சூடான செய்திகள் 1

வடக்கு மீள் குடியேற்ற செயலணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பிடுங்கி எடுக்க பகீரத முயற்சி

(UTV|COLOMBO)-நீண்டகால அகதிகளின் மீள்குடியேற்றத்துக்கென உருவாக்கப்பட்ட வடக்கு செயலணியின் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை, எவ்வாறாவது பிடுங்கி எடுக்க வேண்டும் என்ற பகீரத முயற்சியில் அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட மாற்றுக்கட்சி அரசியல் வாதிகள் தொடர்ந்தும் ஈடுபடுவதாகவும் இந்த விடயத்தில் தாம் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை  என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் சிலாவத்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில்    பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று  (17) கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் அலிகான் ஷரீப், முசலி பிரதேச சபை தவிசாளர் சுபியான், உப தவிசாளர் முகுசீன் ரைசுதீன், மற்றும் உறுப்பினர்கள், உட்பட மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் முஜாஹிர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மீள்குடியேற்ற அமைச்சை எனக்கு வழங்கவே கூடாது என்று அரசிடம் நிபந்தனை விதித்த தமிழ் கூட்டமைப்பு எம் பிக்களும், வடக்கு  மக்களினதோ  சமூக நலனிலோ இதுவரை அக்கறை காட்டாத முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் புதிதாக புறப்பட்டுள்ள அரசியல்வாதி ஒருவரும் இணைந்து குறிப்பிட்ட பணத்தை பறித்து மீள் குடியேற்ற அமைச்சுக்கு வழங்க வேண்டும் என வரிந்து கட்டிக்கொண்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் மீள்குடியேற்ற அமைச்சுக்கு கடந்த காலங்களில் 2015,2016,2017 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட 40பில்லியன் அதாவது 40ஆயிரம் மில்லியன் ரூபாவில் இற்றை வரை நீண்டகால அகதிகளான சிங்கள,முஸ்லிம் மக்களுக்கென 40வீடுகளைக்கூட குறிப்பிட்ட அமைச்சு அமைத்துக்கொடுக்கவில்லை. கடந்த வருடம் மீள்குடியேற்ற செயலணியின் வேலைத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு மீள் குடியேற்ற அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த 3000 மில்லியனில், அரசுக்கு மீள் குடியேற்ற அமைச்சினால் கொடுக்கப்பட வேண்டிய வெட்டுத்தொகைப்பணமான 1700 மில்லியனை,  குறித்த 3000 மில்லியன் நிதியில் இருந்தே அறவிடவைத்து. அநியாயம் செய்தனர். இந்த அநியாங்களுக்கு பிறகுதான், அரசிடம் இதனை தட்டிக்கேட்டு  கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு இந்த நிதியை போராடிப்பெற்றோம். அதானாலேயே இப்போது  வடக்கிலே வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அதுவும் எனது அமைச்சின் கீழ் இலாபத்தில் இயங்கிய  5 நிறுவனங்களை தாரைவார்த்து இந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு செயலணிக்கென, நிதியை பெற்றுள்ளோம்.

கடந்த வருட வரவுசெலவு திட்டத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீர நீண்டகால அகதி மக்களின் வேலைத்திட்டதிற்கெனவும் சிலாவத்துறை நகர அபிவிருத்தி  மன்னார் பஸ்தரிப்பு நிலையத்துடன் இணைந்த  நகர நிர்மாணம் தொடர்பில் கைத்தொழில் அமைச்சிற்கு நிதியை ஒதுக்குவதாக அறிவிப்பு செய்தார் . அவ்வாறாகஇருந்தால் அந்த முயற்சியை மேற்கொண்டது யார்? வரவுசெலவுதிட்ட வாசிப்பின் போது இந்த அறிவிப்பு வானத்தில் இருந்து வந்து குதித்ததா?

