அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

வக்பு சபைக்கு அழுத்தம் வழங்கும் தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள்

றிப்தி அலி

நாட்டிலுள்ள பள்ளிவாசல்களை கண்கானிப்பதற்காக நிறுவப்பட்டுள்ள வக்பு சபைக்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக அழுத்தம் வழங்கி வருகின்ற விடயம் தற்போது தெரியவந்துள்ளது.

குறிப்பாக பள்ளிவாசல்களுக்கு புதிய நிர்வாக சபை உறுப்பினர்களை நியமிக்கும் விடயத்திலேயே இந்த அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களை பள்ளிவாசலின் நிர்வாகிகளா நியமிக்கும் நோக்கிலேயே இந்த அழுத்தம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் ஊடாக பள்ளிவாசல்களையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையிலேயே தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ஏ. ஆதம்பாவாவின் அழுத்தம் காரணமாக சாய்ந்தமருது பெரிய பள்ளிவாலுக்கு அவரினால் சிரிபாசு செய்யப்பட்ட 42 பேர் நிர்வாக சபை உறுப்பினர்களாக வக்பு சபையினால் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில வருடங்களாக இப்பள்ளிவாசலுக்கான நிர்வாக சபை உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் புதிய நிர்வாகத்தினை தெரிவுசெய்யுமாறு வக்பு சபையினால் பல தடவைகள் இப்பள்ளிவாசலின் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த அறிவுறுத்தல் தொடர்பில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் பொறுப்பாளர்களிடமிருந்து எந்தவித பதிலும் வக்பு சபைக்கு கிடைக்கவில்லை. இவ்வாறான நிலையில் இப்பள்ளிவாசலின் நிர்வாகம் தொடர்பில் வக்பு சபைக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

இவற்றினை கருத்திற்கு கொண்டு இப்பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகமொன்றினை உடனடியாக தெரிவுசெய்யுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு வக்பு சபை அறிவுறுத்தியது.

இதற்கமைய, எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அம்பாறை மாவட்ட செயலகத்தில் இந்தப் பள்ளிவாசலுக்கான நிர்வாகத் தெரிவினை இரகசிய வாக்கெடுப்பு மூலம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பாக திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அலா அஹமட்டினால் கடந்த 10ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். அஷீகிற்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்காக இப்பள்ளிவாசலின் 99 மரைக்கார்களுக்கு அழைப்பு விடுக்குமாறு வேண்டப்பட்டிருந்தது.

எனினும், இந்த விடயம் தொடர்பாக கடந்த 20ஆம் திகதி வியாழக்கிழமை வரை எந்தவொரு மரைக்காருக்கும் பிரதேச செயலாளரினால் அறிவிக்கப்படவில்லை என்ற விடயம் தற்போது தெரிய வந்துள்ளது.

எவ்வாறாயினும், தெரிவிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களப் பணிப்பாளர் கடந்த 17ஆம் திகதி வக்பு சபைக்கு அறிவித்திருந்தார். இவ்வாறான நிலையில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். அஷீகினால் கடந்த 11ஆம் திகதி திணைக்கள பணிப்பாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவாவினால் இப்பள்ளிவாசலுக்கு 42 பேரைக் கொண்ட நிர்வாகமொன்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிபாரிசுக் கடிதத்தின் ஒவ்வொரு பக்கதிலும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவின் கையொப்பமும், இறப்பர் முத்திரையும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

அதேவேளை, கடந்த வருடம் ஏப்ரல் 19ஆம் திகதி நடைபெற்ற இந்தப் பள்ளிவாசலின் நிர்வாகத் தெரிவின் போதும் செயலாளர் தெரிவின் போதும் பிரச்சினை ஏற்பட்டது. எதிர்காலத்தில் இது போன்ற சர்ச்சைகள் ரமழான் மாதத்தில் இடம்பெறுவதை தவிர்க்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினரினால் சிபாரிசு செய்யப்பட்ட பட்டியலை இடைக்கால நிர்வாக சபை உறுப்பினர்களாக நியமிக்குமாறு சாய்ந்தமருது பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எப். இஸானாவினாலும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள நிர்வாக சபை உறுப்பினர் பட்டியலுக்கு உடனடியாக நியமனம் வழங்குமாறு சமய விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி வக்பு சபைக்கு வாய் மொழி மூலம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரின் சபைப் பத்திரம், சாய்ந்தமருது பிரதேச செயலாளரின் கடிதம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தின் சிபாரிசு ஆகியவற்றினை கருத்திற்கு கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவினால் சிபாரிசு செய்யப்பட்ட 42 பேரும் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் இடைக்கால நிர்வாக சபை உறுப்பினர்களாக வக்பு சபையினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2025ஆம் ஆண்டு பெப்ரவரி 18ஆம் திகதி முதல் 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 17ஆம் திகதி வரையான ஒரு வருட காலப் பகுதிக்கு செயற்படுவதற்கு இவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இக்காலப் பகுதியில் ஜமாத்தார் மற்றும் மரைக்காயர் ஆகியோரின் பட்டியலை தயாரித்தல், பள்ளிவாசல் தொடர்பான கணக்குகளை இறுதி செய்தல், பள்ளிவாசலுக்கு சொந்தமான சொத்துக்களை பட்டியல்படுத்தல், கடந்த கால நடைமுறைகளின் அடிப்படையில் பள்ளிவாசலுக்கான யாப்பினை தயாரித்தல், மற்றும் கடந்த கால நடைமுறைகளின் அடிப்படையில் புதிய நிர்வாகத்தினை தெரிவுசெய்தல் ஆகிய ஐந்து விசேட உத்தரவுகள் புதிய நிர்வாகத்திற்கு வக்பு சபையினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மைத்திரியின் வாக்குமூலம் AGக்கு அனுப்பிவைப்பு!

மேலும் 6 நோயாளர்கள் பூரண குணம்

வேண்டும் ரணில்! மீண்டும் ரணில்! தேர்தல் பிரச்சாரம்

editor