அரசியல்உள்நாடு

மியன்மார் அகதிகள் விடயத்தில் சர்வதேச சட்டங்களை மதித்து நடவுங்கள் – ரிஷாட் எம்.பி | வீடியோ

சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் விவகாரத்தில் மனிதாபிமான ரீதியில் செயற்படுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் உயர் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் (09) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

“நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் இந்த அரசாங்கத்தை கொண்டுவந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது அரசின் பொறுப்பாகும். 75 வருடங்களாக, பாரம்பரிய கட்சிகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டியே இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது.

எனவே, ஏனையவர்களைப் போன்று, நீங்களும் பொடுபோக்குத்தனமாக இருந்துவிடக் கூடாது என்பதில், மக்கள் உன்னிப்பாக இருக்கின்றனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் எகிறி வருகின்றது. இன்னும் நாட்டில் சாதகமான சூழல் ஏற்படவில்லை. அன்றாடத் தேவைகளுக்கான அத்தியாவசியமான சில பொருட்களின் விலைகளையாவது, குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிசி விலையில் கூட மக்களுக்கு இன்னும் விமோசனம் கிடைக்கவில்லை.

அன்றாட வயிற்றுப் பசிக்கான உணவைக் கூட சாதாரண விலைக்கு வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், உப்புப் பிரச்சினை உட்பட சில துரிதமாக தீர்க்கக் கூடிய விடயங்கள் இருப்பினும், அவற்றை ஏன் காலதாமதப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.

அதேபோன்று, தலைமன்னார் பங்குத் தந்தை டெனி கலிஸ்ரஸ் எமக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார். பிரதமருக்கு முகவரியிட்ட கடிதத்தின் பிரதியே அது.

அதாவது, மன்னாரில் 18990 ஹெக்டெயர் நிலப்பரப்பானது, வர்த்தமானி அறிவித்தல் மூலம் வனவிலங்கு திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பிரபல்யமான மன்னார் தீவில் இவ்வாறான வர்த்தமானி பிரகடனங்கள் மூலம், சுற்றுலாத்துறை மற்றும் இன்னோரன்னை துறைகளை கட்டியெழுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை கவனத்தில் எடுக்குமாறு வேண்டுகின்றேன்

யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில், 2009-2010 ஆண்டு பயிற்சிகளை நிறைவு செய்த 237 ஆசிரியர்களுக்கு, இதுவரையில் அவர்களுக்கான உத்தியோகபூர்வ பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.

கல்வி அமைச்சர் ஹரினி அவர்கள், இந்த விடயத்தை கருத்திற்கொண்டு, அவசரமாக அவர்களுக்கான சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

அதேபோன்று, இலங்கையிலே 400க்கு மேற்பட்ட நூலக உதவியாளர்கள் பணியாற்றுகின்றார்கள். அந்தவகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலக உதவியாளர்கள் உட்பட பலர் சம்பள மறுசீரமைப்பு விடயத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

2012 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு, பல்கலைக்கழக நூலக உதவியாளர்களை, சிற்றூழியர்களின் தரத்துக்கு பதவி இறக்கம் செய்ததன் மூலம், நூலக உதவியாளர்கள் பெரும் மனஉளைச்சலுக்கும் அவமானத்திற்கும் உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கின்றனர் எனவே, 2012க்கு முன்னர் இருந்த அதே பதவி நிலையில், அவர்களது நியமனங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சர் என்ற வகையில், பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த சபையில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால், மன்னார் தீவு பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சேதமடைந்துள்ள பாதைகளை சீரமைப்பதுடன், முறையான வடிகான் அமைப்பு உள்ளிட்ட இன்னோரன்ன உள்கட்டமைப்புக்கள் சீரமைக்கப்பட வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதுவரையில் எந்தவொரு நஷ்டஈடுகளும் வழங்கப்படவில்லை. இந்த விடயத்தையும் அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்.

அதேபோன்று, வவுனியா, சாளம்பைக்குளத்தில் குப்பைகூளங்களைக் கொண்டுவந்து கொட்டுகின்றார்கள். அந்தப் பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்றும் அமைந்துள்ளது.

எனவே, இந்தப் பகுதியில், வைத்தியசாலை கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனது அருகில் அமர்ந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மத் அவர்களும் அந்த ஊரைச் சேர்ந்தவரே. கடந்த கால கோட்டாவின் அரசாங்கம், இவற்றையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

எனவே, இந்த அரசாங்கத்திலாவது மேற்படி பிரச்சினைக்கு, மாற்றுவழி ஒன்றை கண்டறிந்து, விரைவில் தீர்வுகாண வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மேலும், அண்மையில் மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் முல்லைத்தீவில் கரையொதுங்கி, திருமலையில் வைக்கப்பட்டிருந்தபோது, நான் அவர்களை பார்வையிட சென்றிருந்தேன்.

அவர்களுடன் கலந்துரையாடுவதை பொலிஸார் தடுத்து, எமக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தினர். நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தபோது.

3 இலட்ச அகதிகளுக்கு, அரசாங்கத்தின் உதவியுடன், பல மாதங்கள் மூன்றுவேளை உணவு வழங்கி பராமரிக்க நடவடிக்கை மேற்கொண்டேன். எனவே, ஒரு மூத்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், எனக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டமை மன வருத்தத்தை தோற்றுவித்தது.

படுப்பதற்கு பாய், தலையணை கூட அந்த மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. பிரதேச செயலாளரின் அனுமதியுடனேயே நான் அங்கு சென்று, அவர்களுக்கு தேவையான சில உதவிகளை செய்தேன்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, எங்களுடன் இரண்டு தசாப்தகாலமாக இந்த பாராளுமன்றில் இருந்தவர் என்ற வகையில், அவரது நற்பண்புகளை கண்டிருக்கின்றோம்.

அவரது பேச்சு மற்றும் வாக்குறுதிகள் மீது நம்பிக்கைகொண்டுதான், மூவின மக்களும் இந்த அரசாங்கத்தை ஆதரித்தனர். இந்த அகதிகளை மியன்மாருக்கு திருப்பி அனுப்பவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு எமது நாட்டுக்கு அகதிகள் வருகின்றபோது, சர்வதேச சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். அந்தவகையில், இந்த மியன்மார் அகதிகள் விடயத்திலும் மனிதாபிமான ரீதியில் செயற்படுங்கள்.

மியன்மார் அரசாங்கத்தினாலோ அல்லது வேறு சில குழுக்களினாலோ, அங்குள்ள முஸ்லிம் மக்களை கொடுமைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தேர்ச்சியாக நடைபெறுகின்றன.

இதனால், 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோர், தங்கள் உயிர்களை பாதுகாக்க பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர்.

அதுபோலவே, எங்கோ சென்ற இந்த அகதிகள், துரதிஷ்டவசமாக இலங்கையில் கரையொதுங்கியுள்ளனர். எனவே, அவர்களை சர்வதேச சட்டங்களுக்கு முரணான வகையில் மியன்மாருக்கு திருப்பி அனுப்புவது நியாயமில்லை. அவ்வாறு அனுப்பும் பட்சத்தில், இதைவிட பெரிய கொடுமை ஏதும் இருக்காது.

எனவே UNHCR மற்றும் ஐ.நா நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, அகதிகளை தாம் விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நமது நாட்டிலிருந்தும் இவ்வாறு அகதிகளாகச் சென்றவர்கள், வேறு நாடுகளில் மகிழ்ச்சியுடன் நல்ல நிலையில் வாழ்கின்றனர். எனவே, சர்வதேச நடைமுறையை மதித்து செயற்படுங்கள்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, இவ்வாறு வந்த அகதிகளை முறைப்படி தாம் விரும்பிய நாடுகளுக்கு அனுப்பி வைத்ததை இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

அதேபோன்று, மியன்மார் அகதிகளுக்கு உதவி செய்ய விரும்புபவர்களை தடுக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்றார்.

-ஊடகப்பிரிவு

வீடியோ

Related posts

சத்திர சிகிச்சைகளை நிறுத்துமாறு சுற்றறிக்கைகள் வௌியிடப்படவில்லை

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 123 பேர் கைது

அரச ஊடக நிறுவனங்களுக்கு திறைசேரியில் இருந்து நிதி