வணிகம்

புகையிலை செய்கைத் தடை தொடர்பான மாற்றுக் கண்ணோட்ட அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO)-ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கையின் வருடாந்த ஜீஎஸ்பி பிளஸ் ஏற்றுமதி வருவாய் சுமார் 480  மில்லியன் அமெரிக்க டொலராக மட்டுமே இருக்கும் நிலையில், இலங்கையர்களின் வருடாந்த புகையிலை பொருட்களின் பாவனை வருடத்துக்கு 660 மில்லியன் அமெரிக்க டொலரை விட அதிகமானதாக காணப்படுகின்றது எனவும், பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையே நாம் செலவிட்டு வருகின்றோம் எனவும் புகையிலைப் பாவனையின் யதார்த்த நிலை இதுவே எனவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

புகையிலைச் செய்கைத் தடை மற்றும் மாற்றுப்பயிர்கள் தொடர்பான உத்தேச திட்டம் தொடர்பில், விவசாயிகளிடம் பெறப்பட்ட கருத்துக்கள் அடங்கிய விவசாய பொருளாதார அறிக்கை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு, செவ்வாய்க்கிழமை  (26) கொழும்பு ரமடா ஹோட்டலில் இடம்பெற்ற போது, பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.

கிரீன் ஸ்பேஸ் கன்சல்டன்சிஸ் நிறுவனத்தினால் (GSC) வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், 2020 ஆம் ஆண்டு கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள புகையிலை செய்கைத் தடை தொடர்பில், நாட்டிலுள்ள புகையிலைச் செய்கையாளர்களின் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன், அவர்களின் வாழ்வாதாரத்தை இந்த நடவடிக்கை பாதிக்கும் எனவும், மாற்றுப்பயிர்கள் அல்லது வருமான மாற்றங்கள் தொடர்பில் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கள் என்னவென்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் துறையுடன் சம்பந்தப்பட்ட 05 இலட்சம் தொழிலாளர்கள் இதை நம்பி ஜீவனோபாயம் நடாத்துவதாகவும், புகையிலை உற்பத்தியானது ஒரு வணிகப்பயிர் தொழில் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், இந்தத் துறை நிலையானதும், கட்டமைப்புக்குட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுப்பயிரானது வெறுமனே பணம் சம்பாதிக்கும் துறையாக இல்லாமல், புகையிலைத் தொழிலைப் போன்று உயிரோட்டமுள்ள செய்கையாக அமைய வேண்டுமெனவும் அவர்கள் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

 

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

புகையிலைச் செய்கையானது 2020 ஆம் ஆண்டிலிருந்து தடை செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் சிகரெட் மற்றும் புகைத்தல் பொருட்களின் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்படவுள்ளது. ஒவ்வொருநாளும் 02 மில்லியனுக்கு அதிகமான இலங்கையர்கள் புகைத்தல் பாவனையில் ஈடுபடுகின்றனர். இந்தப் பாவனையால் தினமும் 33 பேர் இறக்கின்றனர். ஆய்வுகளின் படி நாளொன்றுக்கு புகைத்தல் பாவனைக்கென 200 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பின் கணிப்பின் படி இலங்கை நேரடியாகவும், மறைமுகமாகவும் புகைத்தலுக்காக 89 பில்லியன் ரூபாய்களை (662 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) செலவிட்டுள்ளது.

இலங்கையின் வருடாந்த புகைத்தல் பாவனை செலவு, எமது மேலதிக ஏற்றுமதி வருவாயான ஐரோப்பிய ஜீ.எஸ்.பி பிளஸ்ஸை விடவும் 37% சதவீதம் அதிகமானதாகக் காணப்படுகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் மேலும் கூறியதாவது,

இந்தப் பாவனை தொடர்பில், இன்னுமொரு உதாரணத்தை நாம் ஒப்பிடுவோமேயானால் 2015, 2016 ஆம் ஆண்டுகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இலங்கையில் சேதமாகியவற்றின் பெறுமதிக்குச் சமனாக, எமது நாட்டவரின் புகைத்தல் பாவனை இருக்கின்றது.

எனவேதான், புகையிலை தொழிலால் ஏற்படும் வருமானத்துக்கு மாற்றீடாக வினைத்திறனுள்ள, வாழ்க்கைக்கு பயனளிக்கும் பயிர்களை அறிமுகப்படுத்தி, புகையிலைத் தொழிலை நிறுத்த வேண்டுமென அரசு உணர்ந்திருகின்றது என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த அறிக்கையை ஜீஎஸ்சி (GSC) நிறுவனத்தின் ஸ்தாபகரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சத்துர ரொட்ரிகோ அமைச்சரிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

தேசிய பால் உற்பத்தியை 70 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை

எதிர்வரும் இரண்டு வாரங்களில் இறக்குமதி பால்மாவுக்கும் விலைச் சூத்திரம்

கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு