவசியமானது. உங்கள் அறிவு மேம்பாட்டிற்காக ஏனைய அதிகாரிகள் மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளை சந்திக்கவும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். புதிய திட்டங்களை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டும். பழைய முறைமைகளில் சிக்கிக் கிடப்பதை விடுத்து துரித அபிவிருத்தியை நோக்கி நகர்வதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன்போது இளைஞர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அளித்த பதில்களும் வருமாறு,

கேள்வி- தேசிய இளைஞர் பாராளுமன்றம் என்ற கருத்தை ஒரு கருத்தாக்கத்திற்கு அப்பாற்பட்டு, அரசியலமைப்பு அதிகாரங்கள் கொண்ட நிறுவனமாக மாற்றுவதற்கான சட்டமூலம் தற்போது உங்கள் கைகளுக்கு கிடைத்துள்ளது. அது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் – இளைஞர் பாராளுமன்றம் நீண்டகாலமாக இயங்கி வருகின்றது. அது தொடர்பான சட்டத்தை முன்வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தக் குழுவை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பது ஒரு பிரச்சினை. இதை இளைஞர் கழகங்களுக்கு மட்டுப்படுத்துவதா? அல்லது திறந்துவிடுவதா? திறந்து விடுவது என்றால் அந்த பட்டியல்களை எவ்வாறு தயாரிப்பது? போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. அவற்றுக்குத் தீர்வு காணுமாறு தெரிவித்துள்ளேன். அதன்படி நாம் செயல்பட முடியும்.

அடுத்ததாக மாகாண சபைகள், பிரதேச சபைகளில் இளைஞர் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் காலத்தில்தான் இளைஞர் பிரதிநிதித்துவம் குறித்து முன்மொழியப்பட்டது. ஆனால் அது வேட்புமனுவிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் இவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை நான் கொள்கையாக ஏற்றுக்கொண்டுள்ளேன். இளைஞர் பிரதிநிதித்துவம் பற்றிய கலந்துரையாடலை இப்போதேனும் ஆரம்பிக்க வேண்டும்.

மேலும், மக்கள் சபைகள் இருந்தால் அதற்கு பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் தேவையாக இருந்தால் அது எந்த வடிவில் என்பதையும் சிந்திக்க வேண்டும். இது குறித்த இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து விடை காண்பது பொருத்தமானது என நான் நினைக்கிறேன்.

கேள்வி – அமைச்சுகளின் செயலாளர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு இளைஞர் தலைமைத்துவ செயலணியொன்றை கட்டியெழுப்பும் சந்தர்ப்பம் எமக்கு உள்ளதா? ஸ்மார்ட் தொழிநுட்பம் தொடர்பான செயற்பாடுகளில் கீழ் மட்டத்தில் அது பற்றிய புரிதல் இல்லையா?

பதில் – அமைச்சுகள் மற்றும் நிர்வாகத்தில் இளைஞர்களின் யோசனைகளை உள்ளீர்ப்பது மிகவும் பெறுமதிமிக்கது. அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நீங்களே கலந்துரையாடி எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். பாராளுமன்றத்தில் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் என்னவென்றால், அது கொள்கைகளை வகுப்பதில் பங்குபெற வாய்ப்பளிக்கிறது. அமைச்சுகள் அல்லது மாகாண சபைகளில் இணைவது என்பது அந்தக் கொள்கைகளை அமுல்படுத்துவதில் இணைவதாகும். அவ்வாறு இணைய மிகவும் பொருத்தமான பொறிமுறை எது என்பதை ஒன்றாக கலந்துரையாடி எமக்கு தெரிவிக்கவும். அதைப் பற்றி நான் கூற மாட்டேன். ஏனென்றால் இது என்னுடைய எதிர்காலம் அல்ல. 2048இல் நான் இருக்க மாட்டேன். அது உங்களின் எதிர்காலம்.

கேள்வி – நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது, ​​அந்த சவாலை ஏற்று வெற்றிகரமாக அதனை எதிர்கொண்டீர்கள். ஆனால், எவ்வாறேனும் அடுத்த தேர்தலில் நீங்கள் தோல்வி அடைந்தால், தற்போதைய திட்டத்தை தொடர யாராவது தலைமை தாங்குவார்களா?

பதில் – இந்தத் தேர்தலில் தீர்மானிக்கப்படுவது எனது வெற்றி தோல்வி அல்ல. நாடு தோற்கடிக்கப்படுமா? இல்லையா? என்பதே தீர்மானிக்கப்படும். தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி பொருளாதார வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளோம். அதை நடைமுறைப்படுத்தவே பொருளாதார மாற்ற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அது சரிந்தால் மீண்டும் அந்நியச் செலாவணியை நாம் இழக்க நேரிடும். மீண்டும் மருந்து, பெட்ரோல், எரிபொருள் இல்லாமல் வரிசையில் நிற்க வேண்டியேற்படும். எனவே, அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

அனைத்து கட்சி தலைவர்களும் இந்த பொருளாதார மாற்ற சட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு இல்லையெனில், ஒரு மாற்றுவழியை முன்வைக்கவும். இத்தேர்தலில் தனி நபரை அன்றி, பொறிமுறையையே தெரிவு செய்ய வேண்டும். இந்த முறை தொடர வேண்டும் என்பதில் நீங்கள் திருப்தி அடைந்தால், இந்த முறையுடன் முன்னோக்கிச் செல்லலாம். அவ்வாறின்றி மீண்டும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம், அந்நியச் செலாவணி இல்லாத, மருந்து, உரம் இல்லாத நாடு வேண்டுமானால் இன்னொரு தரப்பினரைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் ஒரு நாடாக முன்னோக்கி செல்ல விரும்பினால், நீங்கள் அரசாங்க வேலைத் திட்டத்துடன் முன்னோக்கிச் செல்லலாம்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டம் சரியில்லை என்றால் அதற்கு மாற்று வழியை முன்வைக்க வேண்டும். ஆனால் இதுவரையில் அவ்வாறான மாற்றுத் திட்டத்தை யாரும் முன்வைக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து ஒப்பந்தம் திருத்தப்படும் என்று சிலர் கூறுகின்றனர். ஒப்பந்தத்தை மாற்ற முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபடுவதற்கு என்னால் கையெழுத்திடாமல் இருக்க முடியுமா? அதனால், உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க

“யுத்தம் இடம்பெற்ற காலத்திலும், அண்மைய பொருளாதார நெருக்கடியின் போதும் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டோம். தினமும் பெரும்பாலான நேரம், மின்சாரம் மற்றும் எரிபொருள் இல்லாமல் அவதிப்பட்டோம்.

விவசாயத் துறையின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் உணவு மற்றும் உரங்கள் பற்றிய பலவீனமான முறையில் சிந்தித்த கொள்கை காரணமாக நாம் உணவுப் பாதுகாப்பின்மையையும் எதிர்கொண்டோம். மேலும் எங்களுக்கு சுகாதாரம் மற்றும் ஏனைய துறைகளில் பாதுகாப்பின்மை ஏற்பட்டது. இது கடுமையான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது. உணவு, எரிவாயு போன்ற அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமல், ஒரு நாடாக நாம் வீழ்ச்சியடைந்தோம்.

எனவே, தேசிய பாதுகாப்பு என்பது ஒரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதை விட மேலானது. அதனால்தான் தேசிய பாதுகாப்பு செயலகம் போன்று ஜனாதிபதிக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற ஒரு புதிய பொறுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்ட மூலம் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றாலும், இது தேசிய பாதுகாப்பு செயலகம், புதிதாக உருவாக்கப்பட்டு வரும் பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானி (CDS) சட்டம் மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான தேசிய நிறுவனம் உள்ளிட்ட பொதுவான துறையை உள்ளடக்கிய அனைத்து வித அதிகாரம் கொண்ட சட்ட மூலத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.

தேசிய பாதுகாப்புச் செயலகம் என்பது சம்பிரதாய வகையிலான பாதுகாப்புடன் மாத்திரம் நின்றுவிடவில்லை. இது ஏனைய துறைகளுடன் பொருளாதாரம் மற்றும் வலுசக்தி பாதுகாப்பையும் உள்ளடக்கியது. தேசிய பாதுகாப்பை துல்லியமாக வரையறுக்க முடியாது. இது பரந்த அளவிலான துறைகளில் பரவியுள்ளது. நமது புலனாய்வுத் துறைகளையும் மறுசீரமைக்க வேண்டும்.

யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அமைதி நிலவிய காலங்களிலும் புலனாய்வுத் துறை செயல்படும் விதம் ஒன்றுக்கொன்று வேறுபாடானது. ஆனால் இவை இரண்டும் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை உள்ளடக்கியது.

எங்கள் நட்பு மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளின் உதவியுடன் தற்போது இந்தப் பிரிவுகளைப் புதுப்பித்து வருகிறோம். இதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சின் கீழ் இருந்த, ஆனால் பொதுவாக பாதுகாப்பு அமைச்சின் கீழ்வருகின்ற வெளிநாட்டுப் பிரிவையும் நாங்கள் இதற்காக உள்ளடக்கியுள்ளோம்.” என்று தெரிவித்தார்.

பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, பாராளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளர் சமிந்த குலரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணி எராஜ் டி சில்வா உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

கல்வெவ சிறிதம்ம தேரர் பிணையில் விடுதலை

ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கவில்லை – ரிஷாட் பதியுதீன்

ஒரு நாளில் 8,000 ஐ தாண்டிய பீசீஆர் பரிசோதனைகள்