உள்நாடுபிராந்தியம்

வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் – 6 வயது சிறுவன் பலி – களுத்துறையில் சோகம்

களுத்துறை, கமகொடபர, ரஜவத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலில் 6 வயது சிறுவன் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் (29) இரவு 10.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் நடத்திய இந்த தாக்குதலில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த அந்த சிறுவனும், வீட்டில் இருந்த 28 வயதுடைய பெண்ணும் காயமடைந்தனர்.

அவர்கள் இருவரும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் விரைவாக அனுமதிக்கப்பட்டனர்.

படுகாயமடைந்த சிறுவன் பின்னர், கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (30) மாலை உயிரிழந்தார்.

உயிரிழந்த சிறுவனின் தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும், அதனால் சிறுவன் தந்தை வேலையிலிருந்து திரும்பும் வரை பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதலுக்கு உள்ளான வீட்டில் இருந்த பெண்ணே சிறுவனை பராமரித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த பெண் தற்போது களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை, என்பதுடன், தாக்குதலுக்கான நோக்கம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கடற்றொழில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு தொற்று

தீர்மானத்திற்கு வந்துள்ள சுகாதார சேவை தொழிற்சங்கங்கள்!