அரசியல்உள்நாடு

மாவை ஐயாவின் மறைவு தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலில் நிரப்ப முடியாத வெற்றிடம் – யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் இரங்கல்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட பெருந்தலைவரும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ சேனாதிராஜா ஐயா அவர்களின் இழப்பானது தமிழ்த் தேசிய அரசியலிலும், தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் பயணத்திலும் என்றும் நிரப்ப முடியாத வெற்றிடமாகும்.

அன்னாரின் மறைவுக்கு யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் சார்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் 13ஆம் வட்டார மூலக் கிளை செயலாளர் என்.எம்.அப்துல்லாஹ் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டித்து, போராடி சிறைவாசமும் அனுபவித்தவர் மாவை சேனாதிராஜா.

அன்னாரின் இழப்பு தமிழ் பேசும் மக்களின் அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும்.

முஸ்லிம் மக்களுக்கும் மாவை சேனாதிராஜா ஐயா அவர்களுக்குமான தொடர்பு மிக நெருங்கியதாகவே ஆரம்பம் முதல் இறுதிவரை காணப்பட்டது.

அவர்களின் நீண்டகால அரசியல் தீர்வு குறித்த பயணத்தில் குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களையும் அரவணைத்தே அவரது செயற்பாடுகள் அமையப்பெற்றிருந்தது.

குறிப்பாக வடக்கிலே யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிவரும் முஸ்லிம் மக்களின் தேவைகள் மற்றும் மீள்குடியேற்றம் சார்ந்த விவகாரங்களில் அவர் பாராளுமன்ற உறுப்பினராகவும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராகவும் செயற்பட்ட காலத்தில் பல்வேறு வழிகளிலும் தன்னால் முடிந்த பங்களிப்புக்களை தான் வகித்த பதவி வழியாகவும் கட்சி வாயிலாகவும் வழங்கிய பெருந்தலைவர் ஆவார்.

அந்த வகையில் அவரது பாராளுமன்ற பதவிக் காலப்பகுதியிலும் பல்வேறு நிதி ஒதுக்கீடுகளை யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் வாழும் முஸ்லிம் வட்டாரங்களான 10ஆம் மற்றும் 13ஆம் வட்டாரங்களுக்கு ஒதுக்கியிருக்கின்றார்.

பல மில்லியன் கணக்கிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

இது அவரது அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் குணத்தைக் கொண்ட உன்னத தலைவர் என்பதை காட்டி நிற்கின்றது.

வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த அடையாளமாக விளங்கிய பழைமை வாய்ந்த தமிழ்த் தேசியக் கட்சியான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வா அவர்களின் காலப்பகுதியிலிருந்து கட்சியில் உறுப்பினராக செயற்பட்டு நீண்டகாலமாக கட்சியின் பெருந்தலைவராக கட்சியையும், வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களையும் தலைமை தாங்கி வழிநடாத்தி வந்தவரின் இழப்பு பேரிழப்பாகும்.

அவர் வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம் மக்களை என்றுமே பிரித்துப் பார்த்தது கிடையாது.

அவரது ஒவ்வொரு உரைகளும் முஸ்லிம் மக்களையும் இணைத்ததாக தமிழ் பேசும் மக்கள் என்றே என்றும் அமைந்திருக்கும்.

1990 ஆம் ஆண்டு வெளியேற்றத்திற்கு முன்னர் முஸ்லிம் மக்களுடன் அவருக்கும், கட்சிக்கும் இருந்த பிணைப்பானது வெளியேற்றகால இடைவெளியின் பின்பு குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைக் காலத்திருந்து மீண்டும் இன்னும் மிக நெருங்கியதாக அவருக்கும், கட்சிக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையில் கட்டியெழுப்பப்பட்டிருந்தது. அந்த நெருக்கமும், தொடர்பும் இன்றுவரை காணப்படுகின்றது.

இவ்வாறான தலைவர்களின் மென்போக்குகளே இலங்கைத் தமிழ் அரசுக்கட்சிக்கும் – யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களுக்குமிடையிலான பிணைப்பை இன்றுவரை தொடர்ச்சியாக முன்னோக்கி கொண்டு செல்கின்றது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கும், உறவுகளுக்கும், மக்களுக்கும் குறிப்பாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தொண்டர்களுக்கும் யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று என்.எம்.அப்துல்லாஹ் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

-பாறுக் ஷிஹான்

Related posts

பாணின் புதிய விலை இதோ!

மேர்வின் சில்வா SLFP இல் இணைந்தார்

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான திகதி குறித்து சரியான தீர்மானமில்லை