உள்ளுராட்சித்தேர்தலில் வன்னி மாவட்டத்தில் பல பிரதேசபைகளில் குறிப்பாக முசலி மற்றும் மாந்தை மேற்கு, மன்னார் பிரதேசபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரசை ஆட்சி அமைக்க விடக்கூடாது என்று மன்னாரிலும் யாழ்ப் பாணத்திலும் மாறி மாறி இரகசியக் கூட்டங்களை சதிகாரர்களும் அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோரும் நடத்திய போதும் இறைவனின் உதவியால் அவற்றை எல்லாம் முறியடித்து பல பிரதேசபைகளை நாம் கைப்பற்றினோம்.சில அரசியல் வாதிகளின் கழுத்தறுப்பினால் சில சபைகளை இழக்க வேண்டிய துர்ப்பாக்கியமும் ஏற்பட்டது.

மாந்தை மேற்கு பிரதேசபையில் 13 ஆசங்களில் 11 ஆசங்களை நாம் கைப்பற்றி ஆட்சியை தனதாக்கி கொண்டோம்.இந்த பிரதேசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றிபெற்ற வட்டாரங்களில் ஒரு வட்டாரத்தை தவிர பல வட்டாரங்கள் தமிழர்களும் முஸ்லிம்களும் செறிந்து வாழ்பவையாகவும் சில வட்டாரங்கள் தனித்த தமிழ் மக்கள் வாழும் வட்டாரங்களாகவும் இருப்பதை  இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதேபோன்று 10ஆசனங்களை கொண்ட  முசலிப்பிரதேசபையில் 6 ஆசனங்களை நாம் பெற்ற போதும் இந்த பிரதேசத்தில் உள்ள நல்லுள்ளம் கொண்டவர்களினதும், சமூகப் பற்றுள்ளவர்களினதும்  உதவியினால் மாற்று கட்சியில் வெற்றி பெற்ற சமூக பற்றாளர்கள் எமக்கு ஆதரவளிக்க முன்வந்ததனால் நாம் ஆட்சி அமைக்க முடிந்தது. இந்த பிரதேசபை சதிகாரர்களின் கைகளுக்கு சென்றிருந்தால் நமது மக்களின் நிலை என்னவென்பதை சிந்தித்துப்பாருங்கள்.

யுத்த காலத்தில் மெனிக் பாமுக்கும் வேறு பிரதேசங்களுக்கும் உயிருக்கு அஞ்சி ஓடி மீண்டும் திரும்பிய தமிழ் மக்களும் புத்தளத்திலும் தென்னிலங்கையிலும் சீரழிந்து வாழ்ந்த முஸ்லிம் மக்களும் மீண்டும் வந்து  இனமத பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு மக்கள் காங்கிரசை அங்கீகரித்ததன் விளைவே வடக்கிலே நாம் உள்ளூர் நிர்வாகங்களை பெற்றுக்கொண்டமைக்கான பிரதான காரணம்.

யுத்தம் முடிந்து முசலி, சிலாவத்துறை பிரதேசங்களில் மீள்குடியேற வந்த மனச்சாட்சியுள்ள பெரியவர்களுக்கு உண்மையான சில விடயங்கள் நன்கு தெரியும். இந்த பிரதேசத்தில் மக்கள் வாழ்ந்த ஊர்கள் எதுவுமே அடையாளப்படுத்த படமுடியாமல் அப்போது இருந்தது.

பொற்கேணி, பண்டாரவெளி போன்ற பல ஊர்களின் இணைப்பு பாதைகள் கூட காடுகள் மண்டிக்கிடந்தன உடைந்து கிடந்த பள்ளிவாசல்களில் இரவு நேரங்களில் தூங்க வேண்டியிருந்தது.மர நிழல்களிலே பகல் நேரங்களைகழிக்க வேண்டியிருந்தது கண்ணிவெடிகளுக்கு மத்தியிலே உயிரையும் பொருட்படுத்தாது பல ஊர்களுக்கு சென்று குறிப்பாக அரிப்பு போன்ற கிராமங்களில் மின்சார வசதிகளை வழங்கினோம்.

