உள்நாடுபிராந்தியம்

பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பிய நபர் – இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம்

வாத்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒரு குழந்தையின் தந்தை ஒருவர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பிய போது, இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்ததாக கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வாத்துவை தல்பிட்டியவைச் சேர்ந்த ஆர்.எம்.சமித தில்ஷான் என்ற 24 வயதான ஒரு குழந்தையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

இறந்தவர் வாத்துவ பொலிஸாரால் வாகன விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டு, பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் வீட்டில் இருந்தபோது இரவில் இரத்த வாந்தி எடுத்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் இறந்தவரின் மனைவி பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு அளித்ததை தொடர்ந்து, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பாணந்துறை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ​​மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் பயணித்ததாகவும், அவர்களின் உடலில் காயங்கள் இருந்ததால், குற்றம் ஏதும் செய்து தப்பிச் சென்றனரா? என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தல்பிட்டி பகுதி மக்கள் நேற்று (11) இரவு ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், அதன் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

நிலைமையைக் கட்டுப்படுத்த பண்டாரகம, பின்வத்த, மொரோந்துடுவ, ஹிரன மற்றும் அண்மித்துள்ள பிற பொலிஸ் நிலையங்களிலிருந்தும் பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.

Related posts

புலனாய்வுத்துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியங்களை ரிப்கான் பதியுதீன் நிராகரிப்பு

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று

“எதிர்க்கட்சி தலைவராக நாமல்?”