அரசியல்உள்நாடு

நமது நாட்டுக்கும் எமது பிரஜைகளுக்கும் ஒரு புதிய விழுமியக் கட்டமைப்பு தேவை – ஜனாதிபதி அநுர

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

“கிளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (01) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறியதாவது:

பொது மக்களின் செயலூக்கமான பங்களிப்புடன் மாத்திரமே ” கிளீன் ஶ்ரீலங்கா ” வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்.

2025க்குள் காலடி எடுத்து வைக்கும் இந்த சந்தர்ப்பம் புதிய வருடமொன்றின் ஆரம்பம். புதிய வருடத்தின் உதயம் என்று கூறலாம். எனவே பல தசாப்தங்களாக, எமது நாட்டில் இவ்வாறான பல வருடங்கள் கடந்து சென்றுள்ளன. நாம் நல்ல விடயங்களுக்குள் காலடி வைத்தோமா என்ற கேள்விக்குறி எமக்குள் இருக்கிறது.

கடந்த ஒவ்வொரு வருடங்களும் சிறந்த  விடயங்களுக்காக புதுப்பித்துக் கொண்டு முன்னோக்கிச் சென்றோமா?இன்றேல் மோசமான விடயங்களை புதுப்பித்து கடந்த காலத்திற்குச் சென்றோமா? என்ற பிரச்சினை எம்முன் உள்ளது. அதனால் இந்த புத்தாண்டுடன் எமது நாட்டை புதிய மாற்றத்துக்கு உட்படுத்தும் நிரந்தரமான  நோக்கம் எமக்கு உள்ளது. அதற்கான கடமையும் பொறுப்பும் எம்மை சார்ந்திருக்கிறது. நானும் எனது அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் அனைத்து அரசியல் தரப்புக்களும் இதற்கான அர்ப்பணிப்பை செய்வோம். 

எமது நாட்டில் புது வருடம் புதியதொரு அரசியல் கலாச்சாரத்துடன் ஆரம்பமாகிறது. இந்த நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் அடித்தளம் இட்டிருக்கிறோம். அரசியல் கலாசாரம், வீண் விரயம், குடும்ப வாரிசுகள், எல்லையை மீறி அதிகாரத்தை பயன்படுத்தல், அதிகாரத்தை மக்களுக்கு எதிராக பயன்படுத்தல், மக்களுக்கு மேலாக இருக்கும் அரசியல்வாதிகளாக இருத்தல் என்ற அனைத்தையும் இல்லாமல் செய்து மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய, மக்களின் தேவையுடன் இசைந்து செல்லக்கூடிய ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம். புதிய வருடத்தின் சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய திட்டங்களை நாம் வகுத்திருக்கிறோம். 

கடந்த காலங்களில் எமது பொருளாதாரம் வங்குரோத்தான நிலையில் காணப்பட்டது. தற்போது பொருளாதாரத்தை மேலோட்டமாக பார்க்கும் போது நிலைபேறான தன்மையை உருவாக்கியிருக்கிறோம். கடந்த வருடத்தின் நடுப்பகுதியில் வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பு நமக்கு கிடைத்திருந்தது. 

நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், அதிகாரிகள்,  அரசியல் துறை என்பன பாரிய முயற்சியை மேற்கொண்டதாலேயே அந்த இலக்கை அடைய முடிந்தது. எனவே பொருளாதாரத்தை ஸ்திரமடையச் செய்ய எம்மால் முடிந்திருக்கிறது.

அது போதுமானதல்ல. எமது பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் புதியவையாக அமைந்துள்ளன. அதற்காக அரசியல் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்திருக்கிறோம். 

அதேபோன்று எமது நாடு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல வகையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியிருந்தது. எமது நாட்டின் பாதுகாப்பை மிகச் சிறப்பாக உறுதிப்படுத்த எம்மால் முடிந்துள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடனும் உறுதியாகவும் கூறுகிறோம். 

கடந்த வருடத்தில் அறுகம்பையை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் கிடைத்திருந்தது. எமது பொலிஸார், எமது புலனாய்வுத் துறையினர், எமது முப்படையினர் விறுவிறுப்புடன் செயலாற்றி நாட்டின் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதிபடுத்தியுள்ளனர்.

