அரசியல்உள்நாடு

புத்தளம் மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதே எமது இலக்கு – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்

வடபுல மக்களுக்கு அடைக்கலமளித்த புத்தளம் மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கரிசனையுடன் செயற்பட்டு வருவதாக, கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் கூட்டணியில், புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான என்.டி.எம்.தாஹிர் மற்றும் எம்.எச்.முஹம்மத் ஆகியோரை ஆதரித்து, வெள்ளிக்கிழமை (25) அல்-காசிம் சிட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,
“புத்தளம் மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதில், எமது கட்சி அயராது உழைக்கிறது.

இதற்காகப் பல அர்ப்பணிப்புக்களையும் செய்து வருகிறது. நெய்னா மரிக்காருக்குப் பின்னர், புத்தளம் மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தை எமது கட்சியே காப்பாற்றியது.

நவவிக்குத் தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தை வழங்கினோம். இதையடுத்து, கடந்த பொதுத் தேர்தலில் அலிசப்ரி ரஹீமை வெல்லச் செய்தோம்.
வடபுலத்திலிருந்து வந்தோர்களை எம்.பியாக்கும் வேலையை நாங்கள் செய்யவில்லை.

புத்தளம் மண்ணைச் சேர்ந்தவர்களையே இத்தேர்தலில் நிறுத்தியுள்ளோம். இந்த ஊரின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுவதற்காக எமது கட்சி முயற்சிகளை எடுத்தபோது, சிலர் பிரதேசவாதம் பேசினர். இவர்களை நாம் மறந்துவிட முடியாது. இன்று இவர்களே நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

சுமார், ஒன்றரை இலட்சம் சிறுபான்மை வாக்குகளை வைத்துக்கொண்டு, ஒரு பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கே இவ்வூர் தடுமாறியது. இவ்விடயத்தில், உங்களுக்கு அரசியலில் வழிகாட்டியது, இந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸே!
வடபுலத்து மக்களுக்காக, புத்தளம் மக்கள் செய்த அர்ப்பணிப்புக்களை என்றுமே எமது கட்சி மதிக்கிறது.

கடந்த காலத்தில், இம்மண்ணின் பிரதிநிதித்துவத்தை மலின சலுகைகளுக்காகக் காட்டிக்கொடுத்தவரை தண்டிக்க முற்பட்டபோது, முட்டுக்கட்டை போட்டவர்கள், இன்று ஊருக்காகப் பேசுவதாகக் கூறுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?” என்று குறிப்பிட்டார்.

-ஊடகப்பிரிவு

Related posts

முதலாவது வணிக விமானம் நாட்டிற்கு

அரச சபை கட்டிடம் : பிடியாணை இடைநிறுத்தம்

ஈரான் – ஈராக் வான்பரப்புகள் ஊடாக பயணிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை