உள்நாடு

பல பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மின்சாரம் துண்டிப்பு

இங்கிரியவைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் வசிப்பவர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.

மின்சார சபை ஊழியர்கள் திறமையற்ற முறையில் செயல்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மார்ச் 22 ஆம் திகதி மதியம் இங்கிரியவின் ரைகம்வத்த பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பல மரங்கள் விழுந்து மூன்று உயர் மின்னழுத்த மின் கம்பங்கள் சரிந்தன.

இதன் காரணமாக, இங்கிரியவிலிருந்து கொழும்பு வரையிலான ஹந்தபான்கொட, மஹா இங்கிரிய, ரைகம்வத்தே, இமகிர உள்ளிட்ட பல பகுதிகளில் 4 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் பிரதேசவாசிகள் பெரும் சிரமத்தை எதிர்க்கொண்டுள்ளனர்.

மின்சார வெல்டிங் தொழிலில் தங்கள் வாழ்க்கையை நடத்தும் பலர் இந்தப் பகுதிகளில் வசிக்கின்ற நிலையில், தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைக்க இயலாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சுயதொழில் செய்பவர்களும், கடைகளை நடத்துபவர்களும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இறைச்சி, மீன், தயிர், ஐஸ்கிரீம், பானங்கள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளில் சேமிக்கப்பட்ட பல உணவுப் பொருட்கள் தற்போது பழுதடைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

மின்வெட்டு காரணமாக, இந்த நாட்களில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கின்றனர்.

மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க மின்சார சபை ஊழியர்கள் 4 நாட்களாக கடுமையாக உழைத்து வந்தாலும், அதை மீட்டெடுக்க முடியவில்லை.

ஹந்தபான்கொட பகுதி மின்சார அமைச்சரின் சொந்த பகுதி என்பதால், இதை கருத்தில் கொண்டு மின்சார விநியோகத்தை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து விசாரிக்க அத தெரண மின்சார சபையின் தலைவரையோ அல்லது பொறுப்பான அதிகாரியையோ தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்த போதிலும், அந்த முயற்சி பயனளிக்கவில்லை.

Related posts

சட்டப்படி வேலை : அலுவலக ரயில் சேவைகளில் தாமதம்

வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படுவது தொடர்பில் அவசர அறிவிப்பு

editor

தற்போதைய அரசாங்கத்திற்கு புரிதல் இல்லை – குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து விசேட அறிக்கை வெளியிட்ட ரணில்

editor