அதேபோல் நாட்டிக்குள் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கான பலமான வேலைத்திட்டம் எமக்கு இருக்கிறது. எமது நாட்டில் நீண்ட காலமாக சட்டத்தின் ஆதிக்கம் கருத்தில்கொள்ளப்படாத நிலைமை காணப்பட்டது. 

குறிப்பாக குற்றவாளிகளும் மோசடிக்காரர்களும் சட்டத்துக்கு மேலாக இருக்கும் வகையில் அரசியல் 

துறை இருந்தது. தனக்கு தேவையான மற்றும் தாம் நினைத்தவாறு சட்டத்தை மீறிச் செல்லும் நிலைமை காணப்பட்டது. அரசியலமைப்பை மீறினர். எமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் அரசியலமைப்பை மீறியிருப்பதாக பல சந்தர்ப்பங்களில் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் முதல் பிரஜை சட்டத்தின் ஆதிக்கத்தை சிதைக்கும் நாட்டில், சட்ட ஒழுங்கு பற்றி என்ன பேசுவதோ என்பதை கேட்கிறேன். எனவே நாம் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த பாரிய முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதேபோல் எமது நாட்டின் அரச

 கட்டமைப்பு, அரசியல் கட்டமைப்பு மற்றும் முழு சமூகத்திற்குள்ளும் ஊழல் மோசடி, வீண் விரயம் என்பன பரவியுள்ளன. எமது முழு நாட்டுக்குள்ளும் புற்றுநோயினைப் போல பரவியுள்ளது. 

ஊழல் மோசடியை நிறுத்த நாம் பாரிய முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. அதற்குள் எமது நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பெரும் பணி உள்ளது. அதற்கான பணியை ஆற்றுவதற்கு தேவையான ஒத்துழைப்பை சட்டமா அதிபர் திணைக்களம் வழங்குமென நம்புகிறேன். 

அதேபோல் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றக் கட்டமைப்புக்கு மீண்டும் எமது நாட்டை ஊழல், மோசடி அற்றதாக மாற்றுவது தொடர்பிலான பணிக்காக அர்ப்பணிக்கும் என்று நம்புகிறோம். அரசியல் அதிகார தரப்பு என்ற வகையில் செயற்பாடுகள் வாயிலாக ஊழலை தடுக்கவும் மோசடியை தடுக்கவும் நாம் முன்மாதிரியாக செயற்படுவோம்.

ஆனால் அரசியல் தரப்பின் முன்னுதாரணமும் தலையீடும் மாத்திரம் போதுமானதல்ல. அதற்கான அரச நிறுவனங்கள் தம்மீதான பொறுப்புக்களை சரியாக புரிந்துகொண்டு அந்த மாற்றத்திற்கு தேவையான   உதவி, ஒத்துழைப்புக்களை எமக்கு வழங்குமாறு   கோருகிறேன். 

எந்தவொரு வலுவான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவும், வலுவான அடித்தளம் அவசியமாகும். எமது நாடும் தேசமும் அத்திவாரம் இழந்த நாடாகும். அடிப்படை இழந்த நாடாகும். அதனால் அதற்கான ஆரம்ப பிரவேசத்தை குறிப்பிடத்தக்க அளவு சாதகமாக நிறைவு செய்திருக்கிறோம்.  இந்த நாட்டை மீளமைப்பதற்கு தேவையான அத்திவாரம், அடித்தளத்தை அமைக்க வேண்டும்.

அரசியல் அதிகாரம், அரச பொறிமுறை, சட்டத்தின் ஆதிக்கம் என்பவற்றை போலவே அரசியலமைப்பிற்கு மதிப்பளித்தல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் ஊழல்,மோசடிகளை ஒழித்தல் என்பவற்றுக்கான இந்த அத்திவாரம் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல எமக்கு தேவைப்படுகிறது. நாம் மிகத் துரிதமாக திட்டமிடலின் அடிப்படையில் இந்த அத்திவாரத்தை கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறோம்.

எமது பிரஜைகளுக்காக கட்டியெழுப்பப்பட்டுள்ள அத்திவாரத்தின் அடிப்படையில் உருவாகின்ற பெரும் பொருளாதாரத்தின் பலன்கள் பரவலாக சென்றடைய வேண்டும். அதனால் எமது நாட்டில் எமது அரசாங்கத்தின் பிரதான வேலைத்திட்டங்கள் மூன்றும், பிரதான மூன்று நோக்கங்களை மையப்படுத்தி கொண்டுச் செல்லப்படுகிறது.

அதன் முதன்மை நோக்கமாக நாட்டையும் நாட்டு மக்களையும் வறுமையில் இருந்து மீட்க வேண்டும் என்பதே காணப்படுகிறது.

கிராமிய மக்கள் வரையில் பொருளாதாரத்தின் பலன்கள் கொண்டுச் செல்வதற்கு தேவையான பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்யும்போது, பொருளாதாரம் மிகச் சிறிய குழுவின் மீது குவிந்திருப்பது சமூகத்திற்குள் ஒருபோதும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவராது. பொருளாதாரம் ஒரு சிறிய குழுவிடம் குவிந்திருப்பது நாட்டிலும் மக்களிடமும் நிலையற்ற தன்மையை உருவாக்கும். எனவே, பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை  உருவாக வேண்டுமெனில் பொருளாதாரத்தின் பலன்கள் கிராமிய மக்கள் வரையில் சென்றடைய வேண்டும்.

எனவே, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தினை நமது நாட்டில் வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட திசையை நோக்கி நகர்த்தும் ஒரு பொருளாதாரத் வேலைத்திட்டத்தின் ஆரம்பமாக்குவதற்கு  நாங்கள் தயாராக உள்ளோம். எமது இரண்டாவது இலக்கு இந்த நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதாகும். செயல்திறனற்ற வீண் விரயத்தை குறைத்தல் மற்றும் ஊழல்,மோசடியை 

மட்டுப்படுத்தவும் பிரஜைகளுக்கு மிக இலகுவாக அரசாங்கத்துடன் இருக்கின்ற தொடர்பை தொடர்ச்சியாக பேணிக்கொள்ளவும் தேவையான அடித்தளத்தை டிஜிட்டல் மயமாக்கல் உருவாக்கும். 

எமது அடுத்த முக்கிய திட்டம் Clean Sri Lanka. இது சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்துவது தொடர்பிலானது மட்டுமல்ல. இது முழுமையாக சிதைந்து போயுள்ள சமூகக் கட்டமைப்பினால் அநாதரவான நிலையிலிருக்கும் எமது தாய்நாட்டை மீளமைப்பதற்காக அனைத்துத் துறைகளிலும் செய்யப்படும் தூய்மையாக்கலை காண்பதே எமது நோக்கமாகும்.

நான் சில விடயங்களை எடுத்துக்கூறுகிறேன். அது எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். குறிப்பாக நமது நாடு மிக அழகான சுற்றுச்சூழல் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. நமது நாடு மிக முக்கியமான அமைவிடத்தை கொண்டுள்ளது. அது மிக உயர்வான முக்கியத்துவமாகும். எந்தவொரு வெளிநாட்டவரை சந்தித்தாலும், உங்களுக்கு அழகான இலங்கை இருக்கிறது என்றே கூறுவர். 

ஆனால் இந்த இலங்கையில் இன்று  என்ன நடந்துள்ளது? சிறந்ததொரு சுற்றுச்சூழல் கட்டமைப்பு உள்ள நாட்டில் 2023ஆம் ஆண்டு யானை – மனித மோதலால் நூற்று எண்பத்திரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2023 ஆம் ஆண்டில் 484 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன. சிறந்த அழகியலுடன் கூடிய சுற்றுச்சூழல் கட்டமைப்பு இருந்தாலும் வருடத்திற்கு 484 யானைகள் இறக்கும் நாடாக இருக்கிறோம்.

யானைகளினால் 182 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல், வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பெருமளவானோர் இடப்பெயர்கின்றனர். உயிரிழப்பு, பெரும் பொருளாதார இழப்புகள் ஏற்படுத்துகின்றன.

எனவே, சுற்றுச்சூழல் கட்டமைப்பை மீளமைப்பதை Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் மிக முக்கியமான அங்கமாக கருத வேண்டும்.

நமது நாட்டுக்கும் நாட்டின் பிரஜைகளுக்கும் புதிய மதிப்புக்கள் மற்றும் புதிய நெறிமுறைகள் அவசியப்படுகின்றன. மிகத் தவறான விடயங்களை நாம் மதிப்பாக புரிந்து கொண்டுள்ளோம். இன்று இந்த சமுதாயத்திற்குள் ஒரு புதிய மதிப்பு கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். இதனை எங்கிருந்து ஆரம்பிப்பது?

முதலில், தமது வாழக்கை பற்றிய தமது மதிப்பு அவசியமாகிறது. நான் நினைக்கும் வகையில் எமது நாட்டில் பெரும்பாலான பிரஜைகளுக்கு தமது வாழ்க்கை தொடர்பில் மதிப்பு கிடையாது ஏன் அவ்வாறு சொல்கிறேன்? கடந்த வருடத்தில் ஐந்நூற்று தொண்ணூற்றைந்து பேர் கடலில் அல்லது நீர்த்தேக்கங்களில் அல்லது கிணற்றில் அல்லது குளத்தில் விழுந்து இறந்துள்ளனர்.

நீரில் மூழ்கி ஐந்நூற்று தொண்ணூற்றைந்து பேர் இறந்துள்ளனர் என்பதிலிருந்து என்ன தெரிகிறது? 2321 பேர் விபத்துக்களினால் இறந்துள்ளனர். நாளொன்றுக்கு ஏழு பேர் வாகன விபத்துக்களால் இறக்கும் நாடு 

உருவாகியுள்ளது. அதனால் வாழ்வின் மதிப்புக்களை பற்றி அறியாத சமுதாயம், பிறர் வாழ்வு குறித்து அக்கறை இல்லாத சமூகம் உருவாகியிருக்கிறது.

எனவே, இந்த சமூகத்தை  மீண்டும் குணப்படுத்த வேண்டும். இந்த சமூகத்தில் புதிய நெறிமுறையும்,புதிய மதிப்பு முறையும் உருவாக்கப்பட வேண்டும். எமது Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ், சமூகத்திற்கு ஒரு புதிய நெறிமுறைக் கட்டமைப்பையும், மதிப்புக் கட்டமைப்பையும் உருவாக்குவோம். வாகன விபத்துகளை குறைக்க வேண்டும். அதற்காக, நான் முதலில் சட்டத்தின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. மக்கள் மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். 

அதற்காக மக்களின் ஒத்துழைப்பும் தலையீடும் அவசியம். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் நாம் சட்டத்தை நடைமுறைப்படுத்த தயார். மிகவும் நெகிழ்வுத் தன்மையுடன் இந்த மாற்றத்தை ஏற்படுத்த நாம் தயார்.

நெகிழ்வுத் தன்மையுடன் இந்த திருப்புமுனையை ஏற்படுத்த எவரேனும் தடையாக நிற்கும் பட்சத்தில், இந்த சமூகத்தை மீண்டும் குணப்படுத்த கடுமையான முறையில் திருப்புமுனையை ஏற்படுத்தவும்  நாம் தயார்.

அதேபோல்,  எமது நாட்டின் பிரஜைகளுக்கு தாம் சந்தைகளில் கொள்வனவு செய்யும் உணவுப் பொருட்கள் குறித்து நம்பிக்கை உள்ளதா? அதனால் எமது நாட்டு பிரஜைகளுக்கு விசமற்ற உணவு வேளையை வழங்கும் பொறுப்பு நாடு என்ற வகையில் எமக்கு இருக்கிறது.

பொறுப்பை நிறைவேற்றுவதும் இந்த Clean Sri Lanka வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப் பட்டுள்ளது. மேலும், ஒரு சமூகத்தினால் நமது பிரஜைகள், நம் நாட்டின் அங்கவீனமுற்ற சமூகங்கள் என்பவற்றை  பராமரிக்க வேண்டும். இது சமூக நீதி தொடர்பான பிரச்சினையாகும். வயது முதிர்ந்தவர்கள் என்ற காரணத்தினால் அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க முடியுமா? அவர்கள் அங்கவீனமடைந்துள்ளதால் சமூகத்திற்கு பங்களிப்பவராக இல்லாமல் இருப்பதால் அவர்களை ஒதுக்கிவைக்க முடியுமா? அப்படிப்பட்ட சமுதாயம் ஒருபோதும்  நல்ல சமுதாயமாக மாறாது.

தங்களுக்கு அருகில் உள்ள மாற்றுத்திறனாளி சமூகம், தங்கள் அருகில் உள்ள முதியவர்கள், தங்கள் அருகில் இருக்கும் பெண்கள், இளைஞர்கள்  மீது இந்த சமூகத்திற்கு கருணை  இல்லையென்றால் அந்த சமூகம் குறித்து அன்போ அக்கறையோ,பராமரிப்போ  இல்லாவிட்டால் அந்த சமுதாயம் நல்ல சமுதாயமாக மாறாது. அந்தச் சமூகம் பிறரைப் பற்றி குறிப்பிடத்தக்க  அளவில் 

சிந்திக்காத குரூரமான மனப்பான்மையுள்ள சமூகம். எனவே, அந்த சமூகத்தில் புதிய மனப்பாங்கை உருவாக்க வேண்டும்.  

பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும். நம் நாட்டில் நீண்ட காலமாக, குடிமக்கள் மத்தியில் பொது சொத்துக்கள் தொடர்பில் சிறப்பான மனப்பாங்கு காணப்பட்டது. ஆனால் இன்று என்ன நடந்துள்ளது என்றால் தனது தனிப்பட்ட சொத்துக்களின் மீதுள்ள மதிப்பு தொடர்பான உணர்வு பொதுச் சொத்துக்களை பாதுகாப்பதில் இல்லை. 

அரசொன்றை உருவாக்குவதில் அதன் பொதுச் சொத்துக்கள் மீதான அனைவரினதும் தேவை பற்றிய உணர்வு உள்ளது.  அதனை தமக்காக மாத்திரம் பாதுகாப்பது கிடையாது.   இவை அனைத்தும் தற்காலத்தில் வாழும் நம் தலைமுறைக்காக 

மாத்திரமா? இவை யாவும் எமது தலைமுறையில் அழிந்து விடுமா? எதிர்கால சந்ததிக்காக இவற்றைப் பாதுகாப்பது தற்போதைய தலைமுறையின் பொறுப்பாகும். அதனால்   ‘’கிளீன் ஶ்ரீலங்கா’’ திட்டத்தில்  இதனை செயற்படுத்த தயாராக இருக்கிறோம்.  குறிப்பாக அரச இயந்திரம் மற்றும் அரசியல் அதிகாரத்தினை மிக விரைவான செயல்திறனுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதை நாம் அறிவோம்.

ஒவ்வொரு குடிமகனும் தனக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புக்கு பொறுப்புக் கூற வேண்டும். பொறுப்பை புறக்கணித்தால், ஒருவரின் பொறுப்பின் எடை சரிந்துவிடும்.

 எனவே, இந்தக் கட்டமைப்பு பல்வேறு அரச, அரசியல்,தனியார் துறை  என பல்வேறு கட்டமைப்புகளில் மீது கட்டமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பின் அங்கத்தவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றாவிட்டாலோ அல்லது அந்த பொறுப்பை கைவிட்டாலோ, அந்த பொறுப்பை புறக்கணித்தாலோ அது கட்டமைப்பிற்கே மிகவும் தீங்கு விளைவிக்கும் சூழ்நிலையை உருவாக்குகிறது. எனவே,  நீங்கள் உங்கள் பொறுப்பிற்கு பொறுப்புக் கூற தயாராகுமாறு குறிப்பாக அரச சேவையிடம் கோருகிறோம். அதற்கு இன்று பல முன்னுதாரணங்கள் உள்ளன.

இன்று, இலங்கையில் பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பு விடயத்திலும் மிக முக்கியமான பல துறைகளை நிர்வகிக்கும் நிறுவனங்களை எமது அரசாங்கம் கொண்டுள்ளது. அந்த நிறுவனங்களில் பெருமளவான நிறுவனங்களின் தலைவர்கள் தாமாக முன்வந்து தொண்டர் அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.

எயார் லங்காவின் தலைவரைப் போன்றே டெலிகாம் நிறுவனத்தின் தலைவர்,  போர்ட் சிட்டி நிறுவனத்தின் தலைவர், முதலீட்டுச் சபையின் தலைவர், எரிவாயு நிறுவனத்தின் தலைவர் போன்ற பல திறமையானவர்கள் மிகவும் தொழில்முறை திறன்களைக் கொண்டுள்ளவர்கள் தொண்டர்  அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.

அதே போன்று தனிப்பட்ட ரீதியில் நோக்கினால் எனது ஆலோசகர்கள் மூவரும்  அரசிடம் இருந்து ஒரு ரூபாய் கூட சம்பளம் பெறாமல் பணிபுரிகின்றனர். டிஜிட்டல் மயமாக்கலில் அனுபவம் உள்ள இலங்கையில் பிறந்த மிக சிரேஷ்ட நிபுணரான  அவர், தொண்டர் அடிப்படையில் பணியாற்றுகிறார். அறிவியல் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த அவர், அத்துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.அவர் தொண்டர் அடிப்படையில் பணியாற்றுகிறார்.

பொருளாதாரம் தொடர்பில் நிறைய நடைமுறை அனுபவங்களைக் கொண்டிருக்கும் அவர் தொண்டர் அடிப்படையில் பணியாற்றுகிறார். 

இவ்வாறான அரசியல் தான் நம் நாட்டுக்கு தேவை. இந்த நாட்டைக் கட்டியெழுப்ப, இதுபோன்ற புதிய அனுபவங்களைக் கொண்ட மாற்றம் வேண்டும். சம்பளம் பெறாமல் ஒரு மணி நேரம்   யாரும் வேலை செய்ய மாட்டார்கள் என்ற நிலையில் இந்த புதிய அனுபவம் காணப்படுகிறது.

ஆனால், அவர்கள் தங்கள் அறிவையும், நேரத்தையும், உழைப்பையும், உயர்ந்த  தொழில்களையும் விட்டுவிட்டு தொண்டர் அடிப்படையில் பணியாற்றத்  தொடங்கியுள்ளனர். ஒரு  சிறந்த முன்மாதிரி  நம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாம் எழுச்சி பெறுவதற்கு ஒரு  வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதைச் உங்களுக்கு சொல்கிறேன்.இதனை கடைசிச் சந்தர்ப்பம் என்று நான் ஒருபோதும் கூற 

மாட்டேன். மக்களுக்கு கடைசி சந்தர்ப்பம் என்று சந்தர்ப்பம் கிடையாது. மக்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. ஒரு தேசமாக ஒரு நாடாக எழுந்து நிற்பதற்கு  வாய்ப்பு இன்று கிடைத்துள்ளதாக நாம் நினைக்கிறோம். இந்த நாட்டின் பிரஜைகளிடம் நான் கேட்பது என்னவென்றால், இந்த வாய்ப்பை தவறவிடப்போகிறீர்களா?, இந்த வாய்ப்பை உறுதியாகப் புரிந்துகொண்டு, நம் நாட்டை முன்னேற்றத்திற்காக தங்கள் பங்கை ஆற்றத் தயாரா என்ற கேள்வியை உங்களிடம் கேட்கிறேன். இது வெறும் நாட்டின், அரசின் பொறுப்பு மட்டும்தானா? இது வெறும் அரசியல் நிகழ்ச்சி நிரலா? இல்லை இது ஒரு கூட்டு முயற்சி.

உலகின் பல்வேறு  நாடுகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சவால்களை எதிர்கொண்டுள்ளன. அதன் தொடக்கத்தில் இருந்தே சவால்கள் இல்லாமல்  பயணித்த எந்த ஒரு நாட்டையும் உலகில் கண்டு கொள்ள முடியும் என்று நான் நினைக்கவில்லை. உலகில் உள்ள ஒவ்வொரு  நாடும்  வெவ்வேறு  சந்தர்ப்பங்களில் சவால்களை எதிர்கொண்டுள்ளன. 

அந்நாட்டின் அரசியல் அதிகாரம், அரச இயந்திரம் மற்றும் பொது மக்கள் கூட்டாக எழுந்து அந்தச் சவால்களைச் சமாளித்து வெற்றி பெற்றுள்ளனர். எனவே நாம் நீண்ட வரலாற்றிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. கடந்த 20 ஆம் நூற்றாண்டை மட்டும் நாம் நினைத்துப் பார்த்தால், ஆசியாவில் அமைந்துள்ள ஏராளமான நாடுகள் இந்த கூட்டுச் செயற்பாட்டினால் எழுச்சி பெற்றுள்ளன.

ஆனால் நாம் என்ன செய்துள்ளோம்? சண்டையிட்டுக்கொண்டு, ஒருவருக்கொருவர் அவநம்பிக்கையை உருவாக்கி, இனவாத, மதவாத, மிக அசிங்கமான அரசியல் சூதாட்டத்தில் நமது பொதுச் சமூகத்தை புதைத்து , ஒருவருக்கொருவர் அவநம்பிக்கையையும், குரோதத்தையும், வெறுப்பையும் வளர்க்கும் ஆட்சியையே செய்துள்ளோம்.

மக்கள் ஒருபோதும் ஒன்றுபட்டு நிற்கத் தயாராக இல்லை என்றால், இந்தச் சவாலில் இருந்து எம்மால் மீள முடியாது. அதனாலேயே  எமக்கு எழுந்து நிற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அனைத்து பிரிவினைகளையும் முடிவுக்கு கொண்டு வர நாம் தயாராக உள்ளோம். நாம் ஒன்றாக இலங்கையில் பிறந்தவர்கள் என்ற வகையில் இந்த நாட்டை கட்டியெழுப்ப நாம் ஒன்றிணைய தயாராக உள்ளோம். எனவே, இந்தக் ‘’கிளீன் ஶ்ரீலங்கா’’ வேலைத்திட்டத்தை பொதுமக்களின்  செயலூக்கமான பங்களிப்புடன் மட்டுமே வெற்றிகொள்ள முடியும்.

இல்லையெனில், அரசாங்கத்தினாலும் அரசாங்கம் இயற்றும் சட்டங்களால்  மற்றும் அரசால் நியமிக்கப்படும் அதிகாரிகளால் மாத்திரம் இதனை முழுமைப்படுத்த முடியாது. இதற்காக அரசாங்க பொறிமுறை தேவை. அதற்காக பதினெட்டு பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளது. அனைவரும்  தொண்டர் அடிப்படையில் பணியாற்றுகிறார்கள் என்பதை

நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். மேலும் இந்த நோக்கத்திற்காக கிளீன் ஶ்ரீலங்கா செயலகத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். மேலும், கிராமம் வரை மக்களை ஒன்று திரட்டுவதற்காக  ‘’கிளீன் ஶ்ரீலங்கா ‘’சபைகளை உருவாக்க எதிர்பார்க்கிறோம்.

இந்த திட்டம் எப்போது முடிவடையும்? இது நிறைவடையும் திட்டமல்ல. இது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படும்  உலகின் புதிய நிலைமைகளுக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் தன்மை மாற்றிக் கொண்டு அரசை மாற்றியமைக்கும் ஒரு வேலைத்திட்டம். இது ஓரிரு வருட திட்டம் அல்ல. உலகம் வேகமாக மாறி வருகிறது. உலகம் பாரிய சாதனைகளை அடைந்து வருகிறது.

சமூக மனப்பாங்குகள், புதிய  பெறுமதிகள் மற்றும் புதிய மதிப்புக் கட்டமைப்புகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. அந்த விடயங்களையெல்லாம் உள்வாங்கிய புதிய இலங்கைத் தேசம் இந்த நாட்டில் கட்டியெழுப்பப்படுகிறது. கு றிப்பாக இந்த முயற்சிக்காக தனியான நிதியமொன்றை நிறுவுகிறோம். இந்நாட்டு குடிமக்கள் அந்த நிதியத்திற்கு பங்களிக்கலாம். நிதியமைச்சினால் மேற்பார்வை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

எனவே, இப்பணி நாம் கூட்டு முயற்சியுடன் வெற்றிகொள்ள வேண்டிய பணியாகும், அதற்காக அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறேன். இவற்றைச் சிறப்பாக நிறைவேற்ற முடியும். இந்த வருடம் இனிய வருடமாக அமைய வாழ்த்துகிறேன் என்றும் தெரிவித்தார்.

 “கிளீன் ஶ்ரீலங்கா” திட்டத்திற்காக இதன் போது  நன்கொடையாளர்கள் நிதி அன்பளிப்புச் செய்தனர்.

மகாசங்கத்தினர், மத குருமார்கள், அமைச்சர்கள், தூதுவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பல்வேறு துறைசார் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related posts

தப்பியோடிய சிறைக்கைதிகளை கைது செய்ய விசேட தேடுதல்

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

editor

பல்கலைக்கழக அனுமதி முடிவுகள் வெளியாகின