அரசியல்உள்நாடு

புதிய அரசியல் கலாசார மாற்றத்துக்கு முழுமையான ஆதரவு – ஹர்ஷ டி சில்வா

நாட்டில் வடக்கு, தெற்கு மற்றும் மலையகம் என சகல மக்களும் அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கின்றனர். மக்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய அரசியல் கலாசார மாற்றத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்க தீர்மானித்துள்ளதாக கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறி வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

கடந்த தேர்தலை விட இம்முறை இரு மடங்கு அதிக விருப்பு வாக்குகளை வழங்கி என்னை வெற்றி பெறச் செய்த கொழும்பு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பாராளுமன்றத்தில் எனது செயற்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கப் பெற்ற வரவேற்பாகவே நான் இதனைப் பார்க்கின்றேன்.

அதேபோன்று எதிர்வரும் காலங்களிலும் மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் செயற்படுவேன். ஊழலுக்கு எதிராக போராடுவது, பொருளாதார தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தல் என்பவற்றை தொடர்ந்தும் மேற்கொள்வேன்.

எனினும் நாட்டில் வடக்கு, தெற்கு மற்றும் மலையகம் என சகல மக்களும் அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கின்றனர். இது புதியதொரு கலாசாரமாகும். எதிர்க்கட்சி எம்.பி.யாக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தீர்மானித்திருக்கின்றேன்.

பொருளாதாரம் தவறான பாதையில் சென்றால் அதற்கு எதிராகக் குரல் கொடுத்து மக்களுக்காக முன்னிப்பதற்கு, ஊழல் மோசடிக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். மக்கள் ஏற்படுத்தியிருக்கின்ற இந்த புதிய அரசியல் கலாசார மாற்றத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கும் நான் தயாராகவுள்ளேன் என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

ஜோசப் ஸ்டாலினுக்கு விளக்கமறியல்

நாடுமுழுவதும் சீரான வானிலை

களனி பல்கலைகழக சிசிரிவி கெமரா – 25 பேருக்கு இரண்டு வருடங்கள் வகுப்பு தடை