2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மையமாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களுக்கு தெளிவூட்டும் முகமான செயலமர்வொன்று இன்று (13) கொழும்பு மொனார்க் கார்டன் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. தற்போது நிலவும் வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பத்து அம்ச வேலைத்திட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தரவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இங்கு சமூகமளித்தோர் மத்தியில் விளக்கமளிக்தார்.
இச்செயலமர்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அடிமட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரையிலும், மேல் மட்டத்தில் இருந்து அடி மட்டம் வரையிலுமாக பெறப்பட்ட கருத்துக்கள், தகவல் மற்றும் தரவுகளின் அடிப்படையில் இந்தக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படைக் கொள்கைகளில் காலத்திற்கு ஏற்றாற் போல அவ்வப்போது மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளும் இயலுமை இதில் காணப்படுகின்றன.
இந்த முக்கிய கொள்கைகளில் சில திருத்தங்கள் நிகழலாம். இதில் நெகிழ்வுத்தன்மை காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் முன்வைத்த 10 அம்ச கருத்து நிலைப்பாடுகள் பின்வருமாறு;
- ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு மனிதாபிமான முதலாளித்துவமே அவசியமானதாகும்.
ஒரு நாட்டின் குறிக்கோள் முன்னேற்றமும் அபிவிருத்தியும் சௌபாக்கியமுமாகும். ஒரு நாட்டின் இருப்புக்கு செல்வம் தேவையான ஒன்றாகும். இந்த செல்வத்தை உருவாக்கும் முறைமைகள் குறித்து பல்வேறு கோட்பாடுகள் காணப்படுகின்றன. சமூக சந்தை, தடையற்ற சந்தைப் பொருளாதாரம் மற்றும் மனிதாபிமான முதலாளித்துவம் ஆகியவை உலகின் பல நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மிகவும் வெற்றிகரமான வழிமுறைகளாக அமைந்து காணப்படுகின்றன. இந்த முறைமைகளைத் தவிர, வேறு எந்த சாத்தியமான மாற்றுத் தெரிவுகளும் இல்லை. மேலும் பல மாற்று முறைமைகள் தோல்வியடைந்து பொருளாதார வீழ்ச்சியை நோக்கி இட்டுச் சென்றுள்ளன.
செல்வத்தை உருவாக்கும் செயன்முறையில் அரச வளத்தை விடவும் தனியார் முயற்சியாண்மைகளுக்கு கூடிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். தனியார் தொழில் முனைவோர் மூலம் உருவாக்கப்படும் செல்வம் தேசிய உற்பத்தி திறனை மேம்படுத்தும். அரசாங்கத்தால் வெற்றிகரமான தொழில் முயற்சியாண்மைகளைச் செய்ய முடியாது. தொழில் முயற்சியாண்மைகளை செய்வதற்கான சிறந்த வழி தனியார் முயற்சியாண்மைகளாகும்.
இதில், தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மை என்பற்றின் அடிப்படையில் எரிபொருள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு போன்ற ஆபத்தான பகுதிகளில் அரசின் தலையீடு அவசியமாகும். மனிதாபிமான முதலாளித்துவத்தில் செல்வம் உருவாகும். எனவே, மனிதாபிமான முதலாளித்துவத்தின் மூலம் செல்வம் உருவாக்கப்படும். அந்த செல்வம் சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கும்.
இது நடக்க வேண்டும். இதை நோக்கி நாம் கவனம் செலுத்த வேண்டும். சமநிலையை ஏற்படுத்துவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் தலையீடு இங்கு தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
- பரந்த மனிதாபிமான முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் வரையறுக்கப்பட்ட அரசாங்க தலையீடு மூலம் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய முடியும்.
சனத் தொகை கணக்கெடுப்பில் நகர்ப்புறம், கிராமப்புறம் மற்றும் தோட்டப்புறம் என 3 பிரிவுகள் காணப்படுகின்றன. நமது வங்குரோத்தான நாட்டில் ஒரு குடும்ப அலகின் வருமானம் மற்றும் செலவினக் கணக்கெடுப்பை முன்னெடுக்க நாம் தவறிவிட்டோம். வங்குரோத்து நாட்டைப் பொறுப்பேற்கும்போது இந்த கணக்கெடுப்பையே முதலில் செய்ய வேண்டும்.
2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட சனத் தொகை மற்றும் புள்ளிவிவரவியல் அறிக்கைகளில், 2016 சனத் தொகை மற்றும் புள்ளிவிவரவியல் அறிக்கையின் பிரகாரம், சமூகத்தில் 20% செல்வந்தர்கள் மொத்த வருமானத்தில் 51% யும், 20% ஏழ்மையடைந்தோர் 5% வருமானத்தையுமே ஈட்டுகின்றனர். 2019 கணக்கெடுப்பின்படி, 20% செல்வந்தர்கள் பெற்ற மொத்த வருமானம் 51.4% ஆக அதிகரித்தது காணப்படுகின்றது. 20% ஏழ்மையடைந்தோர் சதவீதம் 5% லிருந்து 4.6% ஆக குறைந்துள்ளது.
நல்லாட்சி காலப்பிரிவின் போது பொருளாதாரம் வளர்ச்சியடைந்து ஓரளவு முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், இந்த முன்னேற்றம் செல்வந்தர்களையும் ஏழ்மையடைந்தோரையும் எவ்வாறு பாதித்தது என்பதை இது தெளிவாக காட்டுகிறது. எனவே, பரந்த மனிதாபிமான முதலாளித்துவ கட்டமைப்பினுள் மட்டுப்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் தலையீட்டின் ஊடாக ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
- நலன்புரி அரசைப் பாதுகாத்துக்கொண்டு மாற்று வாய்ப்புகளுக்குத் திரும்புதல்.
தேசிய நலன்புரி அரசின் மூலம் இலவச சுகாதாரம் மற்றும் இலவச கல்வி என்பன வழங்கப்படுகிறது. இந்த நலன்புரி அரசுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட வேண்டும். அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதிக்கு சிறந்த பலன் கிட்ட வேண்டும்.
வினைதிறனான நலன்புரி அரசு முன்னெடுக்கப்பட வேண்டும். வழங்கப்படும் சேவைகளும் உயர்தர சேவைகளாக வலுப்படுத்தப்பட வேண்டும். இலவசக் கல்வியைப் பாதுகாக்கும் அதே வேளையில், புதிய தொழில்நுட்பம், நவீனத்துவம் மற்றும் புதிய போக்குகள் மூலம் பாடத்திட்டத்தை மாற்றியமைத்து, சர்வதேச தொழிலாளர் சந்தையின் கேள்வியைப் பூர்த்தி செய்யும் இலவச கல்வி முறைமையை நாம் வகுக்க வேண்டும். சகல தனியார் துறைகளையும் உள்ளடக்கிய மாற்றுக் கல்வி வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
- அடைவுகள் சார்ந்த காலக்கெடுவுடன் கூடிய வறுமை ஒழிப்புத் திட்டத்தை நோக்கி நகர்தல்.
எத்தனை அசாங்கங்கள் தோன்றினாலும், வறுமையை ஒழிப்பதாக கூறினாலும் துல்லியமான வறுமைக் கோடு இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இன்றும் கூட ஏழ்மையடைந்தோர் எண்ணிக்கை தொடர்பில் அரசிடம் சரியான தரவுகள் இல்லை. ஆனால் அஸ்வெசும திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஏழ்மையடைந்தோர் பற்றிய தெளிவான தரவு LIRNEasia நிறுவன தரவுகளிலயே காணப்படுகின்றன. இத்தரவுகளின்படி, நாட்டின் சனத் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். இதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி காலக்கெடுவுடன் கூடிய வறுமை ஒழிப்புத் திட்டத்தை நோக்கி நகரும்.
வறுமையைக் கணக்கிடாத, விஞ்ஞானபூர்வமற்ற தரவுகளின் அடிப்படையில் அஸ்வெசும நடைமுறைப்படுத்தப்பட்டாலும் கூட, பல் பரிமாண வறுமை குறித்து UNICEF மேற்கொண்ட அறிக்கை மூலம், நமது நாட்டின் ஏழ்மை நிலை குறித்து நாம் ஒரு நிலைப்பாட்டை எடுக்கலாம். எனவே, நாம் தங்கி வாழும் வாழ்வாதார கலாச்சாரத்தில் இருப்பதற்கு பதிலாக, சுயமாக சொந்த வாழ்வாதார கலாசாரத்தை நோக்கி செல்ல வேண்டும். தங்கி வாழும் கலாசாரத்தை விட்டு விலக வேண்டும். அரசியல் அடிமைத்தனத்திலிருந்தும், நிவாரண அடிமைத்தனத்திலிருந்தும் ஒதுங்கி வறுமையை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்தை வகுக்க வேண்டும்.
- நாட்டின் 9 மாகாணங்களிலும் சமநிலையான பொருளாதார வளர்ச்சியை உருவாக்க வேண்டும்.
ஒரு நாடாக முன்னேற, ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாம் செல்ல வேண்டும். உற்பத்தித் தொழில்கள், புதுமை சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி, சுற்றுலாத் துறையின் வளர்ச்சி, புதிய தொழில்களை உருவாக்குவதன் மூலம் உருவாகும் பொருளாதார வளர்ச்சியை சீரான பொருளாதார வளர்ச்சியாக மாற்றியமைக்க வேண்டும்.
இலங்கை மத்திய வங்கி அறிக்கையைப் பார்க்கும் போது நாட்டில் சீரான பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. ஒவ்வொரு மாகாணமும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேறுபட்ட பங்களிப்புகளை வழங்கி வருகின்றன. மேல் மாகாணம் 41% பங்களிப்பை வழங்குகின்றது. மீதமுள்ள 59% பங்களிப்பு எஞ்சிய 8 மாகாணங்களுக்கிடையில் பிரிக்கப்படுகின்றன. இது சரி செய்யப்பட இருக்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியை 341 பிரதேச செயலக பிரிவுகள் ஊடாகவும் கணக்கிட வேண்டும்.
- புதிய தொழில்நுட்பத்தால் விவசாயத்தை பரிபூரணமாக்க வேண்டும்.
விவசாயத்தையும், தோட்டத் துறையை நவீனமயமாக்க வேண்டும். விவசாய உற்பத்தி முயற்சிகளில் நெதர்லாந்து போன்ற நாடுகள் அடையும் தொழில்நுட்ப சாதனைகளை நமது நாடும் எட்ட வேண்டும்.
- பாகுபாடுகள் இன்றி அனைவரையும் இலங்கையர்களாக வலுவூட்டல்.
சகல வகையிலும் மக்கள் வலுவூட்டப்பட வேண்டும். பொருளாதாரம், சமூகம், மதம், கலாச்சாரம் போன்று சகல அம்சங்களிலும் சமூகத்தை நேர்மறையாக வலுப்பெறச் செய்து, வேறுபாடுகள் காட்டாது சகல இனம், மதம் மற்றும் சமூகத்தவர்களுக்கும் அவர்களுக்குரிய மதிப்புகளைக் கொடுக்க வேண்டும். நாம் அனைவரும் இலங்கையர்களாக பொதுவாக அடையாளப்படுத்தப்பட வேண்டும்.
- ஜனநாயகத்தை வலுவூட்டல்.
அடிப்படை உரிமைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மட்டுமல்லாது, பொருளாதார சமூக அரசியல் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். அரசியலமைப்பு இதன்பால் விரிவுபடுத்தப்பட்டு ஜனநாயகத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- நிலைபேறான அபிவிருத்தி.
சுற்றுச்சூழலுக்கு உகந்த, சுற்றுச் சூழலை மையமாகக் கொண்ட அபிவிருத்திகளை நோக்கி நாம் செல்ல வேண்டும்.
- நாட்டுக்கு பெறுமானம் சேர்க்கும் வெளிநாட்டு உறவுகளை ஏற்படுத்துதல்.
வெளிநாட்டு உறவுகளில் சமநிலையான போக்கு கையாளப்பட வேண்டும். அணிசேராக் கொள்கையை கடைப்பிடித்து, எதிர்மறை பிரயோகங்கள் பயன்படுத்தப்படாத ஒரு நேர்மறையான உறவுக்கு வழிவகுத்துச் செல்லும் பயணம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
நாட்டிற்கு மதிப்புச் சேர்க்கும், நாட்டிற்கு பெறுமானம் சேர்க்கும் உறவுகளை நாம் ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் தமதுரையில் சுட்டிக்காட்டினார்.