முசலிப்பிரதேசத்திலே பல கட்டிடங்கள் எமது அதிகாரத்தை பயன்படுத்தி எமது முயற்சியினால் அமைத்துக்கொடுக்கப்பட்டவையே.காடுகள் வளர்ந்து கைவிடப்பட்டு இருந்த அனைத்து ஊர்களிலும் அபிவிருத்தி செய்தவர்கள் நாங்களே. அனேகமான கட்டிடங்களின் அடிக்கல் நாட்டு விழாக்களுக்கும் திறப்பு விழாக்களுக்கும் அந்த வேளை பங்கு பற்றாத போதும் அபிவிருத்தியை மட்டும் இலக்காக கொண்டு செயற்பட்டோம்.இவ்வாறான விழாக்களில் நாங்கள் அன்று பங்கு பற்றுவதில் நாட்டம் காட்டாது, விளம்பரப்படுத்தாது இருந்தமை இப்போது தவறு என்றே உணரதோன்றுகின்றது. ஏனெனில் இந்த அபிவிருத்தி திட்டத்திற்கான பணம் எங்கிருந்து வருகின்றது இதற்கான காரணகர்த்தாக்கள் யார்?? என்று தெரியாத்தனாலே தான் பழி சொல்லுகின்றனர்.நிதியை பெருவதற்கு நாம் பட்ட கஸ்டங்களை புரியாதவர்கள் இன்று அபாண்டங்களை  பரப்பும் போது எமக்கு அவ்வாறு எண்ணத்தோன்றுகின்றது.

அது மாத்திரமின்றி ஒவ்வொரு வருடமும் ஆதரவாளர்கள், எதிராளிகள் என்று பாராது வீடு கட்டிக்கொடுத்திருக்கின்றோம்.எனினும் வீடுகளை பெற்றவர்கள் எமக்கெதிராக இப்போது செயற்படுகின்றனர்.  அது மட்டுமன்றி எங்கோ இருக்கும் ஓலை கொட்டிகளை படம்பிடித்து கிழக்கு மாகாணத்தில் எமது அரசியல் எதிரிகளுக்கு அதனை அனுப்பி எமக்கெதிராக செயற்படுகின்றனர். நாம் வன்னிக்கு எதுவுமே செய்யவில்லை கிழக்கு மாகாணத்தில் அரசியல் செய்ய வந்துவிட்டார் என்று கூறி அரசியல் எழுச்சியை தடுப்பதற்கான திட்டமிட்ட பிரச்சாரமே இது.குறை கூறுபவர்களை பற்றி நாம் அலட்டிக்கொள்ளாது மனச்சாட்சிப்படி செயற்படுவோம். மன்னார் நகர வேலைத்திட்டம் சிலாவத்துறைநகர வேலைத்திட்டம் பேசாலை சந்தைக்கட்டிடம் ஆகியவற்றுக்கான அடிக்கல் எதிர் வரும் 20திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுகின்றது நிதியமைச்சர் மங்கள் சமரவீர இதில் பங்கேற்பார்.

புதிதாக வந்த அரசியல் வாதி ஒருவர் பதவி கிடைத்த நாளில் இருந்தே எம்மை தூற்றி வருகின்றார். எமது பணிகளை தினமும் குறைகூறி கொச்சைப்படுத்தி வருகின்றார் புதிதாக வந்தவர் தானே கொஞ்சக்காலம் பேசட்டுமே! என்று நாம் பொறுமையாக இருந்த போதும். அண்மைக்காலமாக எல்லை மீறி நடக்கிறார். இது ஏனோ தெரியவில்லை வளர்ந்துவரும் அரசியல்வாதிகளுக்கு இது அவ்வளவு நல்லதல்ல என்று தெரியப்படுத்த விரும்புகின்றோம்.

சின்னச் சின்ன உதவிகளைக்கூட தனது கட்சிக்கார்களுக்கு வழங்கும் அவரது சின்னத்தனமான நடவடிக்கைகள் எமக்கு ஆச்சரியத்தை தருகின்றது.எனினும் எங்களை பொறுத்தவரையில் கட்சி இன மத பேதம் பாராது எமது அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து இந்த பிரதேச மக்களின் நலனுக்காக தொடர்ந்தும் உழைப்போம்  என்று  அமைச்சர் தெரிவித்தார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

 

Related posts

பேண்தகு அபிவிருத்தி திட்டத்திற்கு வலுசேர்க்க பொதுநலவாய நாடுகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் வாரத்தில்…

இராஜாங்க அமைச்சரின் சர்ச்சை!!!