சூடான செய்திகள் 1

“தொழில் முனைவோருக்கான சர்வதேச மாநாடு 09ஆம் திகதி திருமலையில் ஆரம்பம்” – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு!

(UTV|COLOMBO)-ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச தொழில் முனைவோருக்கான கல்வித்தொடர் மாநாடு, இம்முறை முதல்தடவையாக இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில், ஒக்டோபர் 09 ஆம் திகதி
ஆரம்பமாகவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருமலையில் 9,10,11 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டின் இறுதி அமர்வு கொழும்பு, ஷங்கிரிலா ஹோட்டலில் நிறைவுறும் என அவர் தெரிவித்தார்.

யுனெஸ்கோ – எபீட் (UNESCO-APEID) நிறுவனமும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையும் (NEDA) இணைந்து ஏற்பாடு செய்துள்ள, இந்த சர்வதேச மாநாடு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கேட்போர்கூடத்தில் இன்று காலை (04) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் (NEDA) தலைவர் தக்சித்த போகொல்லாகம, யுனெஸ்கோ நிறுவனத்தின் அதிகாரி ஹிமாலி ஜினதாச ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு குறிப்பிட்டதாவது,

இலங்கையின் கல்வி முறைமையின் காரணமாக பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெற்றவர்களில் 16% சதவீதமானோர் மாத்திரமே பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகின்றனர். ஏனையவர்கள் பட்டங்களைப் பெற்றுவிட்டு, தொழில்தேடி அலைவது அன்றாடம் வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையைக் கருத்திற்கொண்டே எமது அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை, பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு தொழில்முனைவுக்கான பயிற்சியையும் வழங்கி, அவர்களை ஊக்குவிக்கும் வகையில், கற்கும் காலத்திலேயே சுயதொழிலை மேற்கொள்வதற்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சகல மாகாணங்களிலும் இந்த திட்டத்தை எமது அமைச்சு நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதன்மூலம் பயிற்சிகளை வழங்குதல், புதிய சந்தை வாய்ப்புக்களை தேடுதல், வியாபாரத் தொழிலில் தொழில்நுட்பத் துறையை உட்புகுத்தல் ஆகியவற்றை ஏற்படுத்த வேலையில்லாத இளைஞர்களுக்கு தொழிலை பெற்றுக்கொடுப்பதே அரசின் இலக்காகும்.

இந்தவகையில், இலங்கையின் தொழில்முனைவோருக்கான யுனெஸ்கோ–ஆசியா–பசுபிக் நிகழ்ச்சியின் புதுமைக் கல்வி மேம்பாட்டுக்கான மாநாடு எமது தொழில் முயற்சியாளர்களுக்கும், சிறிய முயற்சியாளர்களுக்கும் ஒரு மைல் கல்லாக அமைகின்றது.

யுனெஸ்கோவின் இந்த முன்னோடித் திட்டத்தில், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் (NEDA) பங்களிப்பு அபரிமிதமானது. இது எனது அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமாகும். எமது அரசாங்கமானது தொழில்முனைவோரை உலக சந்தையில் நெருக்கமான இணைப்பிற்காக செயற்படுகின்ற, பொருளாதாரத் துறையாக காணப்படுகின்ற நிலையில், எமது தொழில்முனைவோருக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கும் இந்த மாநாட்டின் அமர்வு ஒரு உந்துசக்தியாக அமையும் என நம்புகின்றேன்.

இலங்கையில் இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான தொழில்ரீதியான கல்வியை ஊக்குவிப்பதற்காக, இலங்கையின் புதிய பொருளாதார மூலோபாயத்துக்கான வழிகளை, இம்முன்னோடியான
அமர்வு நிறைவேற்றும் என நான் எதிர்ப்பார்க்கின்றேன்.

இந்த மாநாட்டில் 21 நாடுகள் பங்கேற்கின்றன. அத்துடன், ஏறக்குறைய 200 க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் மற்றும் சிறிய வர்த்தக தொழிலதிபர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியியலாளர்கள் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

-ஊடகப்பிரிவு-

 

 

 

Related posts

19 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்வு